குகையில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதலாம் ஓவியம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை ஆவணப்படுத்துதல் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது.
அந்த சுழற்சியை துரிதப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கிறது புகைப்படக்கலை!
புகைப்படம் என்பது காலத்தை ஒரு சட்டகத்தினுள் கையகப்படுத்தும் ஓர் அற்புதம். ஐம்பது, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நம் பாட்டனும் முப்பாட்டனும் எப்படி வாழ்ந்தனர் என்பதற்கு சான்றாக விளங்குபவை சில அரிய புகைப்படங்களே.
யார் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், ஒரு புகைப்படத்தைப் பார்த்ததும் நம்முள் ஓராயிரம் எண்ணங்கள் தோன்றும். அந்த எண்ண விரிதலே ஒரு சிறந்த புகைப்படத்தை தீர்மானிக்கிறது.
பேசாமொழி!
எந்தவொரு நபரும் இன்னொருவருடன் உரையாட, உறவு பாராட்ட, ஒரு மொழியின் துணை வேண்டும். ஆனால், உலகின் கடைக்கோடி மனிதருடனும் இணைய சைகைகளை விட எளிய வழி புகைப்படங்களே.
ஜோசியக்காரரின் கூண்டுக்குள் இருந்து வெளிவரும் கிளி சீட்டுக்கட்டுகளை கலைத்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பது போல, மனிதர்களும் கை நிறைய புகைப்படங்களை வைத்துக்கொண்டு இன்னொரு மனிதருடன் உரையாட முயன்றால் எப்படியிருக்கும்?
நினைத்துப் பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும், புகைப்படக் கலை அந்தளவுக்குத் தன் எல்லைகளை விரித்திருக்கிறது என்பதே உண்மை.
பத்திரிகை துறையில், ஆயிரம் வார்த்தைகள் விளக்காததை ஒரு புகைப்படம் விளக்கிவிடும் என்பார்கள். அதனாலேயே, டிஜிட்டல் காலத்திலும் ‘போட்டோ ஜர்னலிசம்’ தன் கூர்மையை இழக்காமலிருக்கிறது.
வியட்நாம் போரின் கொடுமையை விவரிக்க, சாலையொன்றில் நிர்வாணமாக ஓடிவரும் ஒரு சிறுமியின் புகைப்படம் போதும். அவர் பெண்மணியாகிவிட்டபோதும்,
நம்முள் அவரது அழுகையும் அந்த குழந்தைமையும் மட்டுமே நிறைந்திருக்கக் காரணம், அப்புகைப்படம் நம்முடன் உரையாடிய விதம். அதனுள் நிறைந்திருக்கும் மௌன மொழி.
உறையும் தருணங்கள்!
தேநீரும் காப்பியும் நம் கலாசாரத்தோடு ‘கொடுக்கல் வாங்கல்’ வைத்துக்கொண்டது போல, புகைப்படம் எடுக்கும் வழக்கமும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது.
இப்போதும் சில வீடுகளில் 40, 50 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படத் தொகுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றைக் கையிலெடுத்தால் பிறப்பு, திருமணம், இறப்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
படுத்தவாறே அழுது அல்லது சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்து மனம் உருகினால், அந்த உணர்வைச் சுக்குநூறாக்குவது போல எதிரே ஒரு உருவம் வந்து நிற்கும்.
திருமண நிகழ்வுகளில் அந்நாளைய ‘ட்ரெண்ட்’ நம்மை நகைப்புக்கு உள்ளாக்கும்.
நாற்காலியில் உட்கார்ந்தவாறு நாடிக்கட்டு போடப்பட்ட பாட்டனாரின் புகைப்படம், நெடுநாட்களுக்கு நம் கனவுகளை குத்தகை எடுக்கும். இன்று இவ்வழக்கங்கள் அரிதானாலும், இவற்றுக்கு ஈடிணை எதுவுமில்லை.
சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இவை காலத்தால் அழியாத பொக்கிஷங்கள். உறைந்து போன அந்த தருணங்களை மீட்டெடுக்க முடியாத சோகமே, மீண்டும் மீண்டும் அவற்றைப் பார்க்கத் தூண்டும்.
அந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு ‘அப்போ எப்படியிருக்குற பாரேன்’ என்று பழைய நினைவுகளில் மூழ்குவது ஒருவகை போதை. தினமும் அதைச் சுகிக்க விரும்புவோர் வீட்டுக்கூடத்திலேயே புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பார்கள்.
காலத்தின் சாட்சி!
இயல்பைப் பதிவு செய்யும் புகைப்படங்கள் வரலாற்று ஆவணங்கள். பிரபலங்களின் மிகச்சிறந்த புகைப்படங்கள் அனைத்துமே, அந்த வகைமைக்கு உட்படுத்தப்பட்டதாக இருக்கும். காரணம், அவற்றில் அவர்களது சுயம் நிறைந்திருக்கும்.
