போஷன் சக்தி நிர்மாண்.
இப்படித்தான் சொல்கிறார்கள் ஒன்றிய அரசு நாடு முழுவதும் இருக்கிற அரசுப் பள்ளிகளில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை.
ஏறத்தாழ 12 கோடி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கிற மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துத் திட்டத்திற்கு 1.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாராகி ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றிருக்கிறது.
ஒன்றிய, மாநில அரசுகளின் நிதிப்பங்களிப்போடு நிறைவேற்றப்பட இருக்கும் இத்திட்டத்தால் 11 லட்சத்து 20 ஆயிரம் பள்ளிகளில் படிக்கிற 11 கோடியே 80 லட்சம் குழந்தைகள் பலன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதைத் தேசிய அளவில் வரவேற்கலாம் தான்.
ஆனால் சமூக நீதி உணர்வை விதைத்திருக்கிற தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பள்ளி மாணவர்களுக்குப் பசியாற்றும் திட்டங்கள் துவங்கிவிட்டன.
விருதுநகரில் காமராஜர் படித்தது அங்குள்ள ஷத்திரிய வித்தியாசாலை பள்ளியில்.
பிடி அரிசி மகிமை என்று ஊர் மக்கள் அனைவருடைய ஒத்துழைப்போடு நடந்த பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் தான் காமராஜரை யோசிக்க வைத்திருக்கிறது.
அவர் தமிழக முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் அமலாக ஒரு காரணமாக அவர் படித்த பள்ளி தான் இருந்தது.
தென் தமிழ்நாட்டில் இம்மாதிரியான முயற்சிகளைப் பல தனியார் பள்ளிகளும் முன்னெடுத்துச் செயல்படுத்தியிருக்கின்றன.
1901 வாக்கில் மதுரையில் சௌராஷ்டிரா சமூகத்தினர் நடத்திய பள்ளியில் மாணவர்களைப் படிக்க வருமாறு அழைத்து மாட்டு வண்டிகளில் அவர்களை அழைத்து வந்து, மதிய உணவும் வழங்கியிருக்கிறார்கள்.
சிறு வயதிலேயே வேலைக்குச் செல்வதை விட்டு, உணவுக்கான குறைந்த பட்ச உத்திரவாதம் அளிக்கப்பட்டதால், மாணவர்கள் பலர் கல்வி கற்க முன்வந்தார்கள்.
கும்பகோணத்தில் தான் படித்த யானையடி பள்ளியில் படிக்கும்போது, பசியின் கொடுமையை உணர்ந்த காரணத்தாலேயே தான் முதல்வராகப் பொறுப்பேற்றதும் தமிழகம் முழுக்க இருக்கும் பள்ளிகளில் சத்துணவு என்ற பெயரில் பரவலாக்கினார் எம்.ஜி.ஆர்.
இன்றும் சத்துணவுத் திட்டம் என்றால் எம்.ஜி.ஆரின் பெயர் நினைவுக்கு வரும் அளவுக்கு அத்திட்டத்தை மேம்படுத்தினார்.
ஏகப்பட்ட மாணவ, மாணவியர்கள் அதனாலேயே கூடுதலாகப் பள்ளிகளில் கல்வி கற்க வந்திருப்பதைப் பள்ளிக்கல்வித்துறை ரிக்கார்டுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஜெயலலிதா அ.தி.மு.க.வுக்குள் நுழைந்தபோது, அவருக்குச் சத்துணவுத்திட்டத் தலைவர் பொறுப்பைக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.
தி.மு.க ஆட்சிக்காலத்தில் சத்துணவு முட்டையுடன் சேர்ந்து மேலும் செழுமைப் பட்டதெல்லாம் பலரும் அறிந்த ஒன்று தான்.
அதே திட்டம் தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டு பள்ளி மாணவ, மாணவியர்க்குக் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான வேலைகளும் துவக்கம் பெற்றிருக்கின்றன.
ஒப்பீட்டளவில் இந்திய அளவில் தமிழ்நாட்டின் கல்விக்கூடங்களின் பெருக்கமும், கல்வித்தரமும் அதிகரித்ததற்குச் சத்துணவு முக்கியமான காரணம்,
அந்த விதை தான் வேர் விட்டுத் தற்போது தேசிய அளவிலும் கிளைவிட்டிருக்கிறது.
கோடிக்கணக்கான பள்ளிக்குழந்தைகள் பசியாறுவதற்கான மூல விதையை விதைத்த நெஞ்சங்களுக்கு இத் தருணத்தில் நன்றி சொல்வோம்.
– யூகி