கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-16

“எம்.ஜி.ஆரை பொறுத்தவரை ஒரே நாளில் ஓ.கே. ஆன பாட்டும் உண்டு. அதேபோல ஒரு மாதம் ஆகியும் ஓ.கே. ஆகாத பாட்டும் உண்டு. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்ல நான் மூணு பாட்டு எழுதினேன். அதுல ஒரு பாட்டு அவர் ஓ.கே. பண்றதுக்கு ஒரு மாசம் ஆச்சு” என்று சொல்லும் முத்துலிங்கம், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களின் ஆஸ்தான கவியாக இருந்தவர்.

இதுவரை 1500-க்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதி இருக்கிறார். புரட்சித் தலைவருடன் இவர் கடந்து வந்த பல நெருக்கமான தருணங்களை இந்த வாரமும் தொடர்கிறார் முத்துலிங்கம்.

“அதாவது சிச்சுவேஷன் என்னன்னா… பாண்டிய நாடு சோழ நாட்டுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறது. அப்படி அடிமைப்பட்டுக் கிடக்கும் பாண்டிய நாட்டு மக்களைப் போருக்குத் தயார் செய்கிற மாதிரி உத்வேகம் கொடுக்குற எழுச்சி மிகுந்த பாடல். ஒரு வாரம் உட்கார்ந்து நாலு பல்லவி எழுதிக் கொண்டு போய் காட்டுவோம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லி மறுத்திடுவார்.

“மண்ணுலகை காக்கும் களம் ஏர் களம்
நாட்டின் மானத்தை காக்கும் களம் போர் களம்”

இந்தப் பல்லவியை எழுதிக் கொண்டுபோய் கொடுத்ததும், “வரி நல்லா இருக்கு ட்யூன் சரி இல்ல” என்று சொல்லிவிட்டார். அப்புறம் அடுத்த பல்லவி எழுதினேன்.

“விண்ணில் ஆடி வரும்
மேகம் பாடி வர
மண்ணில் வாழ்வு வரும் ஏர் முனையில்
வெற்றி தேடி வர வீரம் மானம் பெற
வேலில் பாட்டெழுது போர் முனையில்”

– இப்படி ஒரு பல்லவி எழுதிக் கொடுத்ததும், “இதுல கவித்துவம் இருக்கு ஆனா நான் நினைக்குறது வரல” என்றார். நான் நினைக்கிறது வரலன்னா, அவர் என்ன நினைக்கிறார்னு சொல்லணும்ல… அதைச் சொல்ல மாட்டார். அதைப் புரிஞ்சுகிட்டு யார் எழுதுறார்களோ அவர்கள் தான் தொடர்ந்து அவர் படத்துல பாட்டெழுத முடியும்.

இப்படியே நிறைய பல்லவி எழுதி வாரா வாரம் கொண்டுபோய் கொடுத்தேன். எதுவும் ஓ.கே. ஆகல. இப்படியே மூணு வாரம் போயிடுச்சு. நாலாவது வாரம்.

இந்த வாரத்துக்குள்ள ட்யூன் ஓ.கே. செஞ்சு பாட்டு ஷூட் பண்ணியாகணும். ஏன்னா… ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படப்பிடிப்பு முழுதும் மைசூர் அரண்மனையில் தான் நடந்தது. அந்த நேரத்தில் தான் அரண்மனையை அரசாங்கம் தங்கள் வசம் எடுத்துக் கொண்டது.

எம்.ஜி.ஆர். படப்பிடிப்புக்காக இரண்டு மாதங்கள் அவகாசம் அளித்திருந்தனர். அந்த வாரத்துடன் அந்த அவகாசம் முடிவடைகிறது. அதனால் ஒரு வாரத்துக்குள் ஒரு பாடல் காட்சியையும், ஒரு சண்டை காட்சியையும் எடுத்து முடித்தாக வேண்டும்.

எம்.ஜி.ஆர். மைசூர் படப்பிடிப்பில் இருந்தார். விஸ்வநாதன் அண்ணன் கொடுத்த ட்யூனைகளை எடுத்துக் கொண்டு நாலஞ்சு பல்லவியோட எம்.ஜி.ஆரை சந்திக்க நான் மைசூர் புறப்பட்டேன்.

“எந்தப் பல்லவியை ஓ.கே. பண்றாரோ அதுக்கான சரணத்தையும் எழுதிக் கொடுத்து ஓ.கே. வாங்கிட்டு வந்துடு, ரிக்கார்ட் பண்ணிடலாம்” என்றார் எம்.எஸ்.வி.

அஞ்சு பல்லவி எழுதி எடுத்துட்டு போனேன். அதுல ஒன்றை மட்டும் தவிர்த்துவிட்டு “நாலுமே நல்லா இருக்கு. இந்த நாலு பல்லவியையும் ஒரு பாட்டாக மாற்றிவிடு” என்றார்.

“நாலுமே பல்லவி… எப்படி அதை ஒரு பாட்டா மாத்துறது? ட்யூனோட செட் ஆகாதே” என்றேன். “எல்லாம் ஆகும். அது ஒரு மான்டேஜ் ஸாங் என்று எம்.எஸ்.வி.யிடம் சொல்லு அவர் புரிந்து கொள்வார்” என்றார்.

