எம்.ஜி.ஆர். மன்னிப்பு கேட்டது ஏன்?
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர் – 25
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சிறு பிராயத்தில் மக்கள்திலகம் சேர்ந்தபோது அவருக்குக் குருவாக இருந்து நடிப்பு, இசை, நடனம், சண்டைப் பயிற்சி என்று எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தவர் காளி என்.ரத்தினம்.
அவரிடத்திலும், அவரது மனைவி சி.டி.ராஜகாந்தம் அம்மையார் இடத்திலும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் இவருக்கு எப்போதும் உண்டு.
சினிமா உலகில் வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது என்பது அநேகருக்குத் தெரியும். அப்படிப்பட்ட ஆரம்ப காலச் சூழ்நிலையில் இவர்கள் பெரிதும் இவருக்கு உதவி இருக்கிறார்கள்.
ராஜகாந்தம் அம்மையாரை இவர் ‘ஆண்டவனே’ என்றுதான், எங்காவது பார்த்துவிட்டால் அழைப்பார். அதேபோல அந்த அம்மையாரும் நம் தலைவரை ‘ஆண்டவனே’ என்று தான் அழைப்பார்.
ஏறக்குறைய இவருக்கும் அந்த அம்மையாருக்கும் ஒரே வயது தான். இருந்தும் இவரை அவரும், அவரை இவரும் ரொம்பவும் மதித்து நடந்தார்கள்.
இந்த அம்மையாரின் மருமகன் தான் திருச்சி லோகநாதன். இவர் முதலில் ஜூபிடர் தியேட்டரில் நடிகராகச் சேர்ந்து, பின் பாடகராக மாறியவர்.
மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நம் தலைவர் நடித்தபோது அங்கிருந்த லோகநாதனுக்கும் இவருக்கும் அதிகப் பழக்கம். படப்பிடிப்பு இல்லாதபோது இருவரும் கேரம் விளையாடுவார்கள். அப்படி விளையாடும்போது கூட ‘தப்பான ஆட்டம் கூடாது, கூடாது’ என்பதுதான் நம் தலைவரின் உறுதியான கருத்தாக இருக்குமாம். ‘காய்களை அடிப்பது என்ன பெரிய கம்ப சூத்திரம். ஒழுங்காக அடிப்பது தான் முக்கியம்’ என்றெல்லாம் அப்போது சொல்வாராம்.
லோகநாதனிடம் அப்போது ஒரு குதிரை வண்டி இருந்தது. அதில் நம் அன்பு நாயகரை சேலத்தில் அவர் தங்கியிருந்த இருப்பிடத்தில் லோகநாதன் அவர்கள் கொண்டுவந்து விட்டுப் போவது வழக்கம்.
திருச்சி லோகநாதன் பாடல் ஒன்று ‘நாடோடி மன்னன்’ படத்தில் நமது தலைவரால் விரும்பிச் சேர்க்கப்பட்ட பாடல். அந்தப் பாடல் இப்போது எனக்கு நினைவில் இல்லை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் தான் அந்தப் பாடலை எழுதியவர் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.
இந்தப் பாடலின் சில வரிகள் அன்றைய காங்கிரஸ் அரசை விமர்சிப்பதுபோல் இருப்பதாகக் கருதி வெட்டித் தள்ளி விட்டார்கள். அதற்காகப் பின்னர் திருச்சி லோகநாதனிடம், தான் ஏதோ தவறு செய்துவிட்டதைப்போல், பாடல் இடம்பெற முடியாமைக்காக மன்னிப்புக் கேட்டார் இந்தத் தோட்டத்து தூயவர்.
உண்மையில் அவருக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை. இருந்தாலும் அவரது பெருந்தன்மை என்பது இதுதான். தான் நேரடியாகச் சம்பந்தப் படவில்லை என்றாலும், தான் ஒருவருக்குக் கொடுத்த வாய்ப்பு அவருக்கு முழுமையாக எட்டவில்லை என்கிறபோது ஏற்படுகிற மனநிலை அது.
தலைவர், திருச்சி லோகநாதன் அவர்களோடு கேரம் விளையாடியதை மட்டும் தான் முதலில் குறிப்பிட்டேன். இப்படி அவர் விளையாடுகிற போது நடந்து கொள்கிற விசித்திரமான பழக்கங்கள் நிறைய உண்டு….
02.10.1988
(தொடரும்…)