புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்குக் கெடுவும், தமிழிசையின் கூடுதல் பொறுப்பும்!
புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்குத் தொடர்ந்து எத்தனை சிக்கல்களைத் கொடுத்துக் கொண்டே இருந்தது மத்திய அரசு?
ஒருபுறம் ஆளுநரான கிரண்பேடியின் அன்றாட நெருக்கடிகள்; இன்னொரு புறம் காங்கிரசிலிருந்து ஆட்களை இழுத்துக் கொண்டே இருந்தார்கள்.
ஆட்டுவிக்கிறவர்கள் பலமாக இருக்கும்போது இதெல்லாம் நடக்காமல் இருக்குமா?
இந்தச் சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி முற்றிய சமயத்தில் ஆளுநரான கிரண்பேடியைப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனை நியமித்ததைப் பல பேர் வரவேற்றிருக்கிறார்கள்.
இருந்தாலும், இந்தச் சமயத்தில் தமிழிசையும் இன்னொரு கிரண்பேடி மாதிரி அதே கெடுபிடிகளைத் தொடருவாரா? அதிலும் காங்கிரஸ் ஆட்சிக்குச் சிக்கல் வந்த நேரத்தில் இந்த நியமனம் நடந்திருக்கிறது.
அவரும் பதவி ஏற்றதுமே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தன்னுடைய ஆதரவு பலத்தை நிரூபிக்க கெடு விதித்திருக்கிறார்.
22 ஆம் தேதி கெடு விதிக்கப்பட்டிருக்கிறது.
அதற்குள் என்ன மாற்றங்களும் அதிரடியாக நிகழலாம். ஏற்கனவே அண்மையில் தி.மு.க.வுடன் சிறு உரசல் ஜெகத்ரட்சகன் மூலம் ஏற்பட்டுச் சமாதானம் ஆவதற்குள் மறுபடியும் இப்படியொரு சிக்கல்.
தமிழர்கள் அதிகம் நிறைந்த யூனியன் பிரதேசத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழிசையே ஆளுநராக நியமித்திருப்பதும் தற்போதைக்கு ஒருவகை தந்திரம் தான்.
நாளைக்கு நாராயணசாமி பலத்தை நிரூபிக்க முடியாமல், ஆட்சி மாறும் பட்சத்தில் உருவாகும் விளைவுகளுக்கு ஒரு தமிழ்ப் பெண்மணியையே காரணமாக கை காட்டி விடும் ஆபத்தும் இருக்கிறது.
பல புயல்களைச் சந்தித்த புதுச்சேரி அரசியல் ரீதியான சிறு புயலைச் சந்திக்கவிருக்கிறது.
19.02.2021 11 : 55 A.M