தற்காலப் பெண்களின் திருமணமும் குழந்தை வளர்ப்பும்!
திருமணம், குடும்பம், குழந்தைப் பிறப்பு, குழந்தை வளர்ப்பு பற்றி ‘தாய்’ இணையதள வாசகர்களுக்காக பேசுகிறார் குழந்தை வளர்ப்பு ஆலோசகரான என்.விஜயா.
“ஒருகாலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண நிகழ்வாக இருந்து வந்தது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள். பொருளாதாரம் பிரச்சினையில்லை.
விவசாயமோ, அரசுப் பணியோ, தொழிலோ கைகொடுத்தது. வீட்டு வேலை பார்ப்பதற்கென்றே எந்த வேலைக்கும் செல்லாத கடைக்குட்டி குழந்தைகள் இருந்தார்கள். இன்றைய நிலை உங்களுக்குத் தெரியும்.
வேலைக்காக நகரங்கள், பெருநகரங்களைத் தேடி மக்கள் படையெடுக்கும் காலம் வந்தது. நகரங்கள் மாநகரங்களாக மாறின. கூட்டுக் குடும்பம் தனிக்குடும்பமாக நியூக்ளியர் குடும்பமாக மாறிவிட்டது.
மூன்று குழந்தைகள் இரண்டாகி, கடைசியில் ஒரு குழந்தையைக் கொண்ட பெற்றோர்கள் அதிகரித்து விட்டார்கள்.
இரண்டு குழந்தைகளுக்கு இடையில் வளர்ப்பில் ஜெனரேஷன் கேப் உருவானது. குழந்தைகள் வளர்ப்பு என்பது பாட்டிமார்களின் அனுபவத்துடன் இருந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது.
நவீன காலத்தில் குழந்தையைப் பெற்றோம் வளர்த்தோம் என்பது எதார்த்தமல்ல. அறிவியல் முறை. திட்டம். நிரல் வகுத்து செய்ய வேண்டியது.
இரவுபகலாக வேலைபார்க்கத் தொடங்கிவிட்ட பெண்களுக்கு, குழந்தை பிறப்பு என்பதும் வளர்ப்பது என்பதும் ஒரு அரேஞ்மெண்ட்.
எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம், யார் வளர்ப்பார்கள் என்பதெல்லாம் திட்டமிட வேண்டியுள்ளது.
குழந்தையே இல்லை என்றாலும், அதற்காக ஆயிரம் ஆயிரமாக கொட்டிக்கொடுத்து மருத்துவச் சிகிச்சைக்குத் தயாராக வேண்டியுள்ளது. எல்லாமே திட்டமிடல்.
எதுவுமே இயல்பாக நடப்பதில்லை. இயற்கையாக நடக்க வேண்டியது என்ற ஆதங்கக் குரல் கேட்கிறது.
குழந்தை வளர்ப்பில் கவனம்
ஒரு குழந்தையைப் பெற்றவர்கள் படுகிற சிரமும் புரிகிறது. அவர்கள் அடம்பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். எதற்கும் கோபித்துக் கொள்வார்கள்.
குழந்தை பெற்றால்தானே… குழந்தையே வேண்டாம் என்று தள்ளிப் போடுகிற நிலையை நினைத்துப் பாருங்கள். தெருவுக்குத் தெரு பெர்ட்டிலிட்டி சென்டர்கள் வெளிச்சம் காட்டுகின்றன. கூட்டமும் அலைமோதுகிறது. காலத்தின் கோலம்.
குழந்தைகள் வளர்ப்பில் எத்தனையோ நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
ஒரு குழந்தை வளர்ப்பில் உள்ள சிரமங்கள் என்ன? எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி நடந்துகொள்ளக் கூடாது, குழந்தைப் பிறப்பை ஏன் தள்ளிப்போடக் கூடாது என்பது பற்றியெல்லாம் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
எப்போது குழந்தைகளை அடுத்தவர்களிடம் கொடுக்கலாம். யாரிடம் கொடுக்கக்கூடாது, பெற்றோர்களின் கடமைகள் என்ன, என்ன வகையான உணர்வுகளை குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்பதெல்லாம் முக்கியம்.
ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது என்ன, உண்மையான வளர்ச்சி என்பது என்ன, வளர்ச்சி என்றால் எதெல்லாம் வளர்ச்சி… நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கவனங்கள். எப்போது ஒரு குழந்தை நல்ல குழந்தையாக மாறுகிறது.
