பொழிவதை நிறுத்திக் கொண்ட இளைய நிலா!

மீள் பதிவு:

ஏறத்தாழ 25 மொழிகளில் பாடியிருப்பதாகச் சொல்கிறார்கள். பல முறை தேசிய விருதுகளைச் சில மொழிகளில் பாடி வாங்கியிருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. அதற்கெல்லாம் மேலாகப் பிறரிடம் துவேஷம் காட்டாத அன்புடன் பழகி வந்திருக்கிறார்.

“பாடும் நிலா பாலு’’ என்று அழைக்கிற அளவுக்கு நிலவின் குளுமையுடன் இருந்தார் எஸ்.பி.பி. தமிழ்த் திரைப்பட உலகில் நுழைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கே.வி.மகாதேவனும் முக்கியக் காரணமாக இருந்தார்கள்.

“ஆயிரம் நிலவே வா…’’ துவங்கி, “இயற்கை என்னும் இளைய கன்னி’’, “பொட்டு வைத்த முகமோ’’, “வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’’, “கடவுள் அமைத்து வைத்த மேடை’’ என்று பல ஆயிரம் பாடல்களைப் பாடி உயரம் தாண்டிப் போய்க் கொண்டிருந்தார். தெலுங்கில் “சிரி சிரி முவ்வா’’, ‘சங்கராபரணம்’ என்று உச்சத்திற்குப் போனார். அப்புறம் இந்திப் படவுலகம்.

‘ஏக் துஜே கேலியே’ படம் வெளிவந்தபோது, “தேரே மேரே பீச் மே’’ என்று துவங்கும் எஸ்.பி.பி.யின் பாடல் செமை ஹிட். வட இந்திய இளைஞர்கள் கொண்டாடினார்கள் அவருடைய குரலை.
தொடர்ந்து பல படங்களில் பாடினார். இடைவெளிக்குப் பிறகு “மைனே பியார் கியா’’ இந்திப்படத்தில் அவர் பாடிய பாடல்கள் பிரபலமாகி, அவருக்கு தொண்ணூறுகளில் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்து. ஃபிலிம்பேர் விருதுகளை வாங்கிக் கொடுத்தன. அந்தப் படப் பாடல்கள் 50 லட்சம் கேஸட்கள் வரை விற்பனையாகின.

‘சாந்தினி’ படத்தில் அவர் பாடிய பாடல்கள் அடங்கிய கேஸட்கள் 35 லட்சம் விற்று ரிக்கார்டு படைத்தன. இவ்வளவுக்கும் பிரபல இந்தி இசையமைப்பாளரான நௌஷாத் இசையில் “தேரே பாயல், மேரே கீத்’’ என்ற படத்தில் பாடியபோது அவருடைய மதிப்பு கூடியது. ‘ஹம் பஞ்ச்’ என்ற இந்திப் படத்திற்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார் எஸ்.பி.பி.

தமிழில் ‘சிகரம்’ படத்திலும், சில தெலுங்குப் படங்களிலும் இசையமைத்திருக்கிறார்.
தனிப்பக்திப்பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒரே நாளில் அதிகப் பாடல்களைப் பாடி ரிக்கார்டு படைத்திருக்கிறார். கூடவே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
கனமான உடம்போடு பிரபுதேவாவோடு ஆடியிருக்கிறார். கமலுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். பாட முடிகிற வரை தனிக் கச்சேரிகளில் பாடிக் கொண்டே இருந்திருக்கிறார்.

ஜேசுதாஸ் போன்ற மூத்த பாடகர்களுடன் நட்பைப் பேணுகிறவராகத் தொடர்ந்து இருந்திருக்கிறார். தன்னை இசையுலகில் வாழ வைத்தவர்களின் பெயர்களைத் தன்னுடைய நிறுவனத்திற்கு வைத்துக் கௌரவப் படுத்தியிருக்கிறார்.

இளம் நுங்கின் பதத்தில் இருக்கும் அந்த மெல்லிய வசியக் குரல் மட்டும் இறுதிவரை அவரை விட்டு விலகவோ, பிசிறடிக்கவோ இல்லை.

“இளைய நிலா பொழிகிறதே’’ – அவருடைய மென்மையான குரல் இதோ கேட்டபடி இருக்கிறது.
எத்தனை இதயங்களைச் சமப்படுத்தி ஆற்றுப்படுத்தியிருக்கும் இந்தக் குரல்.
இப்போது இந்த ‘இளைய நிலா’ பொழிவதை நிறுத்திவிட்டது.
– யூகி

You might also like