‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’: அவசியமான காதல் பாடம்!
பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் நாலைந்து காதலைக் கடந்துவிட வேண்டுமென்ற துடிப்பை இளைய தலைமுறையிடம் திரைப்படங்கள் ஊட்டிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், காதலால் ஒரு பெண்ணின் கல்வி நல்லவிதமாகத் திசை மாறுவதாகக் காட்டுவது நிச்சயம் பாராட்டத்தக்கது. இதுவே ‘கமலி ஃப்ரம் நடுக் காவேரி’ படம் குறித்து பாசிட்டிவ் டாக் பரவ காரணமாயிருக்கிறது.
ஃபீல்குட் திரைப்படங்கள் எடுக்கப்படுவதில் இருக்கும் சவாலைவிட, அதில் சமூகத்துக்குத் தேவையான கருத்தைப் புகுத்துவது இன்னும் கடினமானது. அதனை சிரமேற்கொண்டு முயற்சித்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர் துரைசாமி.
ஐஐடி கனவு!
அரசுப் பள்ளியொன்றில் தமிழ் வழியில் பயிலும் கமலிக்கு (ஆனந்தி) கல்வி பற்றிய எந்த கனவும் இல்லை. படித்து முடித்தவுடன் திருமணம் என்ற பெற்றோரின் (அழகம்பெருமாள் – ரேகா) இலக்கு பற்றி, எவ்விதக் கவலையும் இல்லாமல் பள்ளி சென்று வருகிறார்.
ஒருநாள் சிபிஎஸ்இ ப்ளஸ்டூ ரிசல்ட் பற்றிய செய்தி தொலைக்காட்சியில் ஓட, அதில் முதலிடம் பிடித்த அஸ்வின் (ரோஹித் சராஃப்) பேட்டியைக் காண்கிறார் கமலி. பார்த்தவுடன், அவருக்கு அஸ்வின் மீது காதல் பிறக்கிறது.
சென்னை ஐஐடியில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்வது அஸ்வினின் லட்சியம். அவர் அப்படிப்பில் சேர்வதை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிகிறார்.
அஸ்வினை சந்திக்க வேண்டுமானால் ஐஐடியில் சேர வேண்டுமென்று முடிவு செய்யும் கமலி, அதற்கான நுழைவுத்தேர்வு எழுதுவது பற்றி விசாரிக்கத் தொடங்குகிறார். மெதுவாக, ஓய்வு பெற்ற பொறியியல் பேராசிரியர் அறிவுடைநம்பியிடம் (பிரதாப் போத்தன்) பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.
கமலியிடம் இயல்பாகப் பொதிந்திருக்கும் கல்வித்திறன், அவரை பெரும் சிகரத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.
நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று சென்னை ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேரும் கமலி, அதன்பின் அஸ்வின் பற்றிய கனவில் மூழ்கி முதலாண்டில் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைகிறார். அதற்குள், ஒருதலைக் காதலால் அவர் ஐஐடி வந்த கதை அவ்வளாகம் முழுக்கப் பரவுகிறது.
அனைத்து மாணவ மாணவியர் மத்தியிலும் தனது காதல் வேடிக்கையாகிப் போனதை எண்ணி விரக்தியடைகிறார் கமலி. அந்த இடத்துக்குத் தான் பொருத்தமானவள் இல்லை என்று கருதி ஐஐடியை விட்டு வெளியேறுகிறார்.
மீண்டும் கமலி ஐஐடிக்குள் நுழைந்தாரா? அக்கல்வியை அவரால் எதிர்கொண்டு வெற்றியடைய முடிந்ததா என்பதைச் சொல்கிறது ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’.
ஐஐடிக்குள் நுழைவதே பெருங்கனவு என்று மாணவ சமூகம் கருதும் காலத்தில், காதலுக்காக ஒரு பெண் அதனைச் சாதிக்கிறார் என்று சொல்வது கமர்ஷியல் சினிமாவுக்கான கரு. ஆனால், அதனைத் திரையில் வெளிப்படுத்திய விதத்தில் இளைய தலைமுறைக்குத் தன்னம்பிக்கை பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜசேகர் துரைசாமி.
கமலியின் ‘காதல் கோட்டை’!
பார்க்காமலே காதல் எனும் விஷயத்தை திரையில் அபாரமாக வெளிப்படுத்திய திரைப்படம் ‘காதல் கோட்டை’. கிட்டத்தட்ட அதனை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், இப்படத்தின் நாயகிக்கு ‘கமலி’ என்று பெயரிட்டதாக எண்ண வேண்டியிருக்கிறது.
சந்தேகமேயில்லாமல், இத்திரைப்படம் ஆனந்திக்கு ஒரு அடையாளம். பள்ளி மாணவியாக குறும்பு செய்யும்போதும், ஐஐடிக்குள் நுழைந்தவுடன் பிரமிப்பு அடையும்போதும், அவமானத்தால் கூனிக் குறுகும்போதும், அனைத்தையும் கடந்து தனக்கான லட்சியம் எதுவென்று கண்டறிந்து பயணிக்கும்போதும், ஒரு பெண்ணின் தோற்றம் மற்றும் மனநிலை மாறிப்போவதைத் திரையில் பிரதிபலிக்கிறார்.
