சாலைகளில் கையேந்தும் கரங்கள்!

ஊர் சுற்றிக் குறிப்புக்கள்: 

பார்க்கும் போது அவ்வளவு சுலபமாக மனசிலிருந்து அந்தக் காட்சிளை அகற்ற முடியவில்லை.

சென்னைப் பெரு நகரத்தில் பல இடங்களில் புதிதாக முதியவர்கள் பலர் சாலையோரங்களில் நின்றபடி கையேந்துவதைப் பார்க்க முடிகிறது. உடையில் கேயேந்துபவர்களுக்கான பொதுவான தோற்றம் இருக்காது. ஓரளவு பளிச்சென்ற உடைகள் அணிந்திருக்கும் அவர்கள் குரல் எழுப்புவதில்லை.

கையேந்திய நிலையில் மௌனமாக முதுமையின் பாரத்துடன் நின்று கொண்டிருக்க, நகர்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்களின் முகத்தின் கனிவைப் பார்த்து ஏதாவது கொடுத்துவிட்டு நகரும்போது, பதிலுக்குக் கைகூப்புகிறார்கள். முகத்தைத் தாழ்த்திக் கொள்கிறார்கள்.

கொரோனா பரவ ஆரம்பித்த பிறகு சாலைகளில் பார்க்க நேர்கிறவர்களிடம் ஆண், பெண் என்ற பாலினப் பேதங்கள் இல்லை. ஒருவித நெருக்கடியும், இயலாமையும் அவர்களைத் தெருவில் கையேந்தும் நிலைக்கு விரட்டியிருப்பதை அவர்களுடைய கைகளில் பணத்தைக் கொடுக்கும்போது உணர முடிகிறது.

அவர்கள் வசிக்கும் வீடுகளில் பொருளாதாரம் பெரும் சுமையைப் போல அழுந்தும்போது, முதுமையான இவர்கள் வீட்டில் சிக்கலான உயிர்களாக மாறிவிடுகிறார்கள்.

“இப்படித் தெருவில் கையேந்தி நிக்கிறதுக்குப் பதிலா உசிரை விட்டுறலாம்னு அடிக்கடி தோணுதுப்பா.. இப்படியா நானெல்லாம் சாப்பிட்டு உசிரோட இருக்கணும்?” – பெருமூச்சுடன் ஒரு வயதான பெண்மணி சொல்லும்போது, குரல் உடைந்து கழிவிரக்கம் சூழ்கிறது.

“நாங்க வாழ்ந்து யாருக்கு என்ன பிரயோஜனம்ப்பா?” – முகத்தில் சுருக்கங்கள் அதிகரித்தபடிப் பேசிய முதியவருக்கு எண்பதைக் கடந்த வயது. வாழ்வின் சிரம திசையைத் தொட்டுவிட்ட அசதி அந்தக் குரல்களில் தொனிக்கிறது.

உறவுகள் பக்கத்தில் இருந்தும் உரையாடாமல், சமூகம் சுற்றி இருந்தும் கவனிக்கப்படாமல் நாட்கள் நகர்வது எத்தனை பெரும் பாரம்?

இதற்கிடையில் தான் விலைவாசி ஏறுகிறது; பட்ஜெட் அறிக்கை வாசிக்கப்பட்டு, விவாதங்கள் நடக்கின்றன.

நிறைய புள்ளிவிபரங்கள் கொத்தாக அள்ளி இறைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களில் வருமானங்கள் மட்டும் வீக்கத்தைப் போல அதிகரிக்கின்றன.

ஆனால் எந்தப் புள்ளிவிபரங்களும் இம்மாதிரி முதுமையின் தள்ளாட்டத்துடன் தெருக்களில் கையேந்துபவர்களின் பசியைக் குறைக்கவில்லை.

-யூகி

04.02.2021  01: 58 P.M

You might also like