குழந்தை நன்றாக இருப்பதற்கும், கெட்டுப்போவதற்கும் யார் காரணம்?. தவறுகள் நடந்த பிறகுதான் யோசிப்பவர்களாக நாம் இருக்கிறோம்.
எமோஷனல் சேப்டி என்பது என்ன, எது உண்மையான சந்தோசம், நெகட்டிவ் பேரண்டிங் என்பது என்ன என்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள், பெற்றோரின் நடத்தைகள், அணுகுமுறைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதையெல்லாம் பார்ப்போம்.
திருமணம் ஒரு புதிய தொடக்கம்
ஒரு பெண்ணுக்கு திருமண பந்தம் என்பது வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை. அந்தக் காலம் போல அதுஅது காலாகாலத்துல நடக்கும் என்று அமைதியாக இருக்கமுடியாது.
பெண்ணும், பெண்ணைப் பெற்ற பெற்றோரும் திருமணத்திற்காக தயாராக வேண்டியிருக்கிறது. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்றிருக்க முடியாது.
ஒரு காலத்தில் பணக்கார திருமணச் சடங்குகள் மாதக்கணக்கில் நடந்த வரலாறு இருக்கிறது. மெல்ல மெல்ல குறைந்து தாலி கட்டியதும் கூட்டம் காலியாகி விடுகிறது. மதிய சாப்பாட்டுக்கு ஆட்களே இருப்பதில்லை. இது நவீன காலத்தின் அடையாளம்.
அனைத்து மதங்களிலும் திருமணத்திற்கு பிரத்யேகச் சடங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன. இல்லற வாழ்க்கையில் நுழைவதற்கு முன்பு, ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்ல புரிதல் ஏற்படவேண்டும். தனிப்பட்ட முறையில் அதற்கான மனத்தயாரிப்புகள் இருவருக்குமே தேவைப்படுகின்றன.
எதார்த்தம் என்ன
இன்றைய காலகட்டத்தில் வெளிப்புற அழகு, படிப்பு, பொருளாதார அடிப்படையில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. எதார்த்தம் வேறு. திருமணத்தை முன்வைத்தே பிள்ளைகள் வளர்க்கப்படுகிறார்கள். பணமும் படிப்பும் தேவைதான்.
படித்தால்தான் பணம் கிடைக்கும். அதுதான் வாழ்வில் வளர்ச்சியைத் தருகிறது. ஆனால் அதுமட்டுமல்லவே வாழ்க்கை. திருமணத்திற்கு மனரீதியான தயாரிப்பு வேண்டும்.
மென்டல் மெச்சூரிட்டி லெவல் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்ற தேவை உருவாகியுள்ளது. அதேபோல உடல்ரீதியான மெச்சூரிட்டியும் மிகத் தேவையானது.
தற்கால இளைஞர்களுக்கும் பெண்களுக்கு கூடுதல் எடை இருக்கிறது. ஒபிசிட்டி என்று ஸ்டைலாக அழைக்கிறோம்.
ஒன்று குண்டாக தொப்பையுடன் இருக்கிறார்கள். அல்லது ஸீரோ சைஸ் என்று ஒல்லிக்குச்சியாக எதுவும் சாப்பிடாமல் போஷாக்கு இல்லாமல் காட்சியளிக்கிறார்கள்.
இரண்டுமே தவறான முன்னுதாரணங்கள். நல்ல உடல்நலத்துடன் வளத்துடன் இருக்க வேண்டும். சிலரிடம் நல்ல தாயாக இருப்பதற்கு அறிகுறியே இருப்பதில்லை. சிலர் தாயாகவே விரும்பவில்லை.
திருமணம் ஓர் ஆரம்பம். அதைத் தொடர்ந்துதான் வாழ்க்கைப் பயணமே ஆரம்பமாகிறது. பெற்றோர்கள் கஷ்டம் கொடுக்காமல் அல்லது வீட்டின் சிரமங்கள் தெரியாமல் குழந்தைகளை வளர்க்கிறார்கள்.
அதுவே பின்னாளில் அவர்கள் வளர்ந்து நிற்கும்போது சமாளிக்க முடியாமல் திணறுவதைப் பார்க்கிறோம். சிறுபிராயத்தில் இருந்து வளர்ப்பு முறையின் வழியாக வாழ்க்கை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
எது எதார்த்தம், எது ஆடம்பரம், எது பொய்யானது, எது உண்மையானது என்ற புரிதல் ஏற்படவேண்டும்.
