“கலைஞர் கைதானபோது நடந்த கொடுமைகள்”- மு.க.ஸ்டாலின்!
மு.க.ஸ்டாலின் அப்போது சென்னை மாகர மேயராக இருந்த சமயம். அப்போது தான் அவர் கைதாகி விடுதலை ஆகியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு கலைஞரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரபல வார இதழுக்காக மு.க.ஸ்டாலினைச் சந்தித்த போது, அவர் விரிவாகப் பேசி அந்தச் சந்திப்பு அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்தது.
2001ல் வெளியான அந்தப் பேட்டி மீண்டும் உங்கள் பார்வைக்கு:
சட்டென்று சுறுசுறுப்பானது சென்னை மாநகராட்சி. ஜாமீன் நிபந்தனைப்படி கையெழுத்துப் போட்டுவிட்டு அப்போதுதான் மாநகராட்சிக்குள் நுழைந்தார் மேயர் மு.க.ஸ்டாலின். பின்னால் கும்பலாக தி.மு.க. கவுன்சிலர்கள்.
“மாநகராட்சியை ஏன் இந்தம்மா கலைக்கணும்?” – பொருமிக் கொண்டிருந்தார்கள் பல கவுன்சிலர்கள். திடீரென்று ஒரு மௌனம்.
டவாலி முன்னால் போக, பின்னால் மேயர் அறைக்குள் நுழைந்த அந்த வி.ஐ.பி.யைப் பலரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். ஆச்சரியப்படுத்திய அந்த விஐபி ஸ்டாலின் மீது புகார் கொடுத்து அவரும் கலைஞரும் கைதாக காரணமாக இருந்த மாநகராட்சியின் புதுக் கமிஷனர் ஆச்சாரியலு.
கால் மணி நேரம் அவர் பேசிவிட்டு வந்ததும் மேயரின் அறைக்குள் போனோம். கமிஷனர் ஆச்சாரியலு வந்ததைப் பற்றிச் சொல்லும்போது ஸ்டாலின் முகத்தில் புன்சிரிப்பு.
“ஒன்றுமில்லை. நான் ஜெயிலுக்குப் போனதற்கு வாழ்த்துச் சொல்வதற்காக வந்திருந்தார்” – சிறை அனுபவத்தை கேஷுவலாகச் சொல்கிறார்.
“சிறைக்குப் போவது எனக்கு புதிதில்லை. மிசா காலத்தில் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டேன். கலைஞர் கைதானதை டி.வி.யில் பார்த்த போது மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். இந்த முறை மதுரைச் சிறையில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினருடன் என்னையும் கொண்டு போனபிறகு அறைகளில் அடைக்க முடியாத அளவிற்குக் கூட்டம்.
அதனால் சிறைக்குள்ளேயே திறந்தவெளியில் செட் போட்டுப் பலரைத் தங்க வைத்திருந்தார்கள். ஒரு நாள் மழை பெய்தபோது மரத்தடியில் ஒதுங்கி இருந்தார்கள் தொண்டர்கள். அது ஒரு வித்தியாசமான அனுபவம். இன்னையிலிருந்தே வேலைகளை ஆரம்பிச்சுட்டேன்.
அடிக்கடி இனி இன்ஸ்பெக்சன் போவேன். கூடவே கண்டிப்பா பத்திரிகைகாரர்களையும் அழைச்சுட்டுப் போவேன்” என்கிறார் சிரிப்புடன்.
இனி அவரது பேட்டியிலிருந்து…
கே: கடந்த ஒரு மாத காலமாகவே நீங்கள் கைது செய்யப்படுவதை எதிர்பார்த்தீர்களா?
பதில்: நான் எதிர்பார்த்தது தான். ஜெயலலிதா தேர்தல் நேரத்திலேயே கலைஞரை, கலைஞரின் குடும்பத்தை பழிவாங்காமல் விடமாட்டேன். அவரது குடும்பத்தை கூண்டோடு ஒழிப்பேன். தி.மு.க.வையும் ஒழிக்காமல் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தார். அதனால் கைதானது எங்களுக்கு அதிர்ச்சியாக இல்லை. கைதான விதம்தான் எங்களை அதிர்ச்சியடைய வைத்து வேதனைப்படுத்தி விட்டது.
தலைவர் கலைஞரை எந்த அளவுக்குக் கொடுமைப் படுத்தினார்கள் என்பதை நாடே பார்த்துக் கண்ணீர் விட்டது. அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களே அதைப் பார்த்து வேதனைப் பட்டிருக்கிறார்கள். சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள்.
தி.மு.க.வைச் சேர்ந்த 40 பேருக்கு மேல் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் விஷம் குடித்து, தீக் குளித்து, ஹார்ட் அட்டாக் வந்து இறந்திருக்கிறார்கள். அந்த அளவுக்குக் கொடுமை நடந்திருக்கிறது.”
