புலவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்வு…
“அடிமைப் பெண்’ படத்திற்கு சங்கக் கவிதையைப் போல் ஒரு மெல்லிய காதற்பாடல் வைக்கலாம்; புலவர் புலமைப்பித்தனை எழுதச் சொல்லலாம்” என்றாராம் எம்.ஜி.ஆர்.
அந்தப் பாடல்தான் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலின் சரணத்தில்
‘மன்னவனின் தோளிரண்டை
மங்கையெந்தன் கைதழுவ
கார்குழலும் பாய்விரிக்கும்
கண்சிவந்து வாய்வெளுக்கும்‘
– என்ற வரிகள் வரும்.
‘வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்க
தோயக் கலவி அமுது அளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ‘
என்று கலிங்கத்துப் பரணியில் வரும் வருணனைதான் அது என்றார்.
இந்தப் பாடலைப் படித்த எம்.ஜி.ஆர்., வரிகளின் அழகில் மயங்கி, புலவரின் விரல்களைப் பிடித்து
முத்தமிட்டு… ”மூன்றாவதாக இன்னொரு சரணம் எழுதுங்கள்; ஏதாவது நீர்நிலையில் வைத்துப் படம் பிடிக்கலாம்” என்றாராம். அதற்காக எழுதப்பட்ட வரிகள்தாம்
‘பொய்கை என்னும் நீர்மகளும்
பூவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின்
கைவிலக்க வேர்த்து நின்றாள்‘
என்பது.
எம்.ஜி.ஆருக்கும் புலவருக்குமான நட்பு உன்னதமானது.
– கவிஞர் பழநிபாரதி அந்திமழை இதழில் எழுதிய கட்டுரை.
நன்றி : அந்திமழை