உங்கள் உடம்பு உங்களுக்கு நண்பனா?

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ தனியார் தொலைக்காட்சி விவாதத் தலைப்பு என்று நினைத்துவிடக் கூடாது.

இதை வாசிக்கிறவர்கள் இந்தக் கேள்வியை வேறு யாருடனும் அல்ல, அவரவர் மனதிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அதிலும் கொரோனா பீதிகள் இன்னும் அடங்காத நேரத்தில் இந்தக் கேள்வி இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்த்தேன்… உயிர் வளர்த்தேனே’’ – என்கிறது திருமந்திரம்.

திருமந்திரத்தைச் சொன்னவுடன் அப்படியே நகர்ந்துவிட வேண்டாம்.

விஷயம் இருக்கிறது. தொடருங்கள்.

கொரோனாவால் கொத்தாகப் பல உயிர்கள் நமக்கு முன்னால் பறிபோய்க் கொண்டிருக்கையில் “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்’’ என்கிற எளிமையான பதம் நன்றாகவே புரிபடும்.

எவ்வளவு வசதிகள், அதிகாரங்கள், சாதிய உயரங்கள் எல்லாவற்றையும் தாண்டி கொரோனா தொற்றிப் பரவிக் கொண்டிருக்கிறது. பலவீனமானவர்களின் உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

“வலுவுடையது வாழும்’’ என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது கொரோனா காலத்து யதார்த்தம்.

உடம்பை நாம் வலுவாக வைத்துக் கொண்டிருக்கிறோமா?

கண்ணாடிக்கு முன் நிற்கிற போது, எதிரில் உள்ள பிம்பத்தில் முகத்தை ஒழுங்குபடுத்துவதில் காட்டுகிற அக்கறையை, உடம்பின் மேல் காட்டியிருக்கிறோமா?

பிறப்பிலிருந்து நம்மை அடையாளப்படுத்தி, ‘நான்’ என்பதைச் சுமக்க வைக்கிற உங்களுடைய உடம்பின் மீது உங்களுக்கு எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதை அந்தரங்க சுத்தியோடு சொல்லுங்கள், பார்ப்போம்.

பல நகரங்களில் விடிந்தும் விடியாத இருள் சரிவர விலகாத நேரத்திலேயே மேலாடை வியர்வையில் நனைய – நடைப்பயிற்சி மேற்கொள்கிறவர்களை, மெதுவான ஓட்டம் ஓடுகிறவர்களைப் பார்த்திருக்கிறோம்.

திறந்த வெளியில் உடற்பயிற்சிகள் செய்வதை கடற்கரைப் பகுதிகளில் பார்த்திருக்கிறோம். உடலை வளைத்து யோகாசனங்கள் செய்வதை போகிற போக்கில் பார்த்திருக்கிறோம்.

உடற்பயிற்சிக் கூடங்களில் தங்கள் உடலுக்குப் பயிற்சி கொடுத்து வியர்த்து வெளியே வருகிறவர்களைக் கண்டிருக்கிறோம்.

இயல்பாக உடம்பால் கடுமையாக உழைக்கும் மக்களையும் பார்க்கிறோம்.

இவர்கள் எல்லோருமே உடம்பை ஏதோ ஒருவிதத்தில் இயக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

அவரவர் உண்ணும் உணவுக்கேற்றபடி பெறப்படும் சக்தி உடலுக்குத் தரும் பயிற்சியால் அல்லது உழைப்பால் கரைந்து உடலைச் சமநிலையில் வைத்திருக்கிறது.

இப்படிப் பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் தான். உடல் உழைப்பு மேற்கொள்கிறவர்களும் இயல்பாக உடலை தங்கள் தேவைக்கு ஏற்ப கேட்கிறபடி பெரும்பாலும் வைத்திருக்கிறார்கள்.

மலைவாழ் மக்கள் காடுகளுக்குள் விடியும் பொழுதில் உள்ளே நுழைகிறவர்கள் தேடிப்போகிற தேனையோ, கிழங்கையோ எடுத்துவிட்டு வெளிச்சம் மங்குவதற்குள் திரும்பிவிடுவார்கள்.

