தியேட்டரில் அதிக விலையில் குடிநீர்: தீர்வு?

சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், “தியேட்டர்களுக்குள் குடிநீர், உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை.

அங்கே விற்கப்படும் குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள், குடிநீரைத் தான் வாங்க வேண்டும் என்ற நிலை உள்ளது. அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் 30 ரூபாய்; குளிர்பானங்கள் எல்லாம் குறைந்தது 65 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட சந்தை விலையை விட, அதிக விலைக்கு உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும். தியேட்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், “பாதுகாப்பு காரணங்களுக்காக, தியேட்டர்களுக்குள் தண்ணீர் எடுத்துச் செல்ல பார்வையாளர்களுக்குத் தடை விதித்தால், சுத்தமான குடிநீரை வழங்க நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவ்வாறு வழங்கவில்லை என்றால், சேவை குறைபாட்டுக்காக தியேட்டர் நிர்வாகங்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில், அவ்வப்போது திடீர் சோதனைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

பொதுத் தளங்களில், தியேட்டர்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் வருகின்றன.

புகார்களின் உண்மைத் தன்மை குறித்து, திடீர் ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தியேட்டர்களில் சுத்தமான குடிநீர் வசதி உள்ளதா, கழிப்பறை வசதி உள்ளதா என்பதை உறுதி செய்ய, அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

பொதுமக்கள் அளிக்கும் புகார்களை விசாரித்து, நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

You might also like