அஸ்வினாக நடித்த ரோஹித் சராஃபுக்கு இப்படத்தில் காட்சிகள் குறைவென்றாலும், ‘அமெரிக்க ரிட்டர்ன்’ மாப்பிள்ளை டைப் பாத்திரங்களை நினைவூட்டாத அளவுக்குத் தன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார். இந்தி நடிகர் என்பதால் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் அடுத்தடுத்து வில்லன் பாத்திரம் வாய்த்துவிடும் அபாயமும் அவருக்கிருக்கிறது.
அறிவுடைநம்பியாக வரும் பிரதாப் போத்தன் ’ஜஸ்ட் லைக் தட்’ வந்துபோனாலும், அப்பாத்திரத்துக்கு அபாரமாக உயிர் கொடுக்கிறார். அழகம்பெருமாள், ரேகா சுரேஷ், இமான் ஆகியோர் தவிர்த்து தெரிந்த முகங்கள் மிகக்குறைவு.
கமலியின் சகோதரர், அவரது தோழி, ஐஐடி விடுதி ரூம்மேட், பேராசிரியர்களாக நடித்த இரண்டு பேர், கிளைமேக்ஸில் இடம்பெறும் குவிஸ் போட்டியாளர்கள் என்று அனைவருமே மிகச்சரியான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.
பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததிலேயே பாதி வெற்றி கிடைத்துவிட்டது. மீதியை தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு கைக்கொண்டிருக்கிறது.
கலை இயக்குனர் தியாகராஜன், படத்தொகுப்பாளர் கோவிந்தராஜ், ஒளிப்பதிவாளர் ஜெகதீசன் லோகையன், இசையமைப்பாளர் தீனதயாளன் உள்ளிட்ட கலைஞர்கள் இயக்குனரின் பார்வைக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.
முழுக்க பெண் கலைஞர்களை மட்டுமே பின்னணி பாட வைத்து, திரைக்கதையை கமலி எனும் பாத்திரத்தின் ‘ஆட்டோகிராப்’ ஆக மாற்றியிருக்கிறார் தீனதயாளன். அடுத்தடுத்து இதேபோன்ற வாய்ப்புகள் அமைந்தால், நிச்சயம் தனக்கான இடத்தைப் பிடிப்பார்.
இயல்பான லொகேஷன்களில் படம்பிடித்தாலும், இறுதியில் வரும் குவிஸ் போட்டி செட் மனதோடு ஒட்டிக்கொள்கிறது.
காதலும் லட்சியமும்!
‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ திரைக்கதை வழக்கமான கமர்ஷியல் சினிமா இலக்கணத்துக்குள் அடங்குவதில்லை. ஆனாலும், ‘சாதனையாளர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள்தான்; அவர்கள் முயற்சி அசாதாரணமானது’ என்று திரைக்கதை தொடங்கும்போதே மைய இழையைச் சொல்லிவிடுகிறார் இயக்குனர்.
கமலி தான் கற்ற கல்வியை ‘அப்ளை’ செய்கிறவர் என்பதைக் காட்டும்விதமாக வெடிக்கு நெருப்பு வைக்கும் காட்சியும், ஏபிசிடி வாயிலாக ஐஐடி நுழைவுத்தேர்வின் அடிப்படையை விளக்கும் காட்சிக்கோர்வையும் திரைக்கதையில் ‘ஆஹா’ சொல்ல வைக்கும் இடங்கள்.
அதேபோல, தனது காதல் சக மாணவர்களுக்குத் தெரிந்து அவமானத்தால் கூனிக்குறுகிப் போகும் கமலி வெறுமனே நம்பியின் வீட்டில் தனது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு லட்சியத்தைக் கண்டறியும் காட்சி, மேலாண்மை வகுப்புகளில் சொல்லப்படும் பாடங்களைவிட உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறது.
தமிழ் சினிமாவில் வழக்கமாக வகுப்பறைகளைக் காட்டுவது போலல்லாமல், நிஜமாகவே ஐஐடி வளாகத்துக்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகிறது திரைக்கதை. படத்தின் இறுதியில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை நீளும் ‘வினாடிவினா’ நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே இருந்தாலும், ரசிகர்கள் கமலியின் மனநிலையை உணர வைத்ததில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.
மிக முக்கியமாக, கமலியின் பயணம் தொடர்கிறது என்பதாகக் காட்டியிருப்பது அருமை.
எந்த திரைக்கதை இலக்கணத்துக்கும் அடங்காமல், உணர்ச்சிகரமான கொந்தளிப்புகள் எதுவுமில்லாமல், வழக்கமான கமர்ஷியல் அம்சங்களைத் துறந்து நிற்கிறது ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’. அவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் கண்டிப்பாக ‘ஸ்லோ ட்ராமா’ தான்.
ஆனாலும், ‘ரோஜா’ படம் பார்த்துவிட்டு அன்றைய தலைமுறை கம்ப்யூட்டர் சயின்ஸ் பக்கம் கவனத்தை திருப்பியதுபோல ஐஐடி இருக்கும் திசை நோக்கி அரசுப்பள்ளி மாணவர்களும் நடை போடலாம் என்பதில் முழுக்கவனத்தையும் கொட்டியிருக்கிறார் ராஜசேகர் துரைசாமி. அவரது நோக்கத்திற்கும், அதனை எவ்வித நெருடல்களும் இல்லாமல் காட்சிப்படுத்தியதற்கும் மிகப்பெரிய ‘சபாஷ்’!
- பா.உதய்
25.02.2021 04 : 05 P.M