விவசாயிகள் நம் நாட்டின் எதிரிகளா?
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலன் அளிக்காததால், விவசாயிகள் போராட்டம் 2 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், டெல்லியின் சிங்கூ எல்லையில் விவசாயிகள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்கும் நோக்கில், இரும்பு கம்பிகளால் தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும்போது, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
“நாட்டில் உள்ள விவசாயிகளைப் பார்த்து மத்திய அரசு பயப்படுகிறதா? டெல்லி எல்லையைச் சுற்றி ஏன் தடுப்புகள் அமைக்கிறீர்கள்; விவசாயிகள் நம் நாட்டின் எதிரிகளா?
டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேளாண் சட்டங்களை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 3 வேளாண் சட்டகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். டெல்லி விவசாயிகளால் சூழப்பட்டுள்ளது. அவர்கள் தான் எங்களுக்கு வாழ்வாதாரம் தருகிறார்கள்.
டெல்லி ஏன் கோட்டையாக மாற்றப்படுகிறது? நாம் ஏன் அவர்களை அச்சுறுத்துகிறோம், அடித்துக் கொலை செய்கிறோம்? அரசு ஏன் அவர்களுடன் பேசவில்லை. இந்தச் சிக்கலை தீர்க்கவில்லை? இந்தப் பிரச்சினை நாட்டுக்கு நல்லதல்ல” எனக் கூறினார்.
03.02.2021 04 : 53 P.M