அவர்களுக்கு உடலில் ஏதாவது பிரச்சினை என்றாலும், பாரம்பரியமாக அவர்களுக்குச் சொல்லித்தரப்பட்ட மரபை முன்வைத்துச் சில மூலிகைகள், சில செடிகளைத் தேடித் தங்களைச் சரிப்படுத்திக் கொள்வார்கள்.

நோய்த் தடுப்புத் திறன் அவர்களுடைய மரபணுவுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.

கிராமங்களிலும் அதே விதமான சித்த வைத்திய மரபு எந்தையும், தாயுமானவர்களுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருக்கிறது. நோய் வருவதற்கு முன்பே தடுக்கும் உணவு முறைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. மீறி ஏதாவது பிரச்சினை வந்தால், அதை எளிய முறையில் எப்படி எதிர்கொள்வது என்பதைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

ஆங்கிலேய ஆட்சி வந்தபிறகு அவர்கள் நம்மை விட்டுப் போனாலும், அவர்கள் மூலமாக நமக்கு அறிமுகமான அலோபதி வைத்திய முறையே நவீனமானதாகவும், காலத்தின் தேவை சார்ந்ததாகவும் கருதப்பட்டது.

நம்முடைய மரபு வழி வந்த சித்த வைத்திய முறை பின்னுக்குத் தள்ளப்பட்டது. பல தலைமுறையாக நம்மைத் தொடர்ந்து வந்த மருத்துவ மரபிலிருந்து நம்மைத் துண்டித்துக் கொண்டோம்.

சரி.. தற்போதைய நிலைக்கு வருவோம்.

ஒவ்வொரு வேலையையும் உடம்பைக் கஷ்டப்படுத்தாமல், எப்படி இலகுவாகச் செய்ய முடியுமோ, அப்படிச் செய்ய நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

மிக அருகில் உள்ள தெருவுக்குக் கூட வாகனங்களில் தான் செல்கிறோம். படியேறுவதற்குச் சிரமப்படுகிறோம். உடம்பைப் பொத்திப் பொத்தி ஊதுகிற அளவுக்கு வளர்த்துப் பல நோய்கள் சுலபமாகத் தாக்குகிற அளவுக்குக் கொண்டு போகிறோம்.

வீட்டில் சாதாரண வேலைகளைச் செய்யத் தயங்குகிற அல்லது நாகரீகம் கருதி மறுக்கிறவர்கள் ஜிம்களில் போய் நடைப்பயிற்சி செய்கிறோம். எப்போதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மிகுந்த முன்னெச்சரிக்கையான விலகலோடு, பார்த்துப் பார்த்து ‘ஹைஜீனிக்’கா என்று பரிசோதித்துச் சாப்பிட்டவர்கள் சிறு வியாதிக்கு முன்னால் குறுகிப் போய் விடுகிறோம்.

வசதியான, அதிகார மிக்க வி.ஐ.பி. அவர். வெளியில் எலிக்காய்ச்சல் பரவி பலர் உயிரிழந்து கொண்டிருந்தபோது, அவருக்கும் எலிக்காய்ச்சல் தொற்று. பலரும் குழம்பிப் போனார்கள்.

எப்படி இத்தனை பாதுகாப்புகளையும் மீறித் தொற்று வந்திருக்கிறது?

ஆராய்ந்து பார்த்தபிறகு அவர் சாப்பிட்ட ஃபுரூட் சாலட் வழியே தொற்று பரவியிருப்பது தெரிய வந்தது. எவ்வளவு பாதுகாப்பாக இருந்தபோதும், சிறு இடைவெளி வழியாகக் கூடத் தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது என்பது தான் யதார்த்தம்.

இதில் நம் உடம்பை நாம் எப்படிப் பாதுகாத்து வந்திருக்கிறோம் என்பது தான் முக்கியம்.

சத்தான உணவைவிட ருசியான, அழகான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

நடைப்பயிற்சி கூடச் செய்யாமல், உடம்பை நலுங்காமல் ரத்த ஓட்டமான தோல் பையைப் போல வைத்திருந்தால் – அது எந்த அளவுக்கு நோய்த்தடுப்பு ஆற்றலுடன் இருக்கும்?

