அலை கடலுக்கு அப்பால் வந்த அந்த நினைவு!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர். தொடர் 46

இயக்குனர் கே.சுப்பிரமணியம் அவர்கள் இந்தத் தோட்டத்துக் குடும்பத்தில் மிக நெருக்கமான பிடிப்பு உள்ளவர். எங்களுக்கெல்லாம் தந்தையாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர் பழம்பெரும் இயக்குநர் கே.சுப்பிரமணியம்.

அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்திருந்தாலும் எங்கள் குடும்பங்களுக்குள் ஒரு சகோதர, சகோதரி பாசம் இன்றளவும் இழையோடுகிறது.

இந்தத் தோட்டத்து நாயகருக்கு உடல்நலம் குறைவான பிறகு ஒருநாள் பழம்பெரும் நடிகையும் இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களின் துணைவியரில் ஒருவருமான எஸ்.டி.சுப்புலட்சுமி மரணமடைந்தார்.

அந்த இடத்திற்கு உடனே விரைந்து செல்ல வேண்டுமென்று அன்பு நாயகர் துடித்த துடிப்பு எனக்குத்தான் தெரியும்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பக்கத்தில் நின்றிருந்த அவரது மகன் அபஸ்வரம் ராம்ஜிக்கு ஆறுதல் சொன்னாலும் அவரையும் மீறிய துக்கத்தை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டு அங்கிருந்து திரும்பினார்.

ஆனால்… அடுத்த நாளே இன்னொரு இடி இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மனைவி மீனாட்சி அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதுதான் அது.

அவரது வீட்டிலிருந்து இவரது உடல்நலம் கருதி, “தாங்கள் வர வேண்டாம்” என்று சொல்லி தகவலைத் தெரிவித்தபோதும், செய்தி கிடைத்த அடுத்த நொடி தன் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் அங்கே விரைந்தார் எனது அன்பு நாயகர்.

அங்கு துயரம் நிறைந்த அந்த வீட்டில் இவர் சொன்னது இதுதான்.

“உங்களுக்கு எப்படி தாயோ அதுபோலத்தான் எனக்கும்! தாய் இறந்த செய்தி கேட்டு பார்க்கப் போகிறோம்? அதனால்தான் உங்கள் வாத்தைகளை மீறி இங்கே ஓடோடி வந்தேன்” என்றார்.

இது அவர்கள் குடும்பத்திற்கு பெரிய ஆறுதலான விஷயமாக அப்போது தோன்றினாலும், எங்களது சொந்தத் துயரமாகவே அவரும் நானும் அதைக் கருதினோம்.

அந்தக் குடும்பத்தில் அதுவும், இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களின் செல்ல மகள்தான், இன்று பார் புகழும் பத்மா சுப்பிரமணியம் என்பது உங்களில் அநேகருக்குத் தெரியும்.

இவருக்குத்தான் அனைத்திந்திய காவல்துறை விழாவில் வெளி மாநிலத்திலிருந்து வந்த ஒருவர் தந்த குலலாவை தலையில் வைத்து ஒரு அழுத்து அழுத்தி,

“என் சகோதரி என்பதற்கு அடையாளமாக இதோ உனக்கும் குல்லாவை அணிவித்து விட்டேன்” என்று கூறி வாய் விட்டுச் சிரித்தார் என் அன்பு நாயகர்.

இதை முன்பே ஒருமுறை நான் குறிப்பிட்டு இருந்ததும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

என் அன்பு நாயகரோடு அமெரிக்கா சென்றிருந்தபோது எனது சகோதரர் மகள் ஜானகி வீட்டில் நானும் அவரும் கொஞ்சநாள் இருந்தோம்.

ஜானகியின் குழந்தைக்குப் பெயர் சூட்டி, தன் கையால் பால் உணவும் ஊட்டி பாசமழை பொழிந்து, அங்கிருந்து இந்தியா புறப்பட்டார். அப்போது அவருக்குப் பேச முடியாத மகிழ்ச்சி.

குழந்தையைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்கிறார். அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

”எத்தனை முறைதான் அவர் விளக்குவார்?”

“சேச்சா, முக பாவத்தினால் கொஞ்சம் சொல்லுங்களேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டாள் எனது சகோதரரின் மகள் ஜானகி.

“முக பாவத்தினால் பேச நான் என்ன பத்மா சுப்பிரமணியமா? நடிகர் திலகமா?” என்று சொன்னார் என் அன்பு நாயகர்.

இது மட்டும் எல்லோருக்கும் தெளிவாக புரிந்தது.

அந்த அமெரிக்க மண்ணில் பல்லாயிரம் மையில்களுக்கு அப்பால் தனது சகோதரர் நடிகர் திலகத்தைப் பற்றியும், சகோதரி பத்மா சுப்பிரமணியத்தைப் பற்றியும் முக பாவம் என்றதும் நினைக்கத் தோன்றியது என்றால் கலையை இவர் தன் கண்களாய் கவனித்தார் என்பதற்கு இதைவிட வேறு ஒரு சான்று சொல்ல முடியுமா?

– 12.02.1989

You might also like