அருண் சுவாமிநாதனின் எங்கள் எம்.ஜி.ஆர் தொடர் – 29
திரையில் தொடங்கி அரசியல் களம் வரை எம்.ஜி.ஆர். உடனேயே அவரது பர்சனல் போட்டோகிராபராக இருந்தவர் நாகராஜ ராவ். அவரது அசிஸ்டென்டாக இருந்த அவரது மருமகன் சங்கர் ராவ் கிட்டத்தட்ட 37 எம்.ஜி.ஆர். படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
எம்.ஜி.ஆருடன் சண்டை போட்டதில் தொடங்கி, அவருடன் ஏற்பட்ட பல மறக்க முடியாத சம்பவங்களை இந்த வாரமும் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார் சங்கர் ராவ்.
‘தனிப்பிறவி’ ஷூட்டிங் முடியும் வரை நான் எம்.ஜி.ஆருடன் பேசவில்லை. அவரை நேருக்கு நேராக சந்திப்பதையே தவிர்த்து வந்தேன். அவர் செட்டுக்குள் வந்தால் நான் வெளியே போய்விடுவேன்.
இப்படியே அந்தப் படப்பிடிப்பு முழுவதும் போனது. அந்தப் படம் முடிந்து வேறு சில படங்களும் வேலை பார்த்தேன். அப்போதும் அவரிடம் நெருங்கி செல்ல மாட்டேன். பேசுவதை தவிர்த்து விடுவேன்.
இப்படியே போய்க் கொண்டிருந்தபோது ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தின் 100வது நாள் விழா சென்னை ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்தது.
அந்த நேரத்தில் என்னுடைய மாமா நாகராஜ ராவ் பம்பாயில் ஒரு படப்பிடிப்புக்காக போய்விட்டார். முதல் நாள் இரவு ட்ரங்கால் போட்டு, ‘நாளைக்கு ஃபங்ஷனுக்கு போய் என் சார்பில் நீ தாண்டா ஷீல்டு வாங்கிட்டு வரணும்’ என்றார்.
எனக்கு இக்கட்டான நிலைமை ஆகிவிட்டது. முடியாது என்று மாமாவிடம் சொல்ல முடியவில்லை. போனால் எம்.ஜி.ஆரை நேருக்கு நேராக சந்திக்க வேண்டி வரும். என்ன செய்வது என்று யோசிக்க கூட எனக்கு நேரமில்லை.
“சரி போறேன்” என்று அப்போதைக்கு மாமாவிடம் சொல்லிவிட்டேன். ராத்திரி முழுவதும் தூக்கமில்லாமல் அதே சிந்தனையாக இருந்தது.
அடுத்த நாள் ஏ.வி.எம். ராஜேஸ்வரி மண்டபத்திற்குச் சென்றுவிட்டேன். படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து அண்ணாதுரை கையால் ஷீல்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அருகில் எம்.ஜி.ஆரும் அமர்ந்திருந்தார்.
கழுத்தில் சுடப்பட்டு சிகிச்சைக்கு பின் அவர் மீண்டு வந்திருந்த நேரம் அது. அவரால் அப்போது சரியாக பேசவே முடியாது.
ஸ்டில்ஸ் நாகராஜராவ் என்று மைக்கில் அறிவிப்பு வந்தது. மாமா சார்பாக நான் எழுந்து மேடைக்குச் சென்றேன். அந்த நிமிடங்களை விவரிக்க இப்போதும் எனக்கு வார்த்தைகள் இல்லை.
எம்.ஜி.ஆரை எப்படி எதிர்கொள்வது? அவர் என்ன கேட்பார்? அவரிடம் பேசலாமா வேண்டாமா என்றெல்லாம் எனக்குள் ஆயிரம் கேள்விகள்.
விறுவிறுவென மேடை ஏறினேன். அண்ணாதுரை கேடயத்தை கொடுக்கும்போது, “என்ன சங்கர், மாமா வர்லியா?” என்று கேட்டார்.
“அவர் ஊர்ல இல்ல” என்று சொல்லிவிட்டு ஷீல்டை பெற்றுக்கொண்டு திரும்பும்போது, “சங்கர்…” என்று பின்னால் இருந்து ஹஸ்கியான குரல். திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர்.
இங்க வா… என்று கைநீட்டி கூப்பிட்டார்.
அருகில் சென்றேன்.
“என்ன சங்கர்… நல்லா இருக்கியா?” என்று பேச முடியாமல் மிகுந்த சிரமத்துடன் மெலிதான கரகரப்பு குரலில் கேட்டார் எம்.ஜி.ஆர்.