செரிமானமாகாத நாகரீக உணவுகள், போதையூட்டும் வஸ்துக்கள் எல்லாவற்றையும் திணித்து, தூக்கமும், ஓய்வும் தொலைத்து, அத்துமீறியப் பாலியல் இச்சைகளுக்கு உடம்பைப் பாடாய்ப்படுத்திவிட்டு, உடம்பு சட்டென்று ஒத்துழைக்கவில்லை என்றால் யாருடைய தவறு?

இது தவிர, மனதில் கொள்ளும் பல்வேறு உணர்வுகளுக்கு இரையாவது இதே உடல் தான். மன உளைச்சல் அதிகரித்து, கொந்தளிப்பும் கூடினால், ரத்த அழுத்தம் கூடி, சர்க்கரை அளவும் கூடி, உடம்பின் அதன் விளைவு உடனே தெரிகிறது.

மதுபானங்களும், போதைப்பொருட்களும், புகையிலையும் நம் உடம்பைக் கெடுகின்றன என்பது தெரியாமலா நம் மக்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள்? அந்த அலட்சியம் எதில் வந்து விடிகிறது? அவரவர் உடம்பில் தானே!

அந்த விதத்தில் இவைப் படிப்படியாகச் சுயமாகத் தற்கொலை நோக்கி நகரும் செயல்பாடுகள் என்று தான் சொல்லமுடியும்.

பிரபலமான ஒரு வி.ஐ.பி அவர். இறுதிக் காலத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். உடம்பெங்கும் விதவிதமான ட்யூப்கள்.

வதங்கிப் போய்ப் படுத்திருந்தார். அருகில் அழைத்து ஒரு சேரில் என்னை உட்காரவைத்து மெல்லிய குரலில் பேசினார்.

“எத்தனையோ பேர் சொல்லியிருக்காங்க.. உடம்பைப் பல பழக்கங்களால் கெடுத்துக்கிட்டிருக்கீங்கன்னு கண்டிச்சிருக்காங்க.. சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லோரும் சொன்னப்போ நான் கத்தியிருக்கேன்.. மீறி வேணும்னே செஞ்சிருக்கேன்.

சின்ன வயசிலே பசங்க டப்பாவை ஒரு நூலில் கட்டிட்டு இழுத்துட்டுப் போவாங்க.. தெரியுமா? அந்த மாதிரி இதோ இந்த உடலை என்னோட பழக்கங்களுக்காக, இச்சைகளுக்காக எங்கெங்கோ இழுத்துட்டுப் போயிருக்கேன்.. கூடவே வந்திருக்கு இந்த உடம்பும்..

இத்தனை வருஷம் தாங்கினதே பெரிசு தான். இப்போ உடம்பு சொல்ற நேரம்.. கேட்டுக்கிட்டு இருக்கேன்.. அதைப் பார்த்துக்கத் தெரியாமப் போயிட்டேன்’’ – மெலிந்து ஒடுங்கிப் போயிருந்த உடலைக் காண்பித்தபடி சொன்னார்.

மனசில் அதுவரை ஒடுங்கியிருந்த குரலைப் போலிருந்தது அவர் சொன்னவிதம்.

இது எல்லோருக்குமே வெவ்வேறு விதங்களில் பொருந்தும்.

நம்மை அடையாளப்படுத்துகிற இந்த உடம்பின் மீது எப்போது அசலான அக்கறை அவரவர்க்கு இயல்பாக வரும்? பலவீனங்களுக்கும், போதைக்கும், வீண் ருசிகளுக்கும் அதை இரையாக்காமல் எப்போது நம் தோற்றத்தை ஒருங்கிணைத்திருக்கிற – இந்தத் திசுக் கூட்டத்தின் மேல் எப்போது நமக்கும், நம் மூலம் நம் சந்ததிக்கும் அசலான அக்கறை வரும்?

எப்போது நம்மைச் சுற்றியுள்ளவர்களை அல்ல, நம் உடம்பை எதிரியைப் போல அல்லாமல், நெருங்கிய நண்பனைப் போல எப்போது பார்ப்போம்?

எவ்வளவு உயிரோட்டமான கேள்வி இது?

– மணா

You might also like