கே: கைதானதை எதிர்பார்த்து அதற்கான முன் ஆயத்த நிலையில் இருந்தீர்களா?
ப : நாங்கள் தவறு பண்ணி இருந்தால்தான் முன் ஆயத்த நிலையில் இருந்திருக்க வேண்டும். நாங்கள் எந்தவிதமான தவறும் பண்ணவில்லை. முதன்முதலில் ஜெயலலிதா என்னைப் பற்றி ஒரு குற்றச்சாட்டை சட்டசபையில் சொன்னபோது, அப்போதே எழுந்து நான் இதை எந்த நீதிமன்றத்திலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னேன்.
வழக்கைப் பார்த்துப் பயந்து கொண்டோ மூட்டுவலி, முதுகுவலி என்று ஓரத்தில் பயந்து உட்கார்ந்தோ விடமாட்டேன் என்று அப்போதே பதில் சொல்லியிருக்கிறேன்.
கே : தேர்தல் பிரச்சாரத்தின்போதே உங்களை முதல்வராக்க கலைஞர் முயற்சிக்கிறார் என்றார் ஜெயலலிதா. அப்போதே நீங்கள் குறிவைக்கக்கப்பட்டு விட்டீர்களா?
ப: நான் எப்போது அரசியலில் நுழைந்தேனோ, அப்போதே அதெல்லாம் ஆரம்பமாகி விட்டது. 1969-ல் பள்ளியில் நான் படிக்கும் போதிருந்தே அரசியலுக்கு வந்து கட்சியில் சேர்ந்து, இளைஞர் தி.மு.க. என்று கோபாலபுரத்தில் நற்பணி மன்றம் நடத்தி, இளைஞரணி செயலாளராகி, எம்.எல்.ஏ-வாகி, கட்சியில் பொறுப்புக்கு வந்து இன்றைக்கு மாநகராட்சியில் மேயராகப் பொறுப்புக்கு வந்திருக்கிறேன் என்றால் இது ஏதோ திணிக்கப்பட்டு வந்ததல்ல.
இந்த எம்.எல்.ஏ., மேயர் பதவி எல்லாம் கூட திமுக தலைமை எடுத்த முடிவல்ல. மக்களின் ஓட்டுக்களை வாங்கித்தான் இந்தப் பதவிகளுக்கு வந்திருக்கிறேன். இதை எப்படி வாரிசுத் திணிப்பு என்று சொல்லமுடியும்?
கே: அன்றைக்கு கலைஞர் கைது செய்யப்படுவதற்கு முன்பே உங்களை போலீஸ் தேடி வந்ததாகச் செல்லப்படுவது உண்மைதானா?
ப: அப்படி இல்லை, இரண்டு வீடுகளுக்கும் ஒரே நேரத்தில்தான் போலீசார் வந்திருக்கிறார்கள்.
வேளச்சேரி வீட்டில் நான் இல்லை என்று என் குடும்பத்தார் சொன்னபிறகும் கூட, வீட்டுக் கதவை உடைத்திருக்கிறார்கள். என் மனைவியையும் குடும்பத்தினரையும் கேவலமாகப் பேசி இருக்கிறார்கள். எதையாவது கொண்டு வந்து வீட்டுக்குள் வைத்துவிட்டு பொய் வழக்குப் போட முயற்சி செய்வார்கள் என்று வீட்டுக்குள் நுழையும்போது வாரண்டைக் கேட்டிருக்கிறார்கள் எனது குடும்பத்தினர்.
உடனே அவர்களை அவமானப்படுத்தி அளவுக்கு மீறிய கொடுமை நடந்திருக்கிறது. நீதிபதி முன்னால் நான் சரணடைந்தபோது இதையெல்லாம் விளக்கி எப்படி எல்லாம் பொய் வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்பதைச் சொன்னேன்.
கே : நடந்த சம்பவங்கள் உங்களது குடும்பத்தை எந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது?
ப: நான் கைதானதை விட, கலைஞர் கைதானபோது நடந்த கொடுமையைப் பார்த்துதான் அதிக மன உளைச்சலுக்கு ஆளானோம். இப்போதுகூட அதை நினைத்தால் தூக்கம் வருவதில்லை. அந்த அளவுக்குக் கொடுமை. மிசா காலத்தில் ஒரு வருஷ காலம் வரை கூட சிறையிலிருந்திருக்கிறேன். எத்தனையோ சிரமங்களை சந்தித்து இருக்கிறேன்.
