துண்டாடப்பட்ட தமிழரின் அடையாளம்!
தமிழர் வரலாற்றுடன், தென்னையை விட அதிகம் பின்னிப்பிணைந்த மரம் பனைமரம், பெண்ணை, போந்தை என்பதெல்லாம் பனையின் வேறு பெயர்கள்.
சேரர்கள் தங்கள் அடையாளப் பூவாக சூடியது பனம்பூ. பழுவேட்டரையரின் கொடியில் (பேஸ்புக் பழுவேட்டரையர் அல்ல) இடம்பிடித்த மரம் பனைமரம்.
சங்க இலக்கியங்களில் தென்னை பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பார்கள். தெங்கு எனப்படும் தென்னையின் இன்னொரு பெயர் கேரம். இந்தக் கேரத்தில் இருந்தே கேரளம் என்ற பெயர் வந்ததாக கூடச் சொல்வார்கள். யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் அருகே கிளாலி கடலில் கேரத்தீவு என்ற தீவு உண்டு.
அதுபோல, கேளம் என்றாலும் தென்னைதான். சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற ஊரின் பெயர் அப்படி வந்ததுதான். இப்போது பனைக்கு வருவோம். தமிழகத்தின் மாநில மரம் பனைதான்.
இலங்கைத் தீவில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு கோடியே பத்து லட்சம் பனை மரங்கள் இருந்தன. குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் பனைமரங்கள் செறிந்திருந்தன.
ஈழப்போர் மூண்டு, மும்முரம் அடைந்த நிலையில், பதுங்கு குழிகள், காவல் அரண்கள் அமைப்பதற்காக சிங்கள ராணுவம் ஏராளமான பனைமரங்களை வெட்டித்தள்ளியது.
பதிலுக்கு எதிர்சமர் புரிய, புலிகளும் பனை மரங்களை வெட்டி, பனங்குற்றிகளால் பதுங்கு குழிகளையும், காவல் அரண்களையும் அமைக்க வேண்டியதாயிற்று. ஆக மொத்தம், 25 லட்சம் பனை மரங்கள் துண்டாடப்பட்டன.
இப்படி தறிக்கப்பட்ட, தடிக்கப்பட்ட, துணிக்கப்பட்ட பனைகளை ஈடுகட்டும் விதத்தில் 20 மில்லியன் பனை விதைகளை நடும் திட்டத்தை வன்னிப் பகுதியில் புலிகள் அறிமுகம் செய்தனர்.
78 ஆயிரத்து 100 பனை விதைகளை (பனங்கொட்டைகளை) வன்னிப்பகுதி முழுவதும் புலிகள் விதைத்தனர்.
ஆம்! ஈழம் காக்க வெறுமனே போர் மட்டும் செய்து கொண்டிருந்த இயக்கமல்ல புலிகள் இயக்கம்.
களத்தில் ஒருபக்கம் சுழன்றாடியபடியே, மறுபுறம் சூழல் காக்கவும் போராடியவர்கள்தான் நம் புலிகள்.
– மோகன ரூபன்
10.02.2021 04 : 35 P.M