தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

– சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மற்றும் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இடியுடன் மழை தொடரும்” எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. அடையாறு, மந்தைவெளி, வடபழனி, தி. நகர், அண்ணா நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாம்பரம், குன்றத்தூர், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

You might also like