தமிழ்நாட்டிலுள்ள எல்லா ஜெயிலும் எனக்குப் பழக்கம்!
ஏழாவது வகுப்பில் உட்கார்ந்தபடியே பார்த்தால் பக்கத்திலிருந்த பொட்டலில் பார்த்தக் காட்சி திகைப்பாக இருந்தது சிறுவனான மாயாண்டிக்கு.
கோரிப்பாளையம் அருகில் கள்ளுக் கடையை மூடக்கோரி மக்கள் கூட்டம் கூடி நின்று கத்துகிறது. போலீசார் அடிக்க அடிக்க கத்தல் வலுக்கிறது.
இருந்தும் கூட்டம் சிதறி ஓடி கள்ளுக் கடைகளுக்கு ஆவேசமாகத் தீ வைக்கிறது. போலீஸார் திமிறியக் கூட்டத்தைச் சுடுகிறார்கள்.
கொஞ்ச நேரத்தில் வெறிச்சோடி போன பொட்டலில் ரத்த சிந்தலோடு கிடந்தன ஏழு பிணங்கள். பார்த்துக் கொண்டிருந்த மாயாண்டிக்கு மனசுக்குள் ஏதோ கொழுந்தாக எரிகிற மாதிரி உணர்வு.
“நாமும் ஏதாவது செய்ய வேண்டும்…” நடுமுதுகில் சில்லுடுகிறபடி ஒரு உணர்ச்சி. கொஞ்ச நாட்களில் பகத்சிங், ராஜகுரு தூக்கிலிடப்பட்ட செய்தி கிடைத்ததும் கலங்கின முகத்துடன் மதுரையில் போன ஊர்வலத்தில் கருப்புக் கொடியுடன் மாயாண்டியும்.
வேதாரண்யம் போய் உப்பு அள்ளியதற்காக புளிய விளாரினால் அடிவாங்கிச் சிறைக்குப் போன மாயாண்டியின் அண்ணன் கங்கு தெறிக்கிற மாதிரி பேசின தலைவர்கள், பாரதியைப் போன்றவர்களின் எழுத்துக்களில் தெரித்த வெளிச்சம் எல்லாம் சேர்ந்து தூண்டிவிட, வெறுமனே இருந்த மாயாண்டியுடன் ‘பாரதி’ பட்டம் இணைந்தது.
வயதின் தளர்ச்சி உடம்பில் தெரிந்தாலும் குரலில் ஒருவித மிடுக்கு. வருடங்களைப் பின்னோக்கி சொல்கிறபோது பிசகாத ஞாபகம்.
உற்சாகத்தைத் தொற்ற வைக்கிறது அவரது பேச்சு.
“17 வயதிலேயே 1934-ல் காங்கிரஸில் சேர்ந்துட்டேன். அப்போ பெரியவங்க பலருக்குப் பத்திரிகைகளை படித்துக் காட்டுவதுதான் எனக்கு முக்கியமான வேலை.
தலைவர்கள் போராட்டச் செய்திகளை நோட்டீஸா எழுதி இருப்பாங்க. அதை ‘சைக்கிளோஸ்டைல்’ பண்ணி விடியற்காலையில் தெருத்தெருவா போய் சுவர்களில் ஒட்டுவேன்.
ஒரு மண்ணெண்ணெய் டின்னை அடிச்சு காங்கிரஸ் கூட்டம் பற்றித் தண்டோராப் போடுவேன். பாரதி பாடல்களை உரத்த குரலில் பாடுவேன். அதற்காகத்தான் எனக்கு ‘பாரதி’ பட்டம் கிடைச்சது.
1939, ஜூலை 8ம் தேதி மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பல ஹரிஜனங்கள், நாடார் சமூகத்தவருடன் “வந்தே மாதரம்”ன்னு கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தோம்.
வைத்தியநாதய்யர் கம்பீரமாக முன்னாடிப் போறார். அப்போ இந்த சமூகத்தவங்க நுழையக் கூடாதுன்னு வச்சிருந்தாங்க. அதை ஒரே நாளில் தகர்த்து மீனாட்சியம்மன் கோவிலில் நுழைந்து கும்பிட்டாங்க.. பொற்றாமரைக் குளத்தில் குளிச்சாங்க.. அதுக்கு நாங்க பட்டப்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. எண்பது பேருடன் போயிட்டு திரும்பினோம். அப்போ கோவிலில் டிரஷ்டியா இருந்த ஆர்.எஸ்.நாயுடு ஒத்துழைச்சாலும், திரும்பினதும் இன்னும் எதிர்ப்பு.
