எம்.ஜி.ஆர் படங்களின் தலைப்புகள் உருவானது சுவாரஸ்யமானது!

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வசன கர்த்தாக்களில் முக்கியமானவர் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம். இவர் ஆகஸ்ட் 6ம் தேதி காலமானார். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்ற சுந்தரம் முன்பு நம்மிடம் பகிர்ந்து கொண்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

“தி.நகர் கண்ணையா தெருவில் இருக்கும் இயக்குநர் சேது மாதவன் வீட்டிக்கு நாளை காலை 9.30-க்கு உங்களை வரச் சொன்னார் எம்.ஜி.ஆர். என்று எனக்கு தகவல் வந்தது. இதே தகவல் வாலிக்கும், எம்.எஸ்.வி.க்கும் கூடச் சொல்லப்பட்டது.

அன்றைக்கு என்னை தொலைபேசியில் அழைத்த எம்.ஜி.ஆர்., “நாளைக்கு நீங்க வெறும் கையுடன் வரக்கூடாது. உங்க அம்மாவும் மனைவியும் செஞ்சு ஏற்கெனவே நான் சாப்பிட்ட பட்சணங்களில் எது எது முடியுமோ அத்தனையையும் நாளைக்கு செஞ்சு எடுத்துகிட்டு வந்திடுங்க. குறிப்பா லட்டும், முறுக்கும் நிறைய வேணும்” என்று அன்புக் கட்டளையிட்டார்.

எம்.ஜி.ஆரே கேட்கிறார். எப்படி இருக்கும்? அன்று இரவோடு இரவாக அவர் கேட்ட பட்சணங்களை என் அம்மாவும் மனைவியும் செய்து முடித்தனர்.

அடுத்த நாள் காலை ‘நாளை நமதே’ படத்தின் பாடல் கம்போசிங். நாங்கள் எல்லோரும் இயக்குநர் சேது மாதவன் வீட்டில் காத்திருந்தோம். எம்.ஜி.ஆர். கார் வந்து நின்றது.

காரிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் எங்களுக்கு அதிர்ச்சி. லுங்கி கட்டிக்கொண்டு ஜாலியான மூடில் வந்து இறங்கினார். கம்போசிங் நடந்த அறையில் தட்டு நிறைய லட்டு, முறுக்கு ஆகியவற்றை அவர் பார்வையில் படும்படி வைத்திருந்தேன்.

எல்லாவற்றையும் பார்த்ததும் குஷியாகி விட்டார். “உங்க அம்மாவுக்கும் மனைவிக்கும் ரொம்ப நன்றி சொன்னேன்னு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு ருசித்து சாப்பிடத் தொடங்கினார்.

‘யாதோன் கி பாரத்’ இந்திப் படத்தை தமிழில் ரீமேக் செய்யும்போது படத்துக்கு பலரும் பல டைட்டில் சொன்னார்கள். எதுவுமே எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை.

‘நாளை நமதே’னு சொல்லிட்டு எம்.ஜி.ஆர். முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்தில் புன்னகை. அதேபோல ‘ஜீனேக்கிரா’ என்ற இந்திப் பட ரீமேக்குக்கு ‘நான் ஏன் பிறந்தேன்’ என்று நான் டைட்டில் சொன்னதும், “இது என் வாழ்க்கைக்கு ரொம்பவே பொருத்தமா இருக்கும்”னு  ரொம்பவும் மகிழ்ந்து போனார்.

சிவாஜிக்கு வசனங்களை வாயால் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆருக்கு அவர் சம்மந்தப்பட்ட வசனங்களை தனியாக எழுதிக் கொடுக்க வேண்டும். ஸ்கிரிப்டில் பச்சை இங்கில் சில குறிப்புகளை எழுதி வைப்பார்.

அதைப் புரிந்து கொண்டு வளவளன்னு இருக்கும் டயலாக்கை மாற்றி ஒரே வரியில் வரும்படியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எழுதிக் கொடுப்பேன்” என்று நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம்.

நன்றி: நடிகன் குரல் இதழ்

19.02.2021 01 : 11 P.M

You might also like