சாப்ளின் பாணி நடிப்பும், ஸ்லாப்ஸ்டிக் காமெடியும்!

அந்தக்கால ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போயரின் பரம ரசிகர் சந்திரபாபு. ஆடலில், பாடலில் சந்திரபாபுவுக்கு இன்னும் யார் யாரெல்லாம் வழிகாட்டிகளோ தெரியாது. ஆனால், பாடல்களில் யூடலிங் செய்வதில் ஜீன் ஆட்ரி என்பவர்தான் சந்திரபாபுவுக்கு வழிகாட்டி.

‘தன அமராவதி’ படத்தில் தலையைக் காட்டி, அதன்பின் வாய்ப்பு எதுவும் வாசலைத் தேடி வராததால், காப்பர் சல்பேட்டை முழுங்கி தற்கொலைக்கு முயன்று, உயிர் பிழைத்து, அதன்பின் நீதிமன்றத்தில், நீதிபதியிடம் ஷேக்ஸ்பியரின் நீளமான நாடக வசனம் ஒன்றைப் பேசிக்காட்டி தப்பியவர் சந்திரபாபு.

மோகன சுந்தரம் (1951) என்ற படத்தில் சந்திரபாபு வாங்கிய சம்பளம் வெறும் 200 ரூபாய்தான். (200 ரூபாய் என்றதும் வேறு ஏதாவது நினைவு வந்தால் நான் பொறுப்பில்லை). பிற்காலத்தில் தென்னிந்திய நடிகர்களில் முதன்முதலாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பேசிய நடிகர் சந்திரபாபு.

சாப்ளின் பாணி நடிப்பும், ஸ்லாப்ஸ்டிக் காமெடியும், கூடவே ஆடலும் பாடலும் சந்திரபாபுவுக்குக் கைவந்த கலை. சபாஷ் மீனா போன்ற திரைப்படங்களில் சென்னை பாஷையை மிக இலாகவமாக கையாண்டவர் சந்திரபாபு. அதற்குக் காரணமாக இருந்தவர்கள் சென்னையில் சந்திரபாபு குடியிருந்த திருவல்லிக்கேணி மீர்சாகிப் பேட்டை பகுதி ரிக்சா தொழிலாளர்கள்.

சந்திரபாபு நகைச்சுவை நடிகராகவும், பாடகராவும் மட்டுமே பெரிதும் அறியப்பட்டவர். ஆனால், அவர் திரைக்கதை எழுத்தாளரும் கூட. ‘பாவமன்னிப்பு’ திரைப்படத்தின் கதை சந்திரபாபுவுடையது. உண்மையில் அந்தப் படத்தில் சிவாஜி கேரக்டரில் நடிக்க இருந்தவர் சந்திரபாபுதான். ஏதோ காரணத்தால் இயக்குநர் பீம்சிங்கால் இது இயலாமல் போனது.

சகோதரி (1959) படத்தை முழுமையாக எடுத்து முடித்த பிறகு ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாருக்கு ஏனோ திருப்தி வரவில்லை. அதனால் சந்திரபாபு வரவழைக்கப்பட்டு, அவரே ஒரு காமெடி டிராக் எழுதி, நடித்து, ஒரு பாடலும் பாடிக் கொடுத்தார். அந்தப் பாடல்தான். ‘நான் ஒரு முட்டாளுங்க’

‘சபாஷ் மீனா’ படத்தில், கதாநாயகன் சிவாஜிக்கு இணையாக, இருவேறுபட்ட வேடங்களில் கலக்கினார் சந்திரபாபு. அந்தப் படத்தில் சந்திரபாபுவுக்கு ஜோடியாக நடித்தவர் பி.சரோஜாதேவி. சபாஷ் மீனா படத்தில் சிவாஜியை விட, சந்திரபாபு அதிக சம்பளம் வாங்கினார் என்றுகூட சொல்வார்கள்.

