மழை பெய்யாதா என்று ஏங்குவோம். அதற்காக யாகங்கள் பண்ணுவோம். கோவில்களில் பிரார்த்தனையும் செய்வோம்.
அதேசமயம் மழை பெய்தால் விழுகின்ற மழைநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளத் தடுமாறுவோம். மழைக் காலத்தில் பரவும் நோய்கள் குறித்த கவனம் அற்றும் இருப்போம்.
இப்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து சற்று இடைவெளி விட்டிருக்கிறது. அதற்குள் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவிப் பலர் அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மர்மக் காய்ச்சலும் கூடவே பரவுவதாகச் சொல்கின்றன நமது ஊடகங்கள்.
இதில் முதலில் பாதிக்கப்படுவது இளம் குழந்தைகள் தான். அவர்களைத் தான் நோய் முதலில் தாக்குகிறது.
பகலில் கடிக்கிற கொசுக்கள் மூலம் டெங்கு பரவுவதாகச் சொல்லப்பட்டாலும், மழை பெய்தபிறகு அங்கங்கே தேங்கி நிற்கும் மழை நீர் சுலபமாக நோய்த் தொற்றையும் உருவாக்கிவிடுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் இதே மாதிரியான மழைக் காலத்தில் ‘லெப்டோஸ்பைராசிஸ்’ என்றழைக்கப்படும் எலிக்காய்ச்சல் பரவி சென்னை நகரிலேயே சில நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள்.
ஆனால் அப்போது அரசு தரப்பிலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், நோய்க்காரணத்தையும் தெரிவிக்காமல் மறைத்ததும் நடந்தது.
தற்போது அப்படியல்ல. நோயின் பாதிப்பு பற்றிய தகவல்கள் வெளிவருகின்றன. அதே சமயம் ‘மர்மக்காய்ச்சல்’ பற்றியும் தகவல்கள் வருகின்றன.
போதுமான அளவுக்குத் தடுப்பூசி மருந்துகள் கைவசம் இருந்தும், பொதுமக்களில் பலர் அதை உணராமலும், போட்டுக் கொள்ளாமலும் இருக்கிறார்கள் என்கிற புகார்கள் மருத்துவர்கள் மத்தியில் இருக்கிறது.
சென்னை மாதிரியான பெருநகரங்களில் கொசுவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. இனியும் மழை பெய்யும் தருணங்களில் தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்பும் கூடுதலாக இருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் மழைக்காலத் தொற்றுநோய்களும், அதை எதிர்கொள்வதற்கான தடுப்பூசிகள் அல்லது சித்த வைத்தியம் சார்ந்த நிலவேம்புக்குடிநீர் அல்லது பப்பாளி இலைச் சாறு போன்றவற்றை பயன்படுத்துவதைப் பற்றிய தகவலும் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும்.
நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் முன்பு நோய்க்கான மூல காரணங்களைச் சரி செய்து தடுக்க வேண்டியது அவசியம்.
முக்கியமாக பரவும் நோய்களால் உயிரிழப்புகள் நேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.