திருமணத்திற்குத் தயாரா?
திருமணத்திற்குத் தயாராகுதல் என்பது ஒரே நாளில் நடப்பதில்லை.
சமூக குடும்ப வாழ்வில் இருந்து அந்தக் காலத்தில் ஆண்களும் பெண்களும் புரிந்து கொண்டார்கள், இன்றைய இளம்பெண்களிடம் எதையாவது சொல்லத் தொடங்கினால், அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் என்ற பாவனை காட்டுகிறார்கள்.
ஆனால் உண்மையில் நாம் சொல்ல வந்த விஷயம் அவர்களுக்குத் தெரியாது. பட்டுத் தெரிந்துகொள்ளும்போது அம்மா சொன்னாளே என்று உணர்வார்கள்.
நன்றாக படித்திருக்கிறார்கள், கை நிறைய சம்பாதிக்கிறார்கள். குறையில்லை. ஆனால் அது போதும் என்ற மனநிலைதான் தேவையற்றது. எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள்.
பத்தாம் வகுப்பு படித்திருந்தாலும், பி.இ படித்திருந்தாலும் சரி, மனப்பக்குவம் என்பதும் எதார்த்த வாழ்க்கையைப் புரிந்து கொள்வதும் வேறு. படிப்புக்கும் பிராக்டிக்கல் வாழ்க்கைக்கும் தொடர்பில்லை.
திருமணத்திற்குத் தயாராகுதல் என்பது மனரீதியாக தயாராதல், உணர்வுபூர்வமாக தயாராதல், ரெசிஸ்டன்ஸ் எனப்படும் தாக்குப் பிடிக்கும் தன்மைக்கு தயாராகுதல் ஆகும்.
எதுவாக இருந்தாலும் பெரியவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புகள் ஒரு காலத்தில் இருந்தன. அது குறைந்து வருகிறது. பெரியவர்கள் தனியாக இருக்கிறார்கள்.
அதைவிட ஈகோ பெரிய விஷயமாக இருக்கிறது. ஏன் அவரிடம் போய் சொல்லவேண்டும். தலை முழுவதும் ஈகோவை சுமந்து அலைகிறார்கள்.
அதை சிறுபிராயத்தில் இருந்து ஊதி வளர்ப்பது பெற்றோர்கள்தான். வீட்டில் கிடைக்கிற எக்போஸர், வேண்டாத முடிவுகளை எடுக்க வைக்கிறது.
நவீன தலைமுறை பெண்கள்
கஷ்டநஷ்டங்களைப் பார்த்து வளர்கிற குழந்தைகள் எந்தச் சூழலையும் சமாளிப்பார்கள். நெளிவு-சுளிவுகளைப் புரிந்து கொள்வார்கள்.
சில நாட்களுக்கு முன் புதுப்பெண் ஒருத்தியைப் பார்த்தேன். வாழ்க்கை எப்படிப் போகிறது என்று கேட்டேன்.
ஏதோ போகுது ஆன்ட்டி என்றாள். வீட்டுக்குப் போகலையா என்று கேட்டால், அவன் சமைச்சுக்கிட்டு இருப்பான். லேட்டாகப் போகலாம் என்றாள்.
அதில் தவறில்லை. ஆனால் எத்தனை நாளைக்கு சமையல் செய்யாமல் வாழ்ந்துவிடமுடியும். எனக்குப் புரியவில்லை. நடத்தையும் அணுகுமுறையும் முக்கியமாகப்படுகிறது.
இளம் பெண்கள் வீட்டு வேலை செய்வதையும், சமையல் செய்வதையும் தேவையற்றது என்று நினைக்கிறார்கள். நம்ம வீட்டு வேலைகளைச் செய்வதில் நமக்கு ஏன் தயக்கம் என்று புரியவில்லை.
எதையோ நிஜம் என்று நம்பிக்கொண்டு வாழ்கிறார்கள். திடீரென வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்போது தாங்கும் சக்தியில்லாமல் சோர்ந்துபோகிறார்கள்.
எப்போதுமே எதார்த்தம் புரிந்தால், எந்தத் துன்பம் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் அல்லது அதை கடந்துபோக முடியும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
கட்டுரையாளர்: தான்யா
03.12.2021 12 : 50 P.M