கவியரசர் கண்ணதாசன்!

கவியரசர் கண்ணதாசன் கதை – வசனம் – பாடல்கள் எழுதிய ஒரு படம், படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிலேயே நின்றுபோனது.

அந்தப் படம் ஒரு வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்ததால், அந்தப் படத்தின் கதையும் அதற்கு எழுதிய இரண்டு பாடல்களும் கவிஞரின் நினைவில் அப்படியே பதிந்துபோனது.

அந்தக்கதை இதுதான்- ஒரு அழகான கிராமம். அங்கே அருகருகே இரண்டு வீடுகள். அந்த இரண்டு வீடுகளுக்கும் வாசல் பகுதியிலும், பின் பகுதியிலும் அழகான பூந்தோட்டம். ஒரு வீட்டில் ஒரு சிறு குடும்பம் தலைமுறை தலைமுறையாய் வசித்து வருகிறது.

தற்போது அங்கே ஒரு கணவன்-மனைவி, அவர்களின் இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். அந்த இரண்டு பெண்களும் திருமண வயதை அடைந்தவர்கள்.

பக்கத்து வீட்டிற்கு ஒரு இளைஞன் அவனது பெற்றோருடன் குடி வருகிறான். அந்த இளைஞன் ஒருநாள் அவர்கள் வீட்டு தோட்டத்தில் நின்று கொண்டிருக்கும்போது, பக்கத்து வீட்டில் இருந்து ஒரு அற்புதமான பாடல் கேட்கிறது. ஆர்வம் தாங்காமல் எட்டிப் பார்க்கிறான்.

பக்கத்து வீட்டில் ஒரு அழகான இளம்பெண், பூப்பறித்துக் கொண்டே பாடிக்கொண்டு இருக்கிறாள். அந்தப் பாட்டில் மனதைப் பறிகொடுத்து விடுகிறான். தினமும் அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் இருந்து வரும் பாட்டுக்காக காத்துக் கொண்டிருக்க ஆரம்பிக்கிறான்.

ஒரு கட்டத்தில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பி, தன் பெற்றோரைப் பெண் கேட்கச் சொல்கிறான். பெண்ணின் பெற்றோர் ஏதோ சொல்ல வரும்போதெல்லாம், “எங்களுக்கு உங்களைப் பற்றி எல்லாமும் தெரியும்” என்று அவர்களை பேச விடாமல் செய்து விடுகிறார் அந்த இளைஞனின் தந்தை.

திருமணம் நடக்கிறது. முதல் நாள் இரவில் அந்த இளைஞன் அவளை பாடச்சொல்ல, அப்போதுதான் அவள் வாய்பேச முடியாதவள் என்று தெரியவருகிறது. அதிர்ச்சி அடையும் அவன் கோபத்துடன் அவளிடம் ஏதோ கேட்கப் போகும்போது, வெளியே இருந்து அதே பாட்டு கேட்கிறது.

வேகமாக அவன் அந்த அறையை விட்டு வெளியே வந்து பார்த்தால் அவன் மனைவியின் தங்கை பாடிக்கொண்டிருக்கிறாள். அதே இனிமையான குரல்.

அக்கா பூப்பறிக்கும் போது தங்கை பாடுவாள், அந்தப் பாட்டினால் ஈர்க்கப்பட்டு அக்காவும் மவுன மொழியில் மனதுக்குள் பாடி, தங்கை பாடுவதற்கேற்ப வாயசைப்பாள் என்பது தெரியவருகிறது. மனைவியை பிரிய நினைக்கிறான். தங்கை அவனிடம், தன் அக்காளுக்கு வாழ்வு கேட்டு கெஞ்சுகிறாள்.

“உன் பாட்டில் மனம் பறிகொடுத்து, அதைப் பாடியது உன் அக்கா என்று நினைத்து அவளை திருமணம் செய்து கொண்டேன். நீ திருமணம் செய்துகொள்ளாமல் எங்கள் கூடவே இருந்து தினமும் பாட ஒப்புக்கொண்டால் உன் அக்காளுடன் வாழ்கிறேன்” அன்று அவன் சொல்லி விடுகிறான்.

வாய்பேச முடியாத அக்காவுக்காக தங்கை ஒத்துக் கொள்கிறாள். இந்த நிலையில் அக்காவுக்குக் குழந்தை பிறக்கிறது. அக்காவின் குழந்தைக்கு தங்கை தாலாட்டுப் பாடுகிறாள். இதுதான் பாட்டுக்கான சூழல்.

கவிஞர் எழுதிய பாட்டின் பல்லவி இது…
“தாய் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
தாய் தூங்கத் தாலாட்டு
நீ பாட வேண்டும்
நீ பாடும் தாலாட்டை
தாய் கேட்க வேண்டும்
தன் நிலை மாறி அவள்கூட
மொழி பேச வேண்டும்”

– அந்தப் படம் நின்று போனதால், அதை அப்படியே விட்டுவிட்டார். பின்நாளில் ‘பாலும் பழமும்’ படத்திற்கு பாடல் எழுத அமர்ந்தபோது, பாட்டுக்கான சூழல் சொல்லப்பட்டது. முன்பு தாலாட்டாக தான் எழுதிய பாடலை, இந்த இடத்தில் காதல் பாட்டாக மாற்றி எழுதினால் என்ன என்று கவிஞருக்குத் தோன்றியது. பிறகு அதையே மாற்றி எழுதித் தந்தார், அந்தப் பாடல்தான் இது..

“நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும்
பொழுதோடும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள்யாவும்
நானாக வேண்டும்”

– வாய்பேச முடியாத தன் அக்கா மனவருத்தத்தில் இருக்கும்போது, அவள் மனதுக்கு ஆறுதலாக தங்கை பாடுவதாக இதேப் படத்திற்கு கவிஞர் இன்னொரு பாடல் எழுதி இருந்தார். அதன் பல்லவி-

“மண்ணில் கிடந்தாலும்
மடியில் இருந்தாலும்
பொன்னின் நிறம் மாறுமோ…”

– என்று தொடங்கும் பாடல். பின்நாளில் ‘பாசமலர்’ படத்திற்கு அதே டியூனுக்கு வார்த்தைகளை மாற்றி எழுதித் தந்தார். அந்தப் பாடல்தான்…

“மலர்ந்தும் மலராத
பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே” என்ற பாடலாகும்.

“ஏன் பிறந்தாய் மகனே… ஏன் பிறந்தாயோ…” – பட்டிதொட்டி எங்கும் ஒலித்த இந்தப் பாடல் இன்றும் கண்ணதாசனின் புகழ் பாடிக்கொண்டிருக்கின்ற பாடல்களில் ஒன்று.

இந்தப் பாடல் கண்ணதாசனின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பாடல் என்றால் நம்ப முடிகிறதா?

– நன்றி முகநூல் பதிவு.

20.02.2021 03 : 25 P.M

You might also like