சைலண்ட் ஹார்ட் அட்டாக்…!

இதயத்தில் பாதிப்பு வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ‘டயாபடீஸ்’ என்கிற சர்க்கரை நோயின் பங்கு முக்கியம்.

அதைப் பற்றி முதலில் பார்க்கலாம்.

உலக அளவிலேயே சர்க்கரை நோய் அதிகமாக இருப்பது இந்தியாவில்தான் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.

சமீபத்தில் வந்த ஆய்வின்படி பார்த்தால், 40 வயதுக்கு மேற்பட்ட 9.48 சதவீதம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சா்க்கரை நோய் இருக்கிறது.

இதில் நகர்ப்புறத்தில் 9.5 சதவீதம் பேருக்கு பாதிப்பு. கிராமப்புறத்தில் 4.5 சதவீதம் பேருக்கு பாதிப்பு.

இந்தியாவிலேயே வட இந்தியாவை விட, தென் இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகம்.

இதற்கு முக்கியக் காரணம் நமது உணவுமுறை சாதாரணமாக காலையில் சாப்பிடுவதற்கு முன்பு ரத்தத்தை எடுத்துச் சோதித்தாலும் காலை, மதிய உணவுக்குப் பிறகு எடுத்துச் சோதித்தாலும் சர்க்கரை நார்மலாகவே இருக்கும்.

அதை வைத்து ஒருவருக்குச் சா்க்கரை வியாதி இல்லை என்று முடிவு பண்ணிவிட முடியாது நிறைய இடங்களில் இப்படித்தான் நடக்கிறது இது தவறு.

பலருக்குப் போதுமான அளவு உடலில் ‘இன்சுலின்’ இருப்பதால் சாதாரணமாக உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ‘சர்க்கரை’ அளவைக் கட்டுப்படுத்த முடிகிறது. கூடுதலான அளவு சாப்பாட்டைச் சாப்பிட்டால் கட்டுப்படுத்த முடியாது.

இதற்காக ‘GTT’ (Glucose Tolerance Test) எடுக்கிறோம். GTT என்பது காலையில் உணவு அருந்துமுன் 75 கிராம் டாலரன்ஸ் டெஸ்ட் எடுக்கிறோம். GTT என்பது காலையில் உணவு அருந்தும் முன் 75 கிராம் Glucose Power-ஐத் தண்ணீரில் கலந்து குடிக்கச் சொல்வார்கள்.

இதற்கு முன் உணவு அருந்தாதபோது சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய 2 CC ரத்தத்தை எடுத்துக் கொள்வார்கள். குளுக்கோஸ் (Glucose) பருகியதிலிருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை ரத்தம் உள்ள குளுக்கோஸ் அளவைக் கணித்து ரத்தம் எடுப்பார்கள்.

இவ்வாறு 5 முறை எடுப்பார்கள். இவ்வாறு எடுத்து சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்தத்தின் சர்க்கரை அளவு 130 மில்லி கிராமுக்கு மேல் இருந்தால், அவருக்குப் பிற்காலத்தில் சர்க்கரை வியாதி தோன்ற வாய்ப்புண்டு என்பதை அறியலாம்.

அவ்வாறு இல்லாமல் 200-க்கு மேல் இருந்தால் சர்க்கரையைச் ஜீரணிக்கும் சக்தி இப்பொழுது இல்லை என்று தெளிவாகிறது.

உடலில் கணையம்தான் சர்க்கரையைச் சொிக்கிற வேலையை செய்கிறது.

உணவை அதிகமாக உட்கொள்ளும்போது கணையத்திலிருந்து செரிக்கக்கூடிய இன்சுலினும் அதிகமாகிறது.

உணவுகூடும்போது கணையம் தான் குறிப்பிட்ட அளவு வரை சர்க்கரை அளவும் கூடாமல் பேலன்ஸ் பண்ணுகிறது.

