‘ஏலே’ – மரணம் உணர்த்தும் பாசப் புரிதல்!
‘ஒரு பீல்குட் மூவி பார்த்து எத்தனை நாளாச்சு’ என்பவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது ஹலீதா ஷமீம் இயக்கியுள்ள ‘ஏலே’. மரணத்துக்குப் பிறகு ஊற்றெடுக்கும் பாசப் புரிதல் பற்றி பேசுகிறது.
இப்படத்தில் தந்தையாக சமுத்திரக்கனியும், புரிதல் இல்லாத மகனாக மணிகண்டனும் நடித்திருக்கின்றனர். இவர்களிருவர் மட்டுமே திரையை ஆக்கிரமித்தாலும், சுற்றியிருக்கும் மக்களும் நம் நினைவில் நிற்கும்படி கதை சொல்லி அசத்தியிருக்கிறார் ஹலீதா.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியன்று விஜய் தொலைக்காட்சியில் வெளியான ‘ஏலே’ தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.
தவறான புரிதல்!
ஐஸ் விற்கும் முத்துக்குட்டி (சமுத்திரக்கனி) மனைவியை இழந்தபிறகு, இன்னொரு திருமணம் செய்யாமல் வாழ்கிறார். அவரது பிள்ளைகள் மீனா (சனா உதயகுமார்) மற்றும் பார்த்தி (மணிகண்டன்).
வெறுப்பும் அன்புமாய் தந்தையிடம் மீனா நேசம் பாராட்டினாலும், தந்தையைப் பிணமாகக் கண்டாலும் பார்த்தி அழுவதில்லை. வீட்டில் தந்தை இறந்து கிடக்க, புறவாசல் வழியாகச் சென்று பரோட்டா சாப்பிட்டு வருகிறார்.
துக்கம் விசாரிக்க வந்தவர்களும் காசு வாங்கிக் கொண்டு ஒப்பாரி வைப்பவர்களும் கலைக் குழுவினரும் வீட்டில் நிறைந்திருக்க, முத்துக் குட்டியின் இறுதிச் சடங்குகள் தொடங்குகின்றன.
திடீரென்று முத்துக்குட்டி சடலம் காணாமல் போக, அதனைத் தூக்கிச் சென்றது யார் என்ற தேடல் தொடங்குகிறது. இறுதியில், முத்துக்குட்டி இறந்தாரா இல்லையா என்ற சந்தேகத்தில் வந்து நிற்கிறது.
அத்தனை ஆண்டுகளாக முத்துக்குட்டியைப் பற்றிய தவறான புரிதலைக் கொண்டிருந்த பார்த்தி, உண்மையைப் புரிந்து கொள்வதுடன் படம் நிறைவடைகிறது.
தந்தை மீது பார்த்திக்கு ஏன் அப்படியொரு வெறுப்பு என்ற கேள்விக்கு பதிலளிக்கும்விதமாக விரிகிறது திரைக்கதை. லாட்டரி சீட்டு வாங்குவதற்காக மகனின் கோனார் நோட்ஸை அடகு வைக்கும் காட்சி, அவரது பார்வைக் கோணத்தை புட்டு புட்டு வைத்து விடுகிறது.
சாலையில் வரும் வாகனங்களின் குறுக்கே கோழிக்குஞ்சை வீசி பணம் பிடுங்குவதில் தொடங்கி மகனைத் தத்தெடுக்க நினைக்கும் குடும்பத்தினரிடம் பணம் பெறுவது வரை முத்துகுட்டியின் ‘அட்ராசிட்டி’ ஒவ்வொன்றும் ‘அடப்பாவி’ என்று சொல்ல வைக்கின்றன.
இப்படியொரு நபரை ‘மாமா’ என்று வாஞ்சையுடன் அழைக்கும் பண்ணையார் மகள் நாச்சியாரை (மதுமதி பத்மநாதன்) பார்த்தி காதலிக்கத் தொடங்குவதும், ஒரு புள்ளியில் இருவருக்குமிடையே விரிசல் ஏற்படுவதும் இரண்டாம் பாதியாக விரிகிறது.
முதல் பாதி முழுக்க சமுத்திரக்கனியையும் இரண்டாம் பாதி முழுக்க மணிகண்டனையும் சுற்றி வருகிறது. அது சமநிலையை அடையும்போது, தந்தை மகன் பற்றிய புரிதல் நோக்கி திரைக்கதை நகர்வது அற்புதமான உத்தி.
இயல்பான நகைச்சுவை!
துக்கம் விசாரிக்க வந்த பெரியவர் இறுதிச்சடங்குகள் குறித்து தகவலறிய “இன்னிக்கா நாளைக்கா” என்று கேட்க, “இன்னிக்குதான். நீங்க எப்படி” என்று மணிகண்டன் பதிலளிக்கையில் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது.
