உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு: மீட்பு பணி தீவிரம்!
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ம் தேதி உடைந்ததால், அலெக்நந்தா, தாலி கங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ரிஷிகங்கா நீர்மின் திட்டம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தபோவன்-விஷ்ணுகாட் அனல்மின் நிலையத்திலும் பெருத்த சேதம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும், சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களையும் மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 175 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுரங்கங்களில் உள்ள சேறு மற்றும் இடிபாடுகள், கனரக எந்திரங்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. உள்ளே நுழையும் அளவுக்கு சுரங்கம் தயாரானவுடன், மீட்புப்படையினர் உள்ளே செல்ல தயார் நிலையில் உள்ளனர்.
2,500 மீட்டர் நீள சுரங்கத்தில் 120 மீட்டர் நீள பகுதி, இடிபாடுகள் அகற்றப்பட்ட நிலையில் உள்ளது. சுரங்கத்துக்குள் 30 தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாகத் தெரிகிறது. அவர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஹெலிகாப்டரில் பார்வையிட்டு, இந்தோ-திபெத் எல்லை படை மருத்துவனைக்கு நேரில் சென்று, மீட்கப்பட்ட தொழிலாளர்களைச் சந்தித்து பேசினார்.
இதனிடையே, உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ள அறிக்கையில், செயற்கைகோள் புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது, 5 ஆயிரத்து 600 மீட்டர் உயரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. 14 சதுர கி.மீ. பரப்பளவுக்கு ஏற்பட்டு, பெரும் வெள்ளம் உருவாகியுள்ளது.
தற்போது, வெள்ளப்பெருக்கு அபாயம் நீங்கி விட்டதாகவும், தண்ணீர் மட்டம் குறைந்து விட்டதாகவும் உத்தரகாண்ட் மாநில அரசு கூறியுள்ளது. இருப்பினும், மத்திய, மாநில அரசுகள் நிலைமையை கண்காணித்து வருகின்றன. காணாமல் போனவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது” எனக் கூறினாா்.
பெரிய பனிப்பாறைகள், பல்லாண்டுகளாக உறைந்த நிலையில் இருந்ததால் பலவீனம் அடைந்திருக்கும். இதனால், பலவீனமான மண்டலம் உருவாகி, பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. செங்குத்தான மலைப்பகுதி என்பதால், உச்சியில் இருந்து விழுந்த பனிப்பாறைகள் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளன என விஞ்ஞானிகள் கருத்து தெரிவத்துள்ளனர்.
10.02.2021 04 : 45 P.M