யாா் ஒருவருக்குக் கணையத்திலிருந்து அதிகமான இன்சுலின் சுரக்கவில்லையோ, அவர் அதிக உணவு உட்கொள்ளும்போது அதிலுள்ள சர்க்கரையைச் சொிக்க முடியாமல் சிக்கல் வருகிறது.

இன்னும் பத்து சதவிகிதம் பேருக்கு அப்நாா்மல் GTT-க்கான வாய்ப்பிருக்கும். அதாவது இன்றைக்கு அவர்களுக்குச் சர்க்கரைச் சத்து இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில், பத்து வருஷங்களில் வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு லாரியில் லோடு ஏற்றாத வரை அது எவ்வளவு தூரம் தாங்கும் என்பது தெரியாது, ஏற்றிய பிறகே தெரியும். அது மாதிரிதான் இதுவும்.

இப்போதே இந்த அளவுக்கு இருக்கிறது என்றால், இன்னும் இருபது வருஷங்களில் கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என்பதை யூகிக்க முடிகிறது.

இதனால் இந்தியாவில் உடல்நலம் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம். நெருக்கடி உருவாகலாம்.

இதை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டால் நுற்றுக்கு ஐம்பது பேருக்குச் சர்க்கரை வியாதி வர வாய்ப்பு இருக்கிறது. இதை வெவ்வேறு ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

இந்தியர்களுக்கு பாரம்பரியமாக ஜீன்களில் ஏதாவது மாறுபாடு இருப்பதன் மூலம் இம்மாதிரி சர்க்கரை நோய் வருகிறதா என்றும் ஆராய்ச்சி நடக்கிறது.

இதனால்தான் கணையத்திலிருந்து இன்சுலின் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சுரப்பதில் குறைபாடு வருகிறதா என்பதையும் ஆராய்கிறார்கள்.

இருந்தாலும் ஜீனில் அப்படி குறைபாடு இருந்தால், கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் ஒரே மாதிரியான பாதிப்பு இருக்கவேண்டும். அப்படி இல்லை. ஜீனில் பிரச்சனை இருந்தாலும் சூழல் உணவுப்பழக்கத்தால் அது சீக்கிரமே வந்திருக்கலாம் என்பதை உணரமுடிகிறது.

சர்க்கரை நோய் வந்தால் ஒருவருடைய உடலில் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதற்கு மூன்றிலிருந்து நான்கு மடங்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவரது நல்வாழ்வு பாதிக்கப்படும். சிலருக்கு சர்க்கரை பாதிப்பு இருப்பது தெரியும்.

ஆனால் அதைக் கண்ட்ரோல் பண்ண மாட்டார்கள். இதன் பலனாக அவர்களுக்குக் கொழுப்புச்சத்து அதிகரிக்கலாம்.

இப்படிப் பல பாதிப்புகள் உருவாகச் சாத்தியங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பொதுவாக உணவில் முக்கியமான அம்சம் அரிசி.

வடக்கில் சப்பாத்தி சாப்பிடும் போது அவர்கள் உட்கொள்ளும் எண்ணெயின் அளவு குறைவு. நடைமுறையில் அவா்கள் நடப்பது அதிகம். இங்கு அப்படியில்லை.

அரிசி மூலம் மாவுச்சத்து அதிகமாக உட்கொண்டு உட்கொண்டு பேங்க் பேலன்ஸைக் கரைக்கிற மாதிரி கணையத்தையே சோர்வடையச் செய்து விடுகிறோமோ என்கிற சந்தேகம் வருகிறது.

அதனால் கணையம் தத்தளித்துப் போய் சரியாகச் செயல்பட முடியாமல் பிரச்சினை வருகிறது. பாடப் புத்தகத்திலேயே இடம் பெற வேண்டிய சுகாதாரப் பிரச்சினை இது.

அந்த அளவுக்கு இளம் வயதிலேயே இதன் அவசியம் உணா்த்தப்பட்டால்தான், இருபது வருஷங்களுக்குப் பிறகு வருகிற தலைமுறை ஆரோக்கியமாக இருக்குமோ என்கிற உணர்வு தோன்றுகிறது.

