மரியாதை எனக்கல்ல நாற்காலிக்கு!

சோ-வின் ‘ஒசாமஅசா’ தொடர்: 22
எழுத்தும், தொகுப்பும்: மணா 

வேலூரில் ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம்.

மொரார்ஜி பிரதமராக இல்லாத நேரம். அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து வேலூருக்குப் போனபோது அவருடன் நானும் போனேன்.

அவரை யாரும் புகழ்ச்சியாகப் பேசுவது அவருக்குப் பிடிக்காது. அப்படி யாரும் பேசினால் முதலிலேயே கண்டித்து அதைத் தவிர்த்து விடுவார். அன்றும் அப்படித்தான் இருந்தார்.

கார் வேலூரை நெருங்கிவிட்டது. ஊருக்குள் கூட்டத்திற்காக ஒட்டப்பட்டிருந்த வால்போஸ்டர்களைப் பார்த்த மொரார்ஜி, “கூட்டம் எத்தனை மணிக்குத் துவங்குவதாகப் போட்டிருக்கிறார்கள்?” என்று என்னிடம் கேட்டார்.

“ஆறரை மணிக்கு சார்” – சொன்னேன்.

நேரே ஒரு ஹோட்டலுக்குப் போய் சிறிது நேரம் இருந்தோம். ஆறு மணி ஆனதும் அவர் என்னிடம் கேட்டார்.

 “என்ன கூட்டத்திற்குக் கிளம்பலாமா?”

மற்றவர்கள் எல்லாம் “நீங்க பத்து மணிக்கு கூட்டத்திற்கு வந்தால் போதும். தமிழ்நாட்டில் பெரிய தலைவர்கள் அப்படி வருவதுதான் வழக்கம். முன்னாடி போனால் சரியான கூட்டம் வராது” என்று சொன்னதை அவர் ஏற்கவில்லை.

“போஸ்டரில் ஆறரை மணிக்குத் துவங்குவதாகப் போட்டுவிட்டு தாமதமாக நான் போனால் நன்றாக இருக்காது. போஸ்டரில் போட்டிருக்கிற நேரத்தைப் பார்த்துத் தானே மக்கள் வருவார்கள். அவர்களை ஏமாற்றக் கூடாது. நீங்கள் வந்தால் வாருங்கள். இல்லை என்றால் நான் கிளம்புகிறேன்” என்றவர், என்னிடம் “வா கிளம்பிடலாம்” என்றார். காரில் கிளம்பி விட்டோம்.

வேறு வழியில்லாமல் மற்றவர்களும் கிளம்பி விட்டார்கள். போகும்போது வழியில் இருக்கிற பிரபலமான ஒரு கோயில் வழியாக போக வேண்டும் என்றார்கள், கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள்.

“ஏன்… அந்த வழியை செலக்ட் பண்றீங்க?” – கேட்டேன்.

“கோயிலில் பெரியவருக்கு சிறப்பு மரியாதைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கிறோம்” என்றார்கள்.

“இவர் அதை கொஞ்சமும் விரும்பமாட்டார்” என்று சொல்லிப் பார்த்தேன். அவர்கள் கேட்கவில்லை. காரை கோயிலுக்கு முன்னால் நிறுத்தினார்கள். கோயில் வாசலில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை செலுத்தத் தயாராக இருந்தார்கள். காருக்கு அருகில் நெருங்கி வந்ததும் என்னிடம் கேட்டார் மொரார்ஜி.

“என்ன இது?”

“கோயிலில் மரியாதை கொடுக்கிறார்கள்”

“எனக்கா?”

“ஆமாம்…”

மறுக்கிற விதத்தில் அவர் தலையசைத்துவிட்டுச் சொன்னார்.

“நான் உண்மையானவனாக இருந்தால் கடவுளுக்கு நான் தான் மரியாதை பண்ணனும். பக்தியாய் இருக்கணும். அதை விட்டுவிட்டு கடவுள் சார்பில் எனக்கு மரியாதையா! என்ன வழக்கம் இது? நான் இதற்கு உடன்பட மாட்டேன். மனுசனுக்குக் கடவுள் மரியாதை கொடுப்பதா?” என்றவர், அர்ச்சகர்கள் அவரை நெருங்கி வந்த போதும் பிடிவாதத்துடன் மரியாதையை ஏற்க மறுத்துவிட்டார்.

