பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க திட்டம்!

பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோய்ந்து ‘பெயரளவுக்கு’ இயங்கி கொண்டிருக்கும் நிலையில், தேசிய அளவில் மாற்று இல்லாததால், எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துள்ளது.

பா.ஜ.க.வுக்கு மாற்று பிராந்திய கட்சிகளே என்ற நிலை பெரும்பாலான மாநிலங்களில் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்கம், மகாராஷ்ரம், ஒடிசா போன்ற வடமாநிலங்கள் உதாரணம்.

தெற்கே கர்நாடகம் தவிர பா.ஜ.க. எந்த மாநிலத்திலும் வலிமையாக இல்லாதது போன்று, காங்கிரசும் கேரளா, கர்நாடகம் தவிர எந்த மாநிலத்திலும் புஷ்டியாக இல்லை.

தேசிய அளவில் எதிர்க்கட்சி அந்தஸ்து இருந்தாலும், ஒன்றரை ஆண்டாக காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் இல்லை.

‘தற்காலிக முகமாக’ சோனியா காந்தி இருக்கும் நிலையில், கட்சியின் செயல்பாடுகள் மந்தம் அடைந்துள்ளன.

இரண்டாவது முறையாக கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றதால், 2019 ஆம் ஆண்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்து விட்டார்.

அன்று முதல் இன்று வரை ‘தலை’(வர்) இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட சோனியாகாந்தியை வம்படியாக இழுத்து வந்து ‘தற்காலிக’ தலைவர் நாற்காலியில் அமர வைத்துள்ளனர் மூத்த தலைவர்கள்.

குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள் “துடிப்பான, நிரந்தரமான தலைவர், காங்கிரசுக்கு தேவை’’ என போர்க்கொடி உயர்த்தியதால், அண்மையில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டியில், வரும் ஜுன் மாதத்துக்குள் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது என முடிவாகியுள்ளது.

யார் தலைவராக வரப்போகிறார்?

சோனியா காந்தி குடும்பத்தை விட்டால் வேறு யாரும் இல்லை என்பதே கள நிலவரம்.

முன்பு இருந்தார்கள்.

மகாராஷ்டிராவில் சரத்பவார் இருந்தார். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி இருந்தார். அவர்கள் இருவருமே தனிக்கடை விரித்து, அவரவர் பாணியில் அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

சோனியாவுக்கு எதிராக கலகம் செய்த 23 தலைவர்களும், தேசிய அரசியல் செய்பவர்கள் தான்.

ஆனால் சொந்த மாநிலத்தில் பெரிய செல்வாக்கு இல்லாதவர்கள். இத்தனை நாட்களும், இந்திரா குடும்பத்து ஆட்களால் ‘நியமனம்’ செய்யப்பட்டு உயர்ந்த இடத்துக்கு வந்தவர்கள். அவர்களால் அதனை மறுக்க முடியாது.

ராகுல் காந்தியை தலைவராக ஏற்பதில் அவர்களுக்கு பிரச்சினை கிடையாது.

ஆனால், “மீண்டும் தலைவர் பொறுப்புக்கு வருவதில்லை’’ என்பதில் அவர் தீர்மானமாக இருப்பதால், பிரியங்காவை தலைவராக்கும் முயற்சிகள் டெல்லி வட்டாரத்தில் வேகமெடுத்துள்ளன.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் முதல்வர்களும் சோனியா குடும்பத்தின் பக்கம் நிற்கிறார்கள்.

இப்போது இரண்டாம் கட்ட தலைவர்கள், பிரியங்காவுக்கு ஆதரவு திரட்டும் வேலையை ஆரம்பித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் அனில் சாஸ்திரி. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன்.

“ராகுல் இல்லையேல் பிரியங்கா’’ என என்ற கோஷத்தை உரக்க எழுப்புகிறார் அனில்.

அவரது பேட்டி இது:

“90களில் பி.வி.நரசிம்மராவ், சீதாராம் கேசரி தலைமையில் காங்கிரஸ் இயங்கியபோது, மிகவும் பலவீனமாக இருந்தது. அந்த சமயத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றதால் தான், அதன்பின் 10 ஆண்டுகள் காங்கிரசால் ஆட்சியில் இருக்க முடிந்தது.

இப்போது, காங்கிரசுக்கு சிக்கலான நிலை. கடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றுப் போனது. இந்திரா காந்தி குடும்பத்தைச் சார்ந்த ஒருவரால் தான் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற முடியும்.

புதிய தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும். அவர் மறுத்தால், பிரியங்கா காந்தியை தேர்வு செய்ய வேண்டும்.

பிரியங்கா வசீகரம் மிக்க தலைவர். அவரை, இந்திராவின் வடிவமாக காங்கிரசார் பார்க்கிறார்கள்” என்று சோனியா காந்தி குடும்பத்துக்கு புகழாரம் சூட்டும் அனில் சாஸ்திரி, “இந்திரா குடும்பத்தைச் சாராத யாராவது புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டால், காங்கிரஸ் அழிந்து விடும்’’ என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

‘இது தொடக்கம் தான்’ என்கிறார்கள், டெல்லி அரசியல் வட்டாரத்தில். வரும் நாட்களில் பிரியங்காவுக்கு ஆதரவாக நான்கு திசைகளில் இருந்தும் குரல் ஒலிக்கும். கலகக் குரல் எழுப்பிய ‘G 23’ தலைவர்களுக்கு, பிரியங்காவை தலைவராக ஏற்பதை தவிர வேறு வழி இல்லை.

– பி.எம்.எம்.

29.01.2021 01 : 00 P.M

You might also like