பிரபலங்கள் என்றில்லை, சாதாரண மனிதர்களுக்கும் இது பொருந்தும். அதனால்தான், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் ‘கொஞ்சம் போஸ் கொடுங்க’ என்று சொல்லும் புகைப்பட நிபுணர்களைக் கண்டால் மனதில் எரிச்சல் திரளும்.
எதையெல்லாம் தவறு என்று கருதுகிறார்களோ, அவையெல்லாம் காலத்தின் சாட்சிகள் என்பதைப் புரிந்து கொள்ளாததன் விளைவு அது. இன்று, ‘கேண்டிட் ஷாட்ஸ்’ என்ற பெயரில் அதுவே ஒரு வகைமை ஆயிருப்பது நல்ல விஷயம்.
ஒரு ஆணையோ பெண்ணையோ அழகுறக் காட்ட விரும்பினால், அவர்களைப் பேசவோ அல்லது இயல்பான காரியமொன்றைச் செய்யவோ விட்டு புகைப்படம் எடுப்பது சிறப்பு.
அந்த இயல்புக்குள் ஒளிந்து நிற்கும் காலம் புகைப்படத்தில் பதிவு செய்யப்பட்டால், அதுவே காலாகாலத்துக்குமான அழகாக மாறிவிடும்.
வேண்டுமானால், உங்களுக்குப் பிடித்தமான எந்தவொரு அழகான நபரின் புகைப்படங்களையும் இவ்வார்த்தைகளுக்கு நேர் வைத்து பொருத்திப் பார்க்கலாம்.
புகைப்படக்கலையைக் கொண்டாடுவோம்!
உலகெங்கும், ‘புகைப்படக்கலை தினம்’ ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. கேமிராவுக்குள் பதிவாகும் உருவங்களை தாமிரத் தகட்டில் பதிய வைத்து ‘பிரிண்ட்’ எடுப்பதற்கான ‘டுகுரோடைப்’ (Daguerreotype) கண்டுபிடிக்கப்பட்ட தினம் இதுவே.
இக்கலை உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டுமென்று, இந்த நுட்பத்தைப் பொதுவாக்கியது அன்றைய பிரான்ஸ் அரசு. அதன் வழி சென்ற புகைப்படக்கலை, இன்று பல சிகரங்களைக் கடந்துள்ளது.
தனிநபர் சார்ந்து மட்டுமல்லாமல் கட்டடங்கள், சுற்றுலா தலங்கள், விலங்குகள், பறவைகள், இயற்கையின் வனப்பு தொடங்கி பல்வேறு துறை சார்ந்து புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
கண்டதும் மனதுக்குப் பிடித்துவிட்டால், அவற்றை டிஜிட்டல் தளங்கள் வழியே பகிர்வதும் சுலபம். அப்படியே, அந்த புகைப்படம் எடுத்தவரையும் பாராட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
புகைப்படங்களைப் பாதுகாக்கிறோமா?!
எளிமையாகக் கிடைக்கும் எதற்கும் மரியாதை கிடையாது என்ற சொலவடைக்கு, இன்று புகைப்படங்களும் இலக்காகிவிட்டன.
நினைத்தால் மொபைல் கேமிராவால் மிகத்துல்லியமாக ஒரு புகைப்படத்தை எடுத்துவிட முடியும். அவற்றைச் சேமிக்கவும் இடமுண்டு.
ஒருமுறை சேமிப்பகத்தில் ஒட்டிக்கொள்ளும் புகைப்படங்களை எப்போது மீண்டும் பார்க்கிறோம் என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் கிடையாது.
மென்பொருள் கோளாறுக்கு உள்ளானால், அந்த புகைப்படங்களும் வீணாகிவிடும். அப்படியொரு அபாயமிருந்தும், புகைப்படங்களைக் குவிக்கும் அளவுக்கு அவற்றை பாதுகாக்க முயல்வதில்லை.
மனதில் ஒட்டிக்கொண்ட தருணத்தைப் பிய்தெடுத்து விரிக்கப்பட்ட ஒரு நகலே ‘புகைப்படம்’.
கதறியழும் குழந்தை அன்னையின் கைக்குள் கதகதப்பை உணர்வது போல, ஒரு சட்டகத்தினுள் அடைக்கப்படும்போது அந்த புகைப்படம் ஒருவித ஆறுதலை உணரும்.
புகைப்படங்கள் கால மாற்றத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துபவை. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுபோல புகைப்படக்கலை தந்த உன்னத உணர்வுகளை கடத்துவதுதானே அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் தர்மம்!