‘தெனாலி’யில் கண்ணீரை மறந்த கமல்ஹாசன்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கமல்ஹாசன், தேவயானி, ஜோதிகா, ஜெயராம் உட்பட பலர் நடித்திருந்த படம், தெனாலி. 2000 -மாவது வருடம் வெளியான இந்தப் படத்தில்

ஈழத்தமிழராக நடித்திருந்தார் நடிகர் கமல்ஹாசன். படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதி இருந்தார். ஹாலிவுட் பிளாக் காமெடி படமான ‘வாட் எபெளவுட் பாப்?’ என்ற படத்தின் பாதிப்பில் உருவாக்கப்பட்ட படம் இது.

அந்த ஹாலிவுட் படம் ஹிட்டாகவில்லை என்றாலும் தெனாலி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. காரணம் கமல்ஹாசன்!

இதில் நடிகர் கமலுக்கு ஈழத் தமிழ்ப் பயிற்சியளித்தவர், அப்துல் ஹமீது. இந்தப் படத்துக்கு தெனாலி என்ற டைட்டிலை பரிந்துரைத்தவர் ரஜினிகாந்த் என்று கூறியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

படத்தில், ‘எல்லாம் பய மயம்..’ என்று கமல்ஹாசன் பேசும் வசனம் இன்றுவரை பிரபலமாகி வருகிறது. அதிகம் ஹிட்டடித்த யூடியூப் காட்சிகளில் இதுவும் இருக்கிறது. மூச்சுவிடாமல் கமல் பேசும் அந்த வசனம் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்று.

டாக்டரான ஜெயராம் முன் அமர்ந்து அவர் பேசும் அந்தக் காட்சியின் போது கமல்ஹாசன் கண்களில் இருந்து கண்ணீர் வரவேண்டும். முதலில் இந்தக் காட்சியை ஏவி.எம் ஸ்டூடியோவில் செட் அமைத்து எடுத்திருந்தனர். படம் முடிந்து ரிலீஸ் தேதியும் அறிவித்து விட்டனர்.

கமல்ஹாசன் அவசரம் அவசரமாக டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான் கவனித்தார். படத்தின் முக்கிய காட்சியான அதில் நடிகர் கமல்ஹாசன் கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், ‘எப்படி இது மிஸ்சாச்சு? எப்படி கவனிக்காம விட்டீங்க? என்றவர், மீண்டும் அந்தக் காட்சியை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

இனி புதிதாக செட் அமைத்து படமாக்க நேரமில்லை என்பதால், இரவோடு இரவாக இடம் தேடி அலைந்தது படக்குழு. பிறகு சென்னை லீ கிளப்பின், ரிசப்ஷனை, அப்படியே டாக்டர் ஜெயராமின் அறையாக மாற்றி படப்பிடிப்பை நடத்த முடிவு செய்து விட்டனர்.

மலையாளப் படம் ஒன்றின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த நடிகர் ஜெயராமிடம் கால்ஷீட்டை மாற்றச் சொல்லி, அவசரமாக அழைத்து வந்து, அந்த பயமயம் காட்சியை மீண்டும் ஷூட் செய்தனர். அந்தக் காட்சிதான் இப்போது, அந்தப் படத்தில் வருவது.

ஒரு சின்ன தவறுதான், அதை சரியாக கவனித்து மீண்டும் படமாக்கச் சொன்ன கமலின் பெர்பக்‌ஷனுக்கு இது உதாரணம்.

– அழகு

20.02.2021 03 : 55 P.M

You might also like