தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான வழி!
தன் வீட்டின் சாவியை தொலைத்த ஒருவர் அதை ஊருக்கு வெளியே தேடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மற்றொரு நபர், “என்ன தேடுகிறீர்கள்?” என கேட்டிருக்கிறார்.
நான் “என் சாவியைத் தேடுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் அந்த நபர். “உங்களது சாவியை எங்கேத் தொலைத்தீர்கள்?” என்று அவர் கேட்டதற்கு, “எனது வீட்டுக்கருகில்” என்று பதில் சொல்லியிருக்கிறார் அவர்.
ஆச்சர்யமடைந்த அந்த நபர், “வீட்டுக்கருகே சாவியைத் தொலைத்துவிட்டு இங்கே வந்து தேடுகிறீர்களே?” என்றாராம். அதற்கு சாவியை தொலைத்தவர், “இங்கேதானே வெளிச்சமாக இருக்கிறது?” என்று சொன்னாராம்.
இது போலத்தான், நம்மில் பலர் லட்சியத்தை எட்டுவதற்கான திறமை தமக்குள் உண்டு என்பதை உணராமல் அதை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம்.
பல லட்சியங்கள் இருந்தும் நமக்குள் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வர தெரியாமல், அதை அடைவதற்கான முயற்சியில்தான் பலரும் தோற்றுப் போகிறார்கள்.
வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள்; கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள். நாம்தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும்.
அதற்கு அத்தியாவசியமான ஒன்று தன்னம்பிக்கை. அது ஒன்றே அதற்கான வழி. நம் பலம் நமக்கே தெரியாதததால்தான் வெற்றி கைநழுவிப் போகிறது; நம்மை நாம் உணர்ந்தால் மட்டுமே வெற்றியை எளிதில் அடைய முடியும்.