“டெய்லெண்டர்ஸ் என்ன சொல்றாங்க.. ஆங்.. அடுத்தது யாருன்னு டாஸ் போட்டு பார்க்குறாங்க..”, “எல்லாம் முடிஞ்சபிறகு கறிசோறு சாப்பிட்டுதான் வீட்டுக்கு போகணும்”, “மூக்குன்னு இருந்தா சளி இருக்கத்தான் செய்யும்; சீட்டை பிடிக்க செருப்பை போட்டது குத்தமாய்யா” என்பது போன்ற வசனங்கள் படம் முழுக்க நிரம்பியிருப்பதால் சீரியசான காட்சியிலும் சிரிப்பை எதிர்கொள்ள முடிகிறது.
வசனங்களில் நகைச்சுவையைத் தெளித்தாலும் காட்சிகளை சீரியசாக நகர்த்தி அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் கலையை லாவகமாகக் கையாள்கிறார் இயக்குனர்.
மனிதர்களுக்கு இடையிலான புரிதல் அறிவு சார்ந்து இருப்பதையும், உணர்வைச் சார்ந்திருப்பதில்லை என்பதையும் ஆங்காங்கே உணர்த்துகிறார். நாயகனைப் பார்த்தவுடன் அதுவரையிலான உறவின் நிலை, சூழல் பற்றிய நினைவே வராது என்று நாயகி பேசும் வசனம் அதற்கொரு உதாரணம்.
மணிகண்டன், சமுத்திரக்கனி, மதுமிதா முதல் இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரையும் பாராட்டுவதற்குப் பதிலாக இயக்குனர் ஹலீதாவை பாராட்டி விடலாம். காரணம், அந்தளவுக்கு ஒரு பிரேமில் வருபவர்களைக் கூட பாத்திரங்களின் இயல்பு மாறாமல் உலவ விட்டிருக்கிறார்.
தோற்றம் ஒன்றாக இருந்தாலும், சமுத்திரக்கனி நடித்த சுதாகர் எனும் பாத்திரத்தின் குரலில் வித்தியாசம் காட்டியிருப்பது அழகு. அவரது தலைமுடி சுருளாக இருப்பதைக் கண்டு துணுக்குற்றவர்கள், கிளைமேக்ஸ் காட்சியில் விழுந்து புரண்டு சிரிப்பார்கள்.
நாயகனை மையப்படுத்திய கதை என்பதால், அவரது சகோதரிக்கு காட்சிகள் குறைவாக இருப்பது குறையாகத் தென்படுகிறது. போலவே, நாயகியின் குடும்பத்தினராக நடித்தவர்கள் தேவைக்கும் குறைவாகவே திரையில் வந்து போகின்றனர்.
கபீர் வாசுகி, அருள்தேவ் இசையில் பாடல்கள் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசை கதைக்களத்தை நமக்குள் துல்லியமாக உருப்பெறச் செய்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் அப்படியே.
ரேமெண்ட் டெரிக் க்ரெஸ்டாவுடன் இணைந்து படத்தொகுப்பை மேற்கொண்டிருக்கிறார் ஹலீதா. இதனால், ஒரு துளி கூட கதைக்குத் தேவையற்ற பிரேம்கள் கண்ணில் படுவதில்லை.
தொடக்கத்தில் பிணத்தில் வாயில் ஏதோவொரு திரவத்தை ஊற்ற, அது கண்டிப்பாகச் சடங்கல்ல என்று பின்பாதியில் தெளிவுபடுத்தியிருப்பது அருமை. இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனியை மணிகண்டன் கண்டுபிடித்த பிறகான காட்சிகள் வழக்கமான கமர்ஷியல் சினிமாவை முன்னிறுத்தினாலும், அதில் அழகியல் அம்சங்கள் நிறைந்திருப்பதை மறுக்க முடியாது. கிளைமேக்ஸில் டைட்டில் ஓடும்வரை அது தொடர்கிறது.
ஒரு மரணத்தை ஊரில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நோக்குவதும், சம்பந்தப்பட்ட மனிதரை நினைவுகூறுவதும் தான் திரைக்கதையின் மைய இழை. கூடவே, மரணத்துக்குப் பிறகு ஒருவரை புரிந்துகொள்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதையும் மவுனமாகச் சொல்லிச் செல்கிறது.
2019-ல் வெளியான ‘கேடி என்ற கருப்புதுரை’யை ஏறக்குறைய நினைவு படுத்தினாலும், படத்தில் ஒரு காட்சி கூட வழக்கமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.
உறவின் மேன்மையை யதார்த்தமாகப் பேசி, அதன்பின் ‘த்ரில்லர்’ பாணியில் பிணத்தை தேடும் காட்சிகளை அமைத்து, இறுதி அரை மணி நேரத்தில் வழக்கமான கமர்ஷியல் படம் பார்க்கும் உணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
தியேட்டரில் வெளியாகி அதிரிபுதிரி வெற்றியைச் சுவைத்திருக்க வேண்டிய திரைப்படத்தை சின்னத்திரையில் பார்ப்பது மட்டுமே ‘ஏலே’ தரும் வருத்தமான விஷயம்.
– உதய் பாடகலிங்கம்
05.03.2021 01 : 42 P.M