நான் மட்டுமல்ல, மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்தில் இருக்கிற திமுக தொண்டர்கள் வரை பலரும் இந்தச் சிரமங்களுக்குப் பழக்கப்பட்டுப் போனவர்கள் தான். சிரமங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்தக் கொடுமைகள் மன உளைச்சலை ஏற்படுத்தாதா?
கே: சென்னையில் பாலங்கள் கட்டப்படுகிற அதே நேரத்தில்தான் மும்பையில் 53 பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இங்கு சாட்டப்பட்ட வழக்கில் நீங்கள் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதை எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
ப: எந்தவிதமான ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு இது. மாநகராட்சியில் உள்ள சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டு உருவாக்கிய சதி இது. மாநகராட்சிக்குப் பாலங்களால் பெருமை வருகிறது. மேயருக்கும் வருகிறது. அதை எப்படி சீர்குலைக்கலாம் என்று திட்டமிட்டதன் விளைவுதான் இந்தப் பொய் வழக்கு.
இதே பாலங்களைக் கட்டத் தீர்மானம் நிறைவேற்றுகிற நேரத்தில் கூடவே இருந்து அதை நிறைவேற்றிக் கொடுத்தவர்கள் தான் இப்போது கூட்டணி முடிந்ததும் புகார் சொல்கிறார்கள்.
இதற்காகத்தான் கவர்னரிடமும், முதல்வரிடமும் பெட்டிஷன் கொடுத்திருக்கிறார்கள். எந்தக் கடிதமும் மேயர் மூலமாகத்தான் அனுப்பப்பட வேண்டும் என்று சட்ட விதியே இருக்கிறபோது, மாநகராட்சி ஆணையரே தன்னிச்சையாக சிபிசிஐடிக்குப் புகாரை அனுப்பி வைத்திருக்கிறார்.
அதை வைத்துக் கொண்டு அவசர அவசரமாக வழக்கு போடப்பட்டிருக்கிறது. இதில் இருப்பவை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்தான். அதனால் இதைத் தைரியமாகச் சந்திப்போம்.”
கே: இப்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கிற பாலங்களில் இரண்டிற்கு அகில இந்திய அளவில் சிறந்த பாலத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறதாமே?
ப: உண்மைதான். வழக்கு விசாரணை நடக்கும்போது இவற்றையெல்லாம் விரிவாக எடுத்து வைப்போம்.
கே: இப்போது போடப்பட்டிருக்கிற வழக்கை, சிங்காரச் சென்னையாகப் பார்க்க ஆசைப்பட்டதற்கு கிடைத்த பரிசு என்று நினைக்கிறீர்களா?
ப: நான் இதை பரிசாக நினைக்கவில்லை. ஏதோ என்னால் முடிந்த வரைக்கும் நான் அறிவித்ததை, வாக்குறுதி கொடுத்ததை நூற்றுக்கு எண்பது சதவிகிதம் வரை நிறைவேற்றி இருக்கிறேன் என்கிற திருப்தி எனக்கு இருக்கிறது. மீதம் உள்ள மாநகராட்சிக் காலத்திற்குள் நூற்றுக்கு நூறு செயல்பட்டிருக்க முடியும்.
ஆட்சி மாற்றத்தினால் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இங்கே சிறப்பாகப் பணியாற்றிய பல அதிகாரிகளை மாற்றிவிட்டு, கிரிமினல் வழக்கில் சிக்கியிருக்கிற அதிகாரிகளை எல்லாம் நியமித்திருக்கிறார்கள். வேண்டுமென்றே மாநகராட்சிப் பணிகள் தடைபட வேண்டும் என்கிற நோக்கில் இந்த ஆட்சி இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறது.
கே: பாலங்களை உருவாக்கியதில் சிறப்பாகச் செயல்பட்ட நிறுவன அதிகாரிகளைக் கூடக் கைது செய்திருப்பதால் நாளைக்குத் தமிழகத்தில் கட்டப்படுகிற எதிலும் பங்கு பெற்றால் பிரச்சனை வரும் என்று பல நிறுவனங்கள் பயத்துடன் யோசிக்காதா?
ப: நிச்சயமாக இப்படி ஒரு நிலைதான் உருவாகும். இந்த வழக்குப் பொய்யாக போடப்பட்ட வழக்கு என்று நிரூபிக்கப்படும்போது நிறுவனங்களுக்கு இருக்கும் பயம் விலகிவிடும்.
கே: இப்போது அமைச்சர் தம்பிதுரை பாலம் கட்ட இரும்புக் கம்பிகள் வாங்குவதில் மார்க்கெட் விலை ஒன்றாக இருக்கும்போது மாநகராட்சிக் கூடுதல் விலைக்கு வாங்கி இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கு உங்கள் தரப்பிலான பதில் என்ன?
