சுவாதி வழக்கு: எத்தனை திருப்பங்கள்?

ஐந்து ஆண்டுகளுக்கு முன் காலை நேரம். 2016 ஜூன் 24 ஆம் தேதி.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் பல பயணிகள் நடமாடிக்கொண்டிருந்த நிலையில், தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார் சுவாதி.

அந்த ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராக்கள் தான் இயங்கவில்லை. அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் என்ன ஆனார்கள்?

பல செய்திகளும், வதந்திகளும் வெளிவந்தன. ஊடகங்களுக்கு  ஒரு மாதத் தீனி கிடைத்தது. அதற்குப் பிறகு திடீரென்று ராம்குமார் என்கிற இளைஞரைக் கைது செய்து அழைத்து வந்தார்கள். எந்த ஊடகங்களிலும் அந்த இளைஞரைப் பேசவிடவில்லை.

ஒரு தலைக் காதல் என்று காரணம் சொன்னார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரைச் சந்தித்துவிட்டு வந்த வழக்கறிஞர் வெளியில் சொன்ன செய்திகள் மாறுபட்டிருந்தன.

ஏன் இத்தனை குளறுபடிகள் என்று யோசிப்பதற்குள் சிறைக்குள் மர்மமான முறையில் 2016 செப்டம்பர் 18 ஆம் தேதி இறந்து போனார் ராம்குமார் என்ற அந்த இளைஞர்.

விசாரணையின் போது சிறையில் உள்ள மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக ’ஷாக்’ அடிக்கும் காரணத்தைச் சொன்னார்கள் சிறை அதிகாரிகள்.

அப்போது ‘போஸ்ட் மார்ட்டம்’ பண்ணப்பட்டும் வராத தகவல்கள் இப்போது கசிந்திருக்கின்றன.

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் முன்பு ஆஜரான மருத்துவர்கள், உயிரிழந்த ராம்குமாரின் உடலில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான ஆதாரம் இல்லை என்று திசுக்களை ஆய்வு செய்து சொல்லியிருக்கிறார்கள்.

வழக்கு விசாரணையில் உள்ள முரண்பாடுகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் வழக்கறிஞரான ராம்ராஜ்.

சிறப்புக் குழு அமைத்து ராம்குமார் மரண வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டும் என்றிருக்கிறார் தடயவியல் நிபுணரான சம்பத்குமார்.

உயிரிழந்த ராம்குமாரின் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்?

உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

சுவாதி என்ற பெண்ணின் கொலையும், தற்கொலை என்று சொல்லப்பட்ட ராம்குமார் என்ற இளைஞனின் உயிரிழப்பும் உண்மையில் எப்படி நடந்திருக்கிறது?

எப்படி ராம்குமார் சிறை வளாகத்திற்குள்ளேயே உயிரிழந்தார்? பின்னிருந்து இவ்வளவையும் இயக்கியவர்கள் யார்? ஏன் இத்தனை மர்மங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன?

கேள்விகளை உயிரோடு வைத்திருக்கிறது நிகழ்காலம்.

– லியோ

You might also like