மீனாட்சியம்மன் “தீட்டுப்பட்டா..”ன்னு ஒரே பேச்சு. “சாமி இப்போ கோவிலில் இல்லை” என்று ஒரே கூப்பாடு. நடேசய்யர்னு ஒருத்தர் ஆகம விதிகளுக்கு மாறாக நடந்து போச்சுன்னு தமிழ்ச்சங்க ரோட்டில் மீனாட்சி சிலையை வைத்து, “மீனாட்சியம்மன் கோவிலிருந்து இங்கே வந்துட்டா”ன்னு வழிபட ஆரம்பிச்சாங்க.
வைத்தியநாத ஐயர் மீது கேஸ் போட்டாங்க.. ராஜாஜி முதல்வராக வந்ததும் யாரும் கோவிலுக்குள் நுழையலாம்னு சட்டம் போட்டதாலே அந்தக் கேஸ் அடிபட்டுப் போச்சு.
அப்போ இரண்டாம் உலக யுத்தம் வந்த நேரம். விருதுநகருக்கு பக்கத்தில் கன்னிச்சேரிங்கிற கிராமத்திலே “பட்டாளத்தில் சேராதே யுத்த நிதி கொடுக்காதே! வரி கொடுக்காதே”னு கத்தி பேசிட்டு இருந்தேன். போலீஸ் தொப்பி கண்ணில் படாததால் பேச்சில் கூடுதலான ஆவேசம். ஆனால் மப்டியில் இருந்த சி.ஐ.டி. போலீஸ் தகவல் கொடுத்து, என்னைக் கைது பண்ணி 2 மாதம் ஜெயிலில் வைத்திருந்து சிவகாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
என்னை விசாரித்த டெப்டி கலெக்டர் ஆர்.டி.சாரி 6 மாதத் தண்டனை கொடுத்து 50 ரூபாய் அபராதமும் போட்டதோடு, “உனக்கு ஏதாவது சொத்து இருக்கா?”னு கேட்டார். எனக்கு சுருக்கென்று இருந்தது.
“எனக்கும் சொத்து இருக்கு”ன்னேன். “எங்கே”ன்னு கேட்டார். “மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எதிரே இருக்கிற மங்கம்மா சத்திரம் என்னுடைய சொத்து… திருமலை நாயக்கர் மஹால் எங்க அப்பன் சொத்து… இந்த பாரத நாடு எங்க பாட்டன் சொத்து…” என்று பதில் சொன்னேன். கலெக்டருக்கு பொறுக்கலை.. உடனே சி கிளாஸ் கொடுத்து ஜெயிலில் என்னை களி திங்க வைச்சுட்டார்.
வெளியே வந்தபோது ஆகஸ்ட் புரட்சி நடந்துகிட்டிருந்தது. காந்தி, நேரு, பட்டேலைக் கைது பண்ணியதை எதிர்த்து நாடே கொந்தளித்துப் போராட்டம். தண்டவாளங்கள் உடைக்கப்பட்டு, தபால் ஆபீஸ்கள் எரிக்கப்பட்டன.
என்னைத் திரும்பவும் கைதுசெய்து மறுபடியும் இரண்டு வருஷம் ஜெயில். பாளையங்கோட்டை ஜெயில் இருக்குறப்போ எங்க அம்மா இறந்து விட்டதாக தகவல் வருது. போக முடியலை… சிறைக்குள்ளேயே நானும் சக தோழர்களும் அஞ்சலி செலுத்தினோம்.
என்னோட தங்கை, அண்ணன்மார் திருமணங்கள், அக்காவோட சாவு எதற்கும் போகமுடியாமல் ஜெயிலிலேயே கிடந்தேன். பிறகு 1944-ல் வெளியே வந்தேன். திரும்பவும் 45, 46 ஜெயில் 1947 – ல் சுதந்திரம் கிடைச்ச பிறகும் ஜெயில் வாசம் விடவில்லை. சென்னைக்கு வந்துவிட்டேன். 49-ல் காந்தியை கொன்னுடாங்கன்னு செய்தி கிடைத்ததும் சென்னையில் ஒரே கூச்சல் குழப்பம்.
“காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம்”னு ஒரு புரளியைக் கிளப்பி விட்டுட்டாங்க. ஜனங்க வெறிபிடிச்ச மாதிரி முஸ்லிம்கள் இருக்கிற பகுதிக்கு ஓடிக்கிட்டிருந்தாங்க. ஒரு காரிலே ஏறிப்போய் பல தெருமுனைகளில் நின்று உரத்த குரலில் “காந்தியைக் கொன்றது ஒரு இந்து” என்று சொல்லிக் கொண்டே போனோம். அதெல்லாம் எவ்வளவு டென்ஷனான காலம்?” என்று சொல்லிக்கொண்டு போகும் மாயாண்டி பாரதி, ‘ஜனசக்தி’ மற்றும் ‘தீக்கதிர்’ நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியிருப்பது சுமார் நாற்பத்தி ஐந்து வருஷங்கள்.
85-ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் ரஷ்யா சென்று வந்த இவர் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் ஜெயிலில் இருந்தது 16 வருஷங்களுக்கு மேல்.
“தமிழ்நாட்டிலுள்ள பல ஜெயில்களும் பழகிப் போய்விட்டது எனக்கு… ஜெயிலிலேயே வாழ்க்கையின் ஒரு பகுதி போய்விட்டது” ஆதங்கப்படுகிறவருக்குத் திருமணம் நடந்தது 36 வயதில். மனைவி பொன்னம்மாளை, “ஒரு குழந்தை மாதிரி நல்லா பேசும்..” என்கிறார் இந்தத் தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை.
ஐம்பது வருஷங்களுக்கு மேலாக கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஜீவா, பாலதண்டாயுதம் உட்பட பல தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியிருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி வருத்தத்துடன் சொல்கிறார்.
“கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்ததில் எனக்கு உடன்பாடில்லை… தேசியத்தையும், காந்தியைப் பற்றியும் அதற்காகப் பாடுபட்ட தியாகிகளைப் பற்றி பேசினாதாலோ என்னவோ, என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கிவிட்டார்கள்… இப்போது பத்து வருஷங்களாக தியாகிகளுக்காக பாடுபடுவதுதான் வாழ்க்கையா இருக்கு.
ஜீவா எவ்வளவு அருமையான, எளிமையான மனிதர்? அவர் மாதிரி மனுஷங்க இப்போ கம்யூனிஸ்ட் கட்சியில் ஏன் இல்லை? அல்லது அப்படி இருக்கிறவங்களுக்கு ஏன் மரியாதை இல்லை?
நாங்க எல்லாம் பதவி, பட்டம்னு எதையும் எதிர்பார்த்து இருக்கலையே?” கரகரப்பான குரலில் சொல்லும் மாயாண்டி பாரதியின் மேலமாசி வீதி வீட்டில் தங்கியிருந்து இசைக்குழு நடத்திக் கொண்டிருந்த பிள்ளைகள் பாவலர் வரதராஜனும், இளையராஜாவும்.
“இன்னும்… என்ன… இரண்டு வருஷம் இருக்கலாம்… அதுக்குள்ளேயே ஒரு ஆசை பத்திரிகைக்காரனா 50 வருஷத்துக்கு மேலே இருந்தவன்ங்கிற முறையில் பத்திரிகையாளர் பென்சனுக்கு முதல்வருக்கு விண்ணப்பித்திருக்கேன். தியாகி பென்ஷன் வாங்குறதாலே தயங்கினாங்க… பத்திரிகையாளர் பென்ஷன் கிடைச்சா அது கடைசி காலத்திலே எனக்குக் கிடைக்கிற கவுரவம் மாதிரி இருக்கும் பார்ப்போம்.”
குரல் தடுமாறுகிறது 81 வயதான மாயாண்டி பாரதிக்கு.
-2003 – ல் மணா எழுதிய ‘கனவின் பாதை’ நூலிலிருந்து…
25.02.2021 02 : 25 P.M
#MayandiBharathi #மாயாண்டி_பாரதி #பாரதி #தோழர்_மாயாண்டி #Bharathi #Mayandi_Bharathi