திரைப்படங்களில் ஏராளமான பாடல்களைப் பாடிய சந்திரபாபு, ‘பெண்’ என்ற படத்தில் வீணை எஸ்.பாலச்சந்தருக்காகவும், ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற படத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்காகவும் பின்னணி பாடியிருக்கிறார்.

தட்டுங்கள் திறக்கப்படும் (1966) படத்துக்கு கதை, திரைக்கதையை எழுதி அந்தப் படத்தை இயக்கவும் செய்தார் சந்திரபாபு. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் படம் ஓடவில்லை.

சந்திரபாபுவின் ஜே.பி. என்ற இன்ஷியலை இழுத்து விரிவாக்கினால் அது ஜோசப் பிச்சை என விரிவடையும். அப்பா ஜோசப் பிச்சை ரொட்ரிகஸ். அம்மா ரோசலின் பெர்னாண்டோ. சந்திரபாபுவின் சொந்த ஊர் தூத்துக்குடி.

இளமைக் காலத்தில் இலங்கைத் தலைநகரமான கொழும்பில் வாழ்ந்தவர் சந்திரபாபு. கொழும்பில் இருந்தபோது ஏற்பட்ட பைலா பாடல் அனுபவம், சந்திரபாபுவின் ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே’ பாடலில் கைகொடுத்தது.

எம்.ஜி.ஆருடன் ‘புதுமைப்பித்தன்’, ‘நாடோடி மன்னன்’ போன்ற படங்களில் நடித்தவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆரை வைத்து ‘மாடி வீட்டு ஏழை’ என்ற திரைப்படத்தை சந்திரபாபு தயாரித்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியை இவர் ஏசப்போக, படம் பணால் ஆனது. அதன்பிறகு எம்.ஜி.ஆருடன சந்திரபாபு நடித்த கடைசிப்படம் ‘அடிமைப்பெண்’.

வின்சென்ட் சாமிக்கண்ணுவின் பேத்தியும், ஆங்கிலோ இந்தியப் பெண்ணுமான ஷீலாவை மணந்தார் சந்திரபாபு. கர்மவீரர் காமராஜர் போன்றவர்கள் வந்து வாழ்த்திய திருமணம் அது. பின்னர் ஷீலா தனக்கு முன்னாள் காதலர் ஒருவர் இருப்பதாகச் சொல்ல மணமுறிவு (விவாகரத்து) ஏற்பட்டது.

மணமுறிவு ஏற்பட்ட அடுத்த ஒரு வாரத்தில் லண்டன் டாக்டர் ஒருவரை மணந்து கொண்டார் ஷீலா. சந்திரபாபு மனம் உடைந்து பெரும் போதைப் பழக்கத்தில் விழுந்தார்.

சந்திரபாபு பாடிய பல பாடல்கள் சாகாவரம் பெற்றவை. சில பாடல்கள் அவருக்கே பொருந்தக் கூடியவை. ‘அன்னை’ படத்தில் அவர் பாடிய ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘புதையல்’ படத்தில் பாடிய ‘உனக்காக எல்லாம் உனக்காக’ மரகதம் படத்தில் பாடிய ‘குங்குமப் பூவே, கொஞ்சும் புறாவே’, கவியரசர் கண்ணதாசனின் ‘கவலையில்லாத மனிதன்’ படத்தில் பாடிய, ‘பிறக்கும்போதும் அழுகின்றாய், இறக்கும்போதும் அழுகின்றாய்’ போன்ற பல பாடல்கள் காலத்தை வென்றவை.

‘யாருக்குச் சொந்தம்?’ என்ற படத்தில் சந்திரபாபு பாடிய பாடல், ‘என்னைத் தெரியல்லியா? இன்னும் புரியல்லியா? குழந்தை போலே என் மனசு, என் வழியோ என்றும் ஒரு தினுசு’.

ஆம். வாழ்க்கை முழுக்க ஏதோ ஒரு தினுசான வழியில் நடந்த சந்திரபாபுவின் நினைவு நாள் இன்று.

– மோகனரூபன்

08.03.2021 5 : 25 P.M

You might also like