கூட்டணி வீம்புகள் உதவுமா?- தி.மு.க.வில் என்ன நடக்கிறது?
ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழகத்தில் குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு ‘பெரியண்ணன்’ மனோபாவம் வந்து விடும். மற்ற கூட்டணிக் கட்சிகள் அந்தக் கட்சிகளிடம் குரலைக் கீழறிக்கிப் போக வேண்டியதிருக்கும்.
கடைசியில் குரல் மேலும் கீழறங்கி கூட்டணியில் இத்தனை தொகுதிகள் என்று ஒதுக்கீடு செய்யப்படும். அவர்கள் வேறு வழியில்லாமல் கிடைத்ததை ஒப்புக் கொண்டு கூட்டணியைப் பலப்படுத்துவார்கள். கையை உயர்த்தி முழங்குவார்கள். பிரச்சாரம் செய்வார்கள்.
இந்த முறையும் அதே நிலை. தி.மு.க. கூட்டணியில் இருக்கிற கட்சிகளான காங்கிரசும், ம.தி.மு.க.வும், கம்யூனிஸ்டு கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில் இருக்கின்றன.
வழக்கம்போல கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்படும் எண்ணிக்கை குறித்த செய்திகள் சுழன்றடிக்கின்றன. புதிதாகச் சில கட்சிகளும் பேச முன்வந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
கூடுதல் தொகுதிகளில் போட்டியிட தி.மு.க தயாராக இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன. முன்பு கலைஞரிடம் நேரடியாகத் தயக்கமின்றிப் பேசுகிறவர்களுக்கு ‘பிரசாந்த் கிஷோரின்’ நிறுவனம் ஒரு குறுக்கீடாக இருக்கிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு இது புதிது. ஆனால் சென்ற தேர்தலில் ஒரு வாக்குச் சதவிகித எண்ணிக்கையில் தான் தி.மு.க ஆட்சி அமைக்கத் தவறியது என்கிற உண்மையை தி.மு.க தலைமை மறந்திருக்க வாய்ப்பில்லை. முடிந்தவரை கூட்டணிக்குள் கூடுமான வாக்குவங்கி இருக்கிற கட்சிகளைத் தக்க வைத்துக் கொள்வதே அதன் தேர்தல் உத்தியாக இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பது தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் புகைமூட்டமான கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால், எதிர்தரப்பில் செலவழிக்க இருக்கும் இறுதிக்கட்ட பணப்பட்டுவாடாக்கு அப்பால், வாக்குறுதிகளுக்கு அப்பால், தி.மு.க தலைமை உணர வேண்டும்.
கலைஞர் காலத்திய பொறுமையையும், நிதானத்தையும், அலட்சியப்படுத்தாத இணக்கமான போக்கையும் தேர்தல் காலத்திய இயல்பாக்கிக் கொள்ள வேண்டும்.
தி.மு.க தொண்டர்கள் பலரின் எதிர்பார்ப்பும் இதுதான்!
(அ.தி.மு.க கூட்டணி குறித்து நாளை)
12.02.2021 02 : 22 P.M