ப: இதற்கெல்லாம் சிக்கலான டெக்னிக்கலான விளக்கத்தை மாநகராட்சி கமிஷனர் அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும். டெண்டர் பிரச்சினைகளைக் கையாள்வதும் செயல்பாடுகளைச் சோதிப்பதும், பில் செட்டில் பண்ணுவதும் அவர்கள்தான். இதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது.
இப்படி எந்தத் தொடர்பும் எனக்கு இல்லாதபோது கோடிக்கணக்கில் ஊழல் குற்றச்சாட்டு என்று புகார் கொடுத்து விடுகிறார்கள். அதற்கு அரசியல் ரீதியாகத்தான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. இதற்கு டெக்னிக்கலாக பதில் சொல்ல வேண்டியவர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தான்.
கே: இதில் கலைஞரை எந்த நோக்கில் வழக்கில் சேர்த்திருக்கிறார்கள்?
ப: எல்லாமே அரசியல் நோக்கமும், பழிவாங்கும் நோக்கம்தான். கலைஞரை எப்படியாவது கைது பண்ணனும், அடிக்கணும், இழுக்கணும். அதை டிவியில் எடுக்கணும். அதைப் பார்த்து ரசிக்கணும். எல்லாம் ஜெயலலிதாவின் அற்பப்புத்தி.
ஜெயலலிதா மீது முன்பு தி.மு.க.வினர் வழக்குப் போட்டார்களே. இப்போது அவர்கள் மீது போட்டால் என்ன? என்று புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள். ஜெயலலிதாவின் கைதுக்கு காரணம் நீதிமன்ற உத்தரவு. இப்போது அப்படியா நடந்தது? விசாரித்தார்களா? உண்மைதான் என்று கண்டு பிடித்தார்களா? தண்டனை கொடுக்கப்பட்டதா? இதுதான் வித்தியாசம்.
கே : நீதிபதி இந்த வழக்குக் குறித்து மாநகராட்சிக் கமிஷனரிடம் ஆதாரமாக சில கேள்விகளைக் கேட்டபோது அவரால் சொல்ல முடியவில்லையே?
ப: அவசர கோலமாக அள்ளித் தெளித்த வழக்கில் எப்படிப் பதில் சொல்ல முடியும். ஜூன் 21-ம் தேதி கமிஷனர் பதவிக்கு வந்து இரு நாட்களில் புகார் கொடுக்கிறார். கமிஷனர் 500 பக்கங்கள் கொண்ட புகார் எல்லா பக்கங்களையும் ஒரே நாளில் படித்து விட்டீர்களா? என்று நீதிபதி கேட்கிற அளவுக்கு இருக்கிறது நிலைமை.
பின்னாலிருந்து உத்தரவு வருகிறது. அதைச் செயல்படுத்துகிறார்கள் அதிகாரிகள். இங்கு போடப்பட்ட புது கமிஷனரைச் சில நாட்களிலேயே மாற்றினார்கள். அவர் மேலிடத்து உத்தரவுக்கு அடிபணியவில்லையோ என்னவோ. அதனால்தான் மாற்றிவிட்டார்களோ என்று எங்களுக்குச் சந்தேகம்.
கே: நீதிபதி தலைமையில் கலைஞர் கைது பற்றி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறதே?
ப: அது ஒரு நபர் கமிஷனே அல்ல. முழுக்க ஜெயலலிதா கமிஷன். இது சரியான தீர்வல்ல. இது ஒரு கண்துடைப்புதான். உண்மையான குற்றவாளிகளை இதன் மூலம் அடையாளம் காட்ட முடியாது. இப்போதைக்குப் பிரச்சனையைத் தள்ளிப் போடப் பார்க்கிறார்கள். அதற்கு கமிஷன் ஒரு சாக்கு.
கே : மாநகராட்சியைக் கலைப்பதுப் பற்றி தமிழக அரசு அனுப்பி இருக்கிற நோட்டீசுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
ப: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மீது பொய்க் குற்றச்சாட்டை வைத்துக் கணித்துப் பார்க்கட்டும். பார்க்கலாம். அதற்காகத் தகுந்த சட்ட வல்லுநர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். எந்த அடிப்படையில் கலைக்கலாம் என்று புகார் சொல்கிறார்களோ. அதற்குத் தகுந்த முறையில் பதில் சொல்வோம்.
வருகிற 26 ஆம் தேதி கூடுதலாக இருந்த மாநகராட்சிக் கூட்டத்தை முன்கூட்டியே கூட்டிப் பதிலைத் தயார் பண்ணி கவுன்சிலில் வைக்க இருக்கிறோம். அதனால் அவர்கள் நினைக்கிறபடி அவ்வளவு சுலபத்தில் மாநகராட்சியைக் கலைத்துவிட முடியாது.”
சந்திப்பு: மணா
08.02.2021 4 : 50 P.M