அந்தப் பாட்டோட பல்லவி என்னன்னா…

“தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓடவைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்திடுவோம்”

சரணம்:

“கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரம் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்”

இப்படி எழுதின வரிகளைப் பார்த்துப் பாராட்டிவிட்டு, “இந்தக் கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் என்ற வரியை மட்டும் மாத்திடேன்” என்றார் எம்.ஜி.ஆர். “ஏன்?” என்றதற்கு, “நமது கொடின்னா… நம்ம அரசியல் கொடின்னு சென்சாருல கட் பண்ணிட வாய்ப்பு இருக்கு, அதனால, இது பாண்டிய நாட்டு மக்கள் பாடுற பாட்டு என்பதால், கோட்டையிலே மீன் கொடி பறந்திட வேண்டும்னு மாத்திக்க என்று எம்.ஜி.ஆர். சொன்னார்.

“அது ட்யூனுக்கு செட் ஆகாது என்பதால கோட்டையிலே மகர கொடி பறந்திட வேண்டும்னு மாத்திக்கிறேன்னு” அவர்கிட்ட சொன்னேன். அவரும் ஓ.கே.னு சொல்லிட்டார்.

ஆனா இது எனக்கு உறுத்தலாவே இருந்துச்சு. அதனால் சற்று யோசனையுடனேயே இருந்தேன். அதைப் புரிந்து கொண்டவர், “ஏன் ஒருமாதிரி இருக்க?” என்றார்.

“இல்லண்ணே… மகர கொடினு பாடினா நீங்க வேற ஏதோ ஒரு சிச்சுவேஷனுக்கு பாடுற மாதிரி ஆகிடாதா? கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்னு நீங்க பாடினா தான் அதுல ஒரு அழுத்தம் இருக்கும். ஆடியன்ஸ் கைதட்டுவாங்க. மக்கள் மத்தியில ஒரு எழுச்சியை அது உண்டாக்கும். மகர கொடியில அந்த எழுச்சி இல்ல” என்றேன்.

சற்று யோசித்தவர்… “சரி… மகர கொடின்னு பாடி ஒன்னு எடுத்து வச்சுக்குங்க. நமது கொடின்னு பாடி ஒன்று எடுத்து வச்சுக்குங்க. நான் சொன்னேன்னு விஸ்வநாதன்கிட்ட சொல்லிடு” என்றார்.

பாடல் பதிவின்போது நமது கொடி பறந்திட வேண்டும் என்று மட்டும் தான் எடுத்தோம். எம்.ஜி.ஆர். பாட்டை கேட்டுட்டு “ஏன் மகர கொடினு எடுக்கல” என்று விஸ்வநாதண்ணன் கிட்ட கேட்டாரு. “அப்படி எதுவும் முத்துலிங்கம் சொல்லலியே” என்று விஸ்வநாதண்ணன் சொன்னதும் என்னை கூப்பிட்டுவிட்டார் எம்.ஜி.ஆர்.

நான் போனதும், “என்னய்யா… நமது கொடின்னு தான் இருக்கு மகர கொடினு ஏன் எடுக்கல” என்று சற்று எரிச்சலுடன் கேட்டார்.

“தலைவரே… நமது கொடின்னே இருக்கட்டும். சென்சார்ல கட் பண்ண மாட்டாங்க தலைவரே”னு சொன்னேன். “உனக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா?” என்றார். “இல்ல தலைவரே… எம்.ஜி.ஆர். ஒரு படத்துல இப்படி பாடப்போறாரு. பாடல் வரிகளை இப்படி வச்சுக்கலாமா? இல்ல வேற மாத்தணுமா”னு சென்சார் அதிகாரிகிட்டயே கேட்டுட்டேன். எம்.ஜி.ஆர். தானே பாடுறாரு எங்களுக்கு ஒன்ணும் ஆட்சேபணை இல்ல. அப்படியே இருக்கட்டும்னு சொல்லிட்டார்” என்றேன்.

“அப்படியா…!” என்று மட்டும் கேட்டார்.

என்னை எப்பவும் எதுவும் அவர் சொல்லமாட்டார். அன்று அவருடன் டைரக்டர் சங்கர், நம்பியார் எல்லாம் இருந்தனர். நான் போன பிறகு, “முத்துலிங்கம் நல்ல கவிஞர் மட்டுமில்ல, நல்ல நண்பரும் கூட. பாடல்ல ஏதாவது பிரச்னை வந்தா மற்ற கவிஞர்கள் இதுமாதிரி போய் கேட்பாங்களா? அதனால தான் முத்துலிங்கம் ஆத்மார்தமான ஆளு” என்று என்னைப் பாராட்டி அவர்களிடம் பேசி இருக்கிறார். டைரக்டர் சங்கர் இதை என்னிடம் பின்னர் பகிர்ந்து கொண்டார்.

அதேபோல இந்தப் பாடல் ஓ.கே. ஆக ஒரு மாதம் ஆனபோது, பாடலாசிரியரை மாற்றிவிடலாம் என்று பலரும் எம்.ஜி.ஆரிடம் சொல்லி இருக்கின்றனர். அவர் மறுத்துவிட்டார்.

அவரிடம் உள்ள ஒரு குணம் என்னவென்றால், ஒரு பாடலை எழுதும்படி ஒருவரிடம் சொல்லிவிட்டால் எவ்வளவு நாட்கள் ஆனாலும், எக்காரணத்தைக் கொண்டும் பாடலாசிரியரை மட்டும் மாற்றவே மாட்டார்” என்று பெருமிதத்துடன் சொன்னார் முத்துலிங்கம்.

(தொடரும்…)

20.02.2021    01 : 40 P.M

You might also like