ரஷ்யாவில் பெரியார் பார்த்த நாடகங்கள்!
ரஷ்யாவின் மாஸ்கோவில் நூற்றுக்கணக்கான நாடக அரங்குகளும், திரைப்பட தியேட்டர்களும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை புரட்சிக்குப் பின்னர் தோன்றியவையாகும்.
புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பிரபுக்களுமே திரைப்பட தியேட்டர்களுக்கும் நாடக அரங்கங்களுக்கும் விஜயம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது குடியானவர்களும், விவசாயிகளுமே தியேட்டர்களுக்குச் செல்கின்றனர்.
ரஷ்ய அதிகாரிகளும் அறிஞர்களும் தியேட்டர்களுக்குச் செல்ல வேண்டிய அவசியத்தைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தியேட்டர்களுக்குச் செல்வதால் உங்களுடைய அறிவு வளர்ச்சியடையவும், இதர நாடுகளில் வாழும் மக்களுடைய பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
ஆதலால் தியேட்டர்களுக்குச் செல்லவேண்டிய வழக்கம் உங்களில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் என்று ரஷ்ய அறிஞர்கள் வீதிகளிலும் மைதானங்களிலும் பிரச்சாரம் செய்வதை நாம் பார்க்கலாம்.
ஒவ்வொரு நாள் மாலையிலும் மாஸ்கோ நகரிலுள்ள தியேட்டர்கள் பல வர்ணங்களில் மின்சார விளக்குகள் ஒளிர்கின்றன. அவை யாவும் கதைகளைப் பற்றிய விபரங்கள் விளம்பரம் செய்கின்றன. இலக்கியத் தொடர்புடைய கதைகளும், தினசரி வாழ்க்கை தொடர்புடைய கதைகளும், சோகம், ஹாஸ்யம், கோபம் முதலிய நவரசங்களும் பொருந்திய கதைகள் தினந்தோறும் மாஸ்கோ தியேட்டர்களில் காண்பிக்கப்படுகின்றன.
மற்ற நாடுகளில் விடுமுறை தினங்களிலேயே தியேட்டர்களில் கூட்டத்தைப் பார்க்கலாம். ஆனால் மாஸ்கோ நகரிலுள்ள தியேட்டர்களில் தினமும் கூட்டமாகவே இருக்கிறது. குடியானவர்கள், அதிகாரிகள், தொழிலாளர்கள் முதலியவர்கள் அனைவரும் சரிசமமான இருக்கைகளிலேயே அமர்கின்றனர்.
தினசரி வாழ்க்கையை ஒழுங்குப்படுத்திக் கொள்வதற்குத் தகுந்த மார்க்கங்கள் அடங்கிய கதைகளும் தியேட்டர்களில் காண்பிக்கப்படுகின்றன.
அவர்கள் தங்களுடைய தினசரி வாழ்க்கையைப் புதிய முறையில் திருத்தி அமைத்துக்கொள்ள ஆவலாக இருக்கின்றனர். அதேபோல், அவர்கள் அந்நிய நாடக ஆசிரியர், இலக்கிய ஆசிரியர் முதலியோரின் கருத்துகளையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றனர். இது காரணமாகவே மாஸ்கோ தியேட்டர்களில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி முதலிய நாடுகளைச் சேர்ந்த நாடகாசிரியர்கள் எழுதியுள்ள கதைகளை அடிக்கடி காண்பிக்கின்றனர்.
சேக்ஸ்பியர், பெர்னாட்சா, விக்டர் ஹியூகோ முதலியவர்கள் வரைந்த நாடகக் கதைகள் அடிக்கடி காண்பிக்கப்படுகின்றன. இதேபோல் உள்நாட்டு நாடகாசிரியர்கள் வரைந்த நாடகக் கதைகளும் அடிக்கடி காண்பிக்கப்படுகின்றன.
இதேபோல் உள்நாட்டு நாடகாசிரியர்கள் வரைந்த நாடகக் கதைகளும் அடிக்கடி காண்பிக்கப்படுகின்றன. மேலைநாடுகளில் பெரும்பாலானவற்றில் தியேட்டர்களின் சொந்தக்காரர்கள் தங்களுடைய விருப்பம்போல் ஆபாசமான கதைகளைக் காண்பித்துப் பொதுமக்களின் பணத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், மாஸ்கோ நகரத்தில் தியேட்டர்கள் யாவும் ரஷ்ய அரசின் மேற்பார்வையிலேயே இருக்கின்றன. மக்களின் அறிவையும் தினசரி வாழ்க்கையையும் அபிவிருத்தி செய்யத் தகுந்த கதைகளையே காட்டுவதற்கு ரஷ்ய அதிகாரிகள் அனுமதி வழங்குவார்கள்.
நாடகத்திலும் சினிமாவிலும் நடிப்பவர்களுக்கு வாரம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் ஹாலிவுட் நகரத்தைப்போல கொடுக்கப்படவில்லை. நடிகர், நடிகைகளின் சம்பள விகிதங்கள் யாவும் கட்டுப்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
வாரம் ஒன்றுக்கு 100 பவுண்டுக்கு அதிகமாகச் சம்பளம் பெறும் நடிகரும், நடிகையும் மாஸ்கோ நகரத்தில் கிடையாது. ரஷ்ய அதிகாரிகள் தங்களுடைய குடிமக்களின் அறிவு வளர்ச்சிக்கும் முற்போக்குக்கும் தியேட்டர்களே பொறுப்பானவை என்று அபிப்பிராயப்படுகின்றனர்.
மேலும் அவர்கள் தியேட்டர்களை அறிவு வளர்க்கும் நிலையங்களாகக் கருதுகின்றனர். ரஷ்யாவின் வருங்காலம் அதன் சிறுவர், சிறுமிகளையும் பொறுத்திருக்கின்றது என்பதை ரஷ்ய அதிகாரிகள் நன்கு அறிந்திருக்கின்றனர். சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் பிரத்தியேகமாக தியேட்டர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இத்தியேட்டர்களில் எப்பொழுதும் வேடிக்கையான கதைகளும் உயர்ந்த கருத்துக்கள் அடங்கிய நாடகங்களும் காண்பிக்கப்படுகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தியேட்டர்களுக்கு செல்கின்றனர்.
தியேட்டர்களில் நடிப்பதற்கும் அவற்றின் நிர்வாகியாவதற்கும் நாடகக் கதைகளையும், சினிமாக் கதைகளையும் எழுதுவதற்குப் பயிற்சி கொடுப்பதற்கும் மாஸ்கோ நகரத்தில் கல்லூரிகள் இருக்கின்றன. இக்கல்லூரிகள் யாவும் ரஷ்ய அரசின் ஆதரவிலேயே நடைபெறுகின்றன.
(குடியரசு, 31.01.1948)
விரைவில் தமிழ்வெளி பதிப்பக வெளியீடாக வரவுள்ள சு.ஒளிச்செங்கோ தொகுத்துள்ள “ரஷ்யாவில் பெரியார் பார்த்த நாடகங்கள்” என்று சிறு பிரசுரத்தில் இருந்து ஒரு கட்டுரை.
-தான்யா
10.02.2021 09 : 50 A.M