என்னையறியாமல் மேடையிலேயே கதறி அழுதுவிட்டேன்.
“சங்கர்… நாளைக்கு காலையில ‘சங்கமம்’ ஷூட்டிங்க்கு நீ தான் வரணும்” என்றார்.
‘சங்கமம்’ படம் தான் பின்னால் பெயர் மாற்றப்பட்டு ‘குடியிருந்த கோயில்’ ஆனது. அடுத்த நாள் சத்யா ஸ்டூடியோவில் ‘சங்கமம்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றேன்.
“உன் விழியும்… என் வாளும் சந்தித்தால்…” பாடல் அன்று படமானது. ஜே… ஜே… என்று கூட்டம். எம்.ஜி.ஆர். வந்தவுடன் அவருக்கு ஆளுயர மாலையை அணிவித்தார் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.
கூட்டத்தைச் சுற்றும் முற்றும் பார்த்தவர், “சங்கர் எங்கே?” என்று கேட்டதும், டைரக்டர் சங்கர் வந்து நின்றார்.
“இல்ல ஸ்டில்ஸ் சங்கரை கேட்டேன்” என்றதும், நான் முன்னால் போய் நின்றேன்.
அவர் கழுத்தில் இருந்த மாலையை என் கழுத்தில் போட்டார்.
“இன்னைக்கு என் கூடத்தான் நீ சாப்பிடணும்” என்றார். அந்த ஷெட்யூல் முழுவதும் நான் அவருடன் தான் மதிய உணவு சாப்பிட்டேன்.
25 பேர் சாப்பிடும் அளவுக்கு அவர் வீட்டில் இருந்து தினமும் சாப்பாடு வந்துவிடும். காடை, கௌதாரி, சிக்கன், மட்டன், சுறா புட்டு, கருவாடு என்று மதிய உணவில் அவருக்கு ஏழெட்டு ஐட்டங்கள் இருக்க வேண்டும்.
உள்ளூரில் இருக்கும் பட்சத்தில் எங்கே ஷூட்டிங் இருந்தாலும், சாப்பிடுவதற்கு எம்.ஜி.ஆர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார் அசோகன்.
நிறைய சாதம் போட்டுக் கொண்டு குழம்பை ஊற்றி அவர் பிசைந்து சாப்பிடும் அழகை ரசித்துப் பார்ப்பார் எம்.ஜி.ஆர்.’’ என்று சொன்ன சங்கர் ராவின் உடல்நிலை ஒருமுறை பாதிக்கப்பட்ட போது எம்.ஜி.ஆர். காட்டிய அக்கறையை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
“சத்யா ஸ்டூடியோவில் ‘நினைத்ததை முடிப்பவன்’ ஷூட்டிங். ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் பாட்டு’ படமாகிக் கொண்டிருந்தது. ஏராளமான கூட்டம்.
எனக்கு அப்போது இடுப்பில் கடுமையான வலி. நிற்கக்கூட முடியவில்லை. எப்படியோ சமாளித்து வேலை செய்து கொண்டிருந்தேன்.
கேமராவை கழுத்தில் மாட்டிக் கொண்டு அவ்வப்போது நான் இடுப்பை பிடித்தபடி நின்று கொண்டிருப்பேன்.
மூன்றாவது நாள் லஞ்ச் ப்ரேக்கின் போது, எம்.ஜி.ஆரின் உதவியாளர் சபாபதி வந்து “அண்ணன் உங்களை மேக்கப் ரூமுக்கு கூப்பிடுறார்” என்றார்.
நான் போனதும், “ஏன் செட்ல இடுப்பை பிடிச்சிக்கிட்டே நிக்கிற” என்றார்.
“ரொம்ப வலிக்குது” என்றேன்.
“டாக்டரிடம் போனியா?” என்று அவர் கேட்டதற்கு “இல்லை” என்றதும், “சரி… சாப்பாடு வர லேட்டாகும். நான் டாக்டரை வரச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, அவரது பர்சனல் டாக்டர் பி.ஆர்.எஸ். அவர்களை உடனடியாக வரவழைத்தார்.
பக்கத்து அறையில் வைத்து என்னைப் பரிசோதித்தார் டாக்டர்.
சிறிது நேரம் கழித்து என்னை அழைத்த எம்.ஜி.ஆர். “சங்கர்… நாளை மறுநாள் உனக்கு ஆபரேஷன்” என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது’’.
(சரித்திரம் தொடரும்…)