ஒரு வாரத்தில் புதிய கட்சி!

கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்து, அந்தக் கட்சிக்கு அர்ஜூன மூர்த்தி என்பவரை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பதாக அறிவித்தார்.

பா.ஜ.க.வின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக பதவி வகித்து வந்து, பின்னர் அதை ராஜினாமா செய்தவர் அர்ஜூன மூர்த்தி.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ரஜினி கட்சி தொடங்க போவதில்லை என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துவிட்டார்.

இதனால் அதிருப்தியடைந்த ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர்கள், திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர். ரஜினியின் ஆலோசகராக இருந்த தமிழருவி மணியன், விரக்தியில் மறுநாளே அறிக்கை வெளியிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

ஆனால் அர்ஜூன மூர்த்தியோ, இந்த நேரத்தில் ரஜினியை விட்டு பிரிந்து செல்வது சரியாக வராது என்ற நிலைபாட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் புதிய கட்சியைத் தொடங்க போவதாகவும், அதற்கு ரஜினி ரசிகர்கர்கள் ஆதரவு இருக்கும் என்றும் தகவல் வெளியாகியது.

அதற்கு ஏற்றவாறு ‘மாற்றத்தின் பயணம் விரைவில்’ என்ற ஒரு அறிக்கையையும் சூசகமாக அவர் வெளியிட்டிருந்தார். இதனால் அவர் புதிய கட்சி ஒன்றை தொடங்குவது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன மூர்த்தி, “மாற்று சிந்தனை உள்ள தமிழகத்திற்கு மாற்றாக அரசியல் அமைப்பு தேவை.

வழிநடத்திச் செல்லும் மனிதர் யார் என்ற தேடல் நிரம்பி வழிகிறது. என்ன சாதிக்க முடியும் என்ற கேள்வி என் குடும்பத்திலேயே உள்ளது. 50 நாட்களுக்குள்ளாக சோதனை ஓட்டமாக நடந்தேறியுள்ளது.

யாராவது நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஜல்லிக்கட்டிற்காக போராடிய இளைஞர்களின் சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது. மாற்றத்திற்கான விதையை விதைக்க முடியும்.

ஜல்லிக்கட்டு போன்ற எழுச்சியை மீண்டும் கொண்டு வர முடியும். அரசியல் கட்சி நிறுவும் ஆர்வமும், ஆசையும் எனக்கு உள்ளது.

சிறப்பான, நேர்மையான, அதீதமான தொலைநோக்கு உள்ள கட்சியை நிறுவ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. ரஜினியை துன்பப்படுத்துவது நியாயமற்ற செயல். கட்சி தொடங்குவது வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தொடங்கப்படும் கட்சி பாஜகவிலிருந்தும் மாற்றாக அமையும்.

பாஜகவிற்கே புது சிந்தனை கொடுத்த அர்ஜூன மூர்த்தியால் மக்களுக்கு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இதுவரை எந்தக் கட்சியமைப்பும் இல்லாத அணுகுமுறையாக இருக்கும். தொடங்கப்பட உள்ள கட்சி வரும் தேர்தலில் போட்டியிடும். ஒருவாரத்தில் அறிவிக்கப்படும். பெரியார், காந்தி சித்தாந்தங்கள் என்று இல்லை. புதிய சித்தாந்தமாக இருக்கும்.

ரஜினி படத்தை பயன்படுத்த போவதில்லை. என் மேல் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் அவர்களை வருக வருக என அழைக்கிறேன். பாஜகவில் ஒரு பிரிவின் தலைவராகவே இருந்தேன்.

கட்டுப்பாடுகள் உண்டு. மதமற்று, சாதியற்று இருக்கும். எனக்கு எனது சிந்தனைதான் தலைவர். கட்சி தொடங்கப்படும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ரஜினிக்கு டூப்பாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.

28.01.2021 04 : 24 P.M
You might also like