கோயில் மரியாதை என்றதும் அதைத் தனக்கு மரியாதை என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. இவ்வளவுக்கும் அவர் மிகத் தீவிரமான ஆன்மீகவாதி.

இந்த நிகழ்ச்சி சிலருக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் மொரார்ஜியின் இயல்பு தெரிந்தவர்களுக்கு இதில் ஆச்சரியம் இல்லை.

ஒருமுறை டெல்லியில் நடந்த பிரஸ் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போயிருந்தேன். அப்போதும் மொரார்ஜி பிரதமராக இல்லை. நான் டெல்லியில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் வந்தது. மும்பையிலிருந்து மொரார்ஜி பேசினார். டெல்லிக்கு என்ன காரணத்துக்காக வந்திருக்கிறேன். எத்தனை நாட்கள் தங்கி இருப்பேன் என்று விசாரித்தார். சொன்னேன்.

“சரி… நாளைக்கு காலையில் மெட்ராசுக்குப் போறேன். நீ வந்தால் நன்றாக இருக்கும்” – என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. டெல்லியில் இருந்த நண்பர் கே.ஸ்ரீனிவாசன் மூலம் எப்படியோ விமான டிக்கெட் வாங்கி அன்று இரவே சென்னைக்குத் திரும்பி மறுநாள் காலை ஏர்போர்ட்டுக்குப் போய்விட்டேன்.

அன்றைக்கு மொரார்ஜிக்கு சென்னையில் ஒரு கூட்டம் இருந்தது. ஜனதா கட்சிக்காக அவர் பேசுவதாக இருந்தது. அப்போது தி.மு.க.வுடன் ஜனதா கூட்டணி வைத்திருந்தது.

ஏர்போர்ட்டில் என்னைத் தவிர யாரும் அவரை வரவேற்க வரவில்லை. ஜனதா கட்சிப் பிரமுகர்கள் யாரும் வரவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “என்ன… ஜனதா கட்சியில் இருந்து யாரும் வந்திருக்கிறார்களா?” என்ற அவர், நான் “இல்லை” என்றதும், என்னைப் பார்த்தபடி “எதுக்கு உன்னை வரச்சொன்னேன் புரிகிறதா?” என்றார் சிரித்தபடி.

“நான் உன் வீட்டிலேயே தங்கிக்கிறேன். வா போகலாம்” என்று சொல்லிக் கொண்டே என்னுடைய காரில் ஏறிக்கொண்டார். நேரே வீட்டுக்குப் போனோம். ஏற்கனவே அவர் ஒருமுறை என் வீட்டுக்கு வந்திருப்பதால் அவர் என்ன சாப்பிடுவார் என்பது எனக்குத் தெரியும். பழங்கள், காய்கறிகள், பூண்டு, பால்  – இதுதான் அவருடைய சாப்பாட்டு மெனு. அன்றும் அப்படித்தான் சாப்பிட்டார்.

ஜனதாவில் அன்றைக்கு இருந்த நெல்லை ஜெபமணி, ஆறுமுகசாமி, லட்சுமி கிருஷ்ணமூர்த்தி மூன்று பேரையும் போன் பண்ணி வீட்டுக்கு வரச்சொன்னேன். வந்தார்கள்.

