பா.ம.க-23, தே.மு.தி.க-15, பா.ஜ.க-20
‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்ற முழக்கத்தை சில ஆண்டுகளுக்கு முன் வைத்தது பா.ஜ.க.
சில காரணங்களால் அதே முழக்கத்தை அவர்களால் தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. மிகக்குறுகிய காலத்தில் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.
2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்த தொகுதிகள் ஐந்து மட்டுமே.
கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை என்று ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது, ஜெயலலிதா தலைமைப் பொறுப்பில் இருந்தபோது தரப்பட்ட தொகுதிகளை விட, எடப்பாடி பழனிசாமி குறைவாகத் தொகுதிகளை ஒதுக்கியது வியப்புடன் பார்க்கப்பட்டது. இருந்தும் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை.
தற்போது தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே பா.ஜ.க தரப்பில் வெவ்வேறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. பிரதமர் துவங்கி அமித்ஷா வரை பலர் தமிழகத்திற்கு வந்து சென்றபோது கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க கோருவதாகச் சொல்லப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராகத் தயக்கத்திற்குப் பிறகே ஏற்றுக்கொண்டது பா.ஜ.க.
தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியை பா.ஜ.க.வுக்கு மீண்டும் முதற்கட்டமாக ஒதுக்கியது அ.தி.மு.க. அதில் மீண்டும் முன்னாள் அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.
ஏற்கனவே பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், தே.மு.தி.க.வுக்கு 15 தொகுதிகளும் ஒதுக்கிய நிலையில், அவற்றை விடக் கூடுதலான தொகுதிகளை எதிர்பார்த்த பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
06.03.2021 12 : 35 P.M.