கவிதை நூலை பொதுவுடைமையாக்கிய இந்திரன்!

சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 8

கலை விமர்சகர் இந்திரனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம். எதிர் கவிதைகளும் பிற கவிதைகளும் என்ற டேக் லைன் வைத்திருக்கிறார். ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் எழுதிய கவிதைகளில் மிகச்சிறந்த 114 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்திருக்கிறது.

கடல், நகர வாழ்வியலின் அழகைக் கவித்துவமான நவீன மொழியில் கவிதைகளாக எழுதுபவரான இந்திரன், “இந்த நூலில் உள்ள கவிதைகளை எனது முன் அனுமதியின்றி யார் வேண்டுமானாலும் எடுத்து அச்சிட்டுக் கொள்ளலாம். இதற்காக இவை தேசியவுடைமையாகும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இப்போதே இவற்றை எடுத்து நீங்கள் பயன்படுத்தலாம். என் மனைவிக்கோ, மகள்களுக்கோ, பிற வாரிசு தாரர்களுக்கோ இதில் எந்த உரிமையும் இல்லை. இத்தொகுதியில் இருக்கும் எனது கவிதைகள் என் தனியுடைமை அல்ல. பொதுவுடைமை” என்று நூலில் முன்னுரைக்குப் பதிலாக ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

இந்திரனின் கவிதைகளைப் பற்றிப் பேசுவதைவிட அவரது முன்னுரையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஒரு நூல் நாட்டுடைமை ஆக்கப்படுவது பற்றிக் குறிப்பிடும் அவர், அதனைக் கணினி உலகத்துடன் ஒப்பிடுகிறார். “பொதுவாகக் கிடைக்கக் கூடிய தகவல்கள் அனைத்தும் இலவசமாகத்தான் கிடைக்க வேண்டும்” எனும் இலவச மென்பொருள் இயக்கத்தின் தலைவர் ரிச்சர்ட் ஸ்டால்மேன் கூறி 28 ஆண்டுகள் கடந்துவிட்டன. தகவலைப் பிரதியெடுத்து, தங்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் உரிமை மனிதகுலத்தை ஞானமுள்ளதாக மட்டுமல்ல, செல்வச் செழிப்புள்ளதாகவும் மாற்றும் என்று அவர் நம்புகிறார்.

இலவச மென்பொருள் இயக்கத்தின் காரணமாகத்தான் இன்று அமேசான், கூகுள், முகநூல், யூ டியூப், யாஹூ போன்றவை இன்று அசுர வளர்ச்சியடைந்து நிற்கின்றன என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய ஒரு கால கட்டத்தில் தனது படைப்பிலக்கியத்தை விற்று அதில் வரும் வருமானத்தில் வாழக்கூடிய முழுநேர எழுத்தாளர்களை வெகுவாக பாதித்து விடுகிற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

இந்தியாவைப் போன்ற சாதி எனும் பிற்போக்குத்தனமான மூடநம்பிக்கை கொண்ட தேங்கிப் போன ஒரு சமூகத்தில் ஞானம் என்பது இன்று சாதி, மத வேற்றுமைகளைக் கடந்த நிலையில் அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தொழில்நுட்ப அறிவியல் ஒரு பரிசாகக் கொடுத்த இணையம் என்பது பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது.

இதனால்தான் எனது புதிய கவிதை நூலான ‘பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம்’ நூலை நான் காப்புரிமை கோராத, யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக எடுத்துக் கையாளக் கூடியதாக அறிவித்து இருக்கிறேன்” என்று விளக்கமளிக்கிறார் இந்திரன்.

கான்கிரீட் வனாந்தரத்தில் முளைத்த

எனது பதினைந்தாவது மாடி பால்கனியில்

ஒரு சங்குப்பூ

சங்க காலத்துக் குன்றின் மேல் பூத்த

குறிஞ்சிக் கருவிளைப் பூவின்

ரத்தக் கோட்டை இழுத்துக்கொண்டு

இன்று என் பிளாஸ்டிக் தொட்டியில் பூக்கிறது

– என்று தன் முதல் கவிதையில் எழுதிச் செல்கிறார்.

தற்கொலைக்கு முயலும் நட்சத்திரம் என்ற கவிதையில்,

பால்வெளித்திரளில்

ஒரு நட்சத்திரம்

பல ஒளி ஆண்டுகள்

மரணப் படுக்கையில் கிடக்கிறது

தன்னுடைய ஒளியைத்

தானே சாப்பிடத் தொடங்குகிறது

சுருங்கிப்போன ஒரு குள்ள நட்சத்திரமாக

அது மாறத் தொடங்குகிறபோது

நான் அழத் தொடங்கிவிடுகிறேன்

தற்கொலைக்கு முயலும் நட்சத்திரத்தைத் தடுக்க

பிரபஞ்ச வெளியில் யாருமில்லையா?

மரணமடைந்த நட்சத்திரத்தை

நான் இனியும் நட்சத்திரம் என்று

எப்படிப் பெயர் சொல்லி அழைப்பேன்

நட்சத்திரத்தின் இறுதி சடங்கிற்கு வந்திருந்தவர்கள்

சொன்னார்கள்

இனி அதன் பெயர் கருந்துளை என்று

இந்திரனின் கவிதைகளில் கவித்துவத்தில் வானியலும் கலந்திருக்கும். நகர வாழ்வியலும் புதைந்திருக்கும். கிராமிய வாழ்க்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழப் பழகியவர்களுக்கு இங்குமல்லாத அங்குமில்லாத மதில்மேல் பூனை மனநிலை நிலவும். ஆனால் அவருடைய கவிதைகளில் நெருக்கடியை நகரத்தின் தெருக்களில் அழகியலைப் பார்க்கலாம். அதுதான் அவரது பாடுபொருள்.

அதே இந்திரன்தான்  இப்படி ஒரு ரொமான்டிக் கவிதையையும் எழுதுபவராக இருக்கிறார்.

பழைய கதையை

மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும்

ஒரு குழந்தையைப்போல

அலைபேசி வழியாகச் சிதறும்

உன் சிரிப்பொலிகள்

மீண்டும் மீண்டும் கேட்க விரும்புகிறேன்

இந்த மனநிலையில்தான் கவிதை வரும், எழுத வரும் என்ற கொள்கை நிலையை எதிர்ப்பவர் இந்திரன்.  கொரோனா பொது முடக்கக் காலங்களில் சமூக வலைத்தளங்களில் எழுத்தை ஒரு அன்றாட கடமையாகச் செய்தவரின் சிறந்த கவிதைகள் நூலாக வந்துவிட்டன. அதுவும் பிரபஞ்சத்தின் ஒரு சமையல் குறிப்புப் புத்தகமாக.

பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம் (கவிதைகள்): இந்திரன்

வெளியீடு: யாளி பதிவு வெளியீடு,
8/17 கார்ப்பரேஷன் காலனி, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 24.
விலை ரூ. 200

08.03.2021 12 : 30 P.M

You might also like