‘ஹார்ட் அட்டாக்’ என்று எங்களிடம் வருகிற சில நோயாளிகளிடம் கேட்கிறபோது, ‘சர்க்கரை வியாதி’ இல்லை என்று சொல்வார்கள். பிறகு GTT எடுத்தால் சர்க்கரை வியாதி இருப்பது தெரியவரும்.

சர்க்கரை வியாதியால் எப்படி இதயம் பாதிக்கப்படுகிறது?

இதயத்திற்கு இரண்டு இரத்தக் குழாய்கள் வழியாக ரத்தம் போகிறது. சர்க்கரை வியாதி இருக்கிறவர்களின் இரத்தக் குழாய் பாதிக்கப்பட்டு ஒரு பகுதிக்கு ரத்தமே போகாமல் மாரடைப்பு வருகிறது.

இதில் பெரிய ஆபத்தான விஷயம்- இதில் கணிசமானவர்களுக்கு மாரடைப்பு வரும்போது வலியே தெரியாது.

உடலிலிருந்து மூளைக்குச் செய்தி கொண்டு போகும் நரம்பு மண்டலம் அளவுக்கு மீறிய சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டு விடுவதால் இப்படி வலியையே உணரமுடியாத ஆபத்து இம்மாதிாியான சைலண்டான மாரடைப்பை உணரமுடியாமல் ஒரு நோயாளி கஷ்டப்படுவது ஒரு கொடுமை.

அவர்களுக்கு மூச்சிரைப்பு இருக்கும். மூச்சு தடுமாறும். ரத்த அழுத்தம் கூடியிருக்கும்.

ஆனால் தனக்கு வந்திருப்பது மாரடைப்பு என்பது அவர்களுக்குத் தெரியாது. ‘சர்க்கரை நோயினால் இதயம் பாதிக்குமா?’ என்று கேள்வியை எழுப்புகிறவர்கள், முதலில் இதன் தீவிரத்தை உணர வேண்டும்.

இதைத் தடுக்க வேண்டுமானால் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருமாதத்திற்கொரு தடவையாவது சர்க்கரையின் அளவைச் சோதித்துக் கொள்வது அவசியம்.

உடம்புக்குள் உள்ள புற்றுநோய் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் நின்ற பிறகே சிலர் இதை உணர முடியும்.

இதைப் படிக்கிற வாசகர்கள் இதன் தீவிரத் தன்மையை உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நாற்பது, நாற்பத்தைந்து வயதுக்குள் டயாபடீஸ் வந்து மாரடைப்புடன் எங்களிடம் வந்த நோயாளிகள் அதிகம் என்பதால் இதைச் சொல்கிறேன். இவர்களில் பெரும்பாலானவர்கள் ‘மிடில் கிளாஸ்’ ‘லோயர் மிடில்கிளாஸ்’ வகுப்பினர்தான்.

நான்கைந்து குழந்தைகளுடன் குடும்பத் தலைவராக வந்து அட்மிட் ஆகிறவர்களைப் பார்க்கும்போது ஏற்படுகிற உணர்வினால்தான். இதை இவ்வளவு அழுத்தமாகச் சொல்கிறேன்.

சர்க்கரை உங்களது ரத்தத்தில் எந்த அளவுக்குக் கலந்திருக்கிறது என்பதில் இனியாவது கவனமாக இருங்கள். சோதித்துப் பாருங்கள். பாதிப்பைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுங்கள்.

வருவதற்கு முன்பு தடுப்பதுதான் சிறப்பு.

புகைப்பிடிப்பது, கூடுதலாக மதுபானங்கள் அருந்துவது வெறித்தனமான செயல்பாட்டில் காட்டும் ஆர்வம். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள்.

(தொடரும்…)

  • அகில் அரவிந்தன் தொகுத்த ‘இதயமே இதயமே’ நூலிலிருந்து…

02.03.2020   04 : 40 P.M

You might also like