அப்போது ஜனதா திமு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தாலும், தி.மு.க.வுக்காக தான் பிரச்சாரம் பண்ண மாட்டேன் என்று திடமாக சொல்லிவிட்டார் மொரார்ஜி. தி.மு.க.விலோ மொரார்ஜி தமிழகத்திற்கு வந்து ஒரு ஜனதா கட்சிக் கூட்டத்தில் பேசினால், ஒரு தி.மு.க. கூட்டத்தில் பேச வேண்டும். இல்லை என்றால் அவர் எங்கும் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

உடனே தமிழகத்தில் இருந்த ஜனதா கட்சித் தலைவர்களும் அதை ஆமோதித்து ஒதுங்கிவிட்டார்கள். மொரார்ஜி கலந்துகொள்ள இருந்த போஸ்டர்கள் கூடக் கிழிக்கப்பட்டு அன்று மாலையில் நடக்கவிருந்த கூட்டத்திற்கான அறிகுறியே தெரியாமல் பண்ணி விட்டார்கள்.

நெல்லை ஜெபமணியும் மற்றவர்களும், மொரார்ஜியிடம் இதைச் சங்கடத்துடன் விளக்கிச் சொன்னார்கள். கேட்டுவிட்டு தணிந்த குரலில் “இது எதிர்பார்த்ததுதான். அதனால்தான் சோவை டெல்லியில் இருந்து இங்கே கிளம்பி வரச் சொன்னேன்” என்ற மொரார்ஜி, என்னிடம் “இன்னைக்கு சாயந்திரமே பம்பாய்க்கு ஃப்லைட் டிக்கெட் வாங்கிட முடியுமா?” – கேட்டார்.

நானும் அவருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஏர்போர்ட்டுக்கு அவருடன் காரில் போனேன். அப்போது, “நான் ப்ரைம் மினிஸ்டராக இருந்தபோது எத்தனை தடவை என்னைப் பார்க்க வந்திருப்பே?” என்றார்.

“தெரியாது. பல தடவை வந்துருக்கேன்.”

“ஒரு தடவையாவது என்னைப் பார்க்க வர்றப்போ ஒரு பூச்செண்டோ, பொன்னாடையோ கொண்டு வந்திருக்கியா?”

“இல்லை”

“ஏன்… கொண்டு வரவில்லை?”

“அது ஒரு போலித்தனமான மரியாதை என்பது என்னோட அபிப்ராயம். அந்த வழக்கம் எனக்கில்லை. அதோடு அப்படியெல்லாம் நடந்து கொள்வது எனக்குக் கூச்சமா இருக்கும்.”

“ஏன்… இதைக் கேட்டன்னா நீ அன்னைக்கும் அப்படித்தான் வந்தே.. இன்றைக்கும் அப்படித்தான் வந்திருக்கே.. ஆனா இங்கே உள்ள மத்தவங்க எப்போ என்னைப் பார்க்க வந்தாலும் பொன்னாடை, பூச்செண்டோட தான் என்னைப் பார்க்க வந்திருக்காங்க. அவங்க இன்னைக்கு வரலை. அவங்க மரியாதை காட்டியது எனக்குக் கிடையாது. நான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

அவரிடம் எப்போதும் மனதில் உள்ளதைப் பேசலாம். விவாதம் பண்ணலாம். பிரதமர் பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்போதும் மாறாத ஒரே மனநிலைதான். “செய்ற வேலையை, கடமையைச் சரியா செய்யணும். அதற்குமேல் அதிலே ஈடுபாடு வந்து விடக்கூடாது” என்று சொல்வார். தான் சொன்னபடியே வாழ்ந்த உயர்ந்த மனிதர் அவர். ராமாயணத்தை உபன்யாசமாக அவரே பண்ணியிருக்கிறார்.

அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்னால் அவரைப் பார்த்தபோது கூட ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். அரசியலில் இருந்து முழுக்க ஒதுங்கி இருந்த அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது மிக மென்மையாகச் சொன்னார்.

“கடவுளை ‘ரியலைஸ்’ பண்ண முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து முயற்சி பண்ணிக் கொண்டே இருப்பேன்.”

பிரதமர் பதவி வரை பல பொறுப்புகளை வகித்த மொரார்ஜி கடைசி வரை வாடகை வீட்டிலும், அரசு ஒதுக்கித் தந்த வீட்டிலும் தான் வாழ்ந்தார் என்பதைவிட அவருடைய எளிமைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்?

(தொடரும்…)

01.03.2021 11 : 50 A.M

You might also like