எல்லையில்லாத அன்பு காட்டிய மக்கள் திலகம்!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர் – தொடர்: 22

சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நாட்களில் எல்லாம், என் அன்பு நாயகர் மாலை அல்லது இரவு தோட்டத்துக்கு வந்தவுடன், இளைப்பாறுகிற நேரத்தில் அன்று சட்டமன்றத்தில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளைச் சொல்வதுண்டு.

ஒரு சில நேரங்களில் தான் சந்தித்த தொண்டர்கள், தூய உள்ளம் கொண்டவர்கள், வித்தியாசமான விருந்தினர்கள், வேடிக்கை மனிதர்கள், விதவிதமான அனுபவங்கள் அவர் பேச்சில் வந்துவிழும்.

ஒருநாள், அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சரான திருமிகு வீராசாமி அவர்கள், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன்முறையாக அன்றுதான் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறார்.

1977 ஆம் ஆண்டு தேர்தலில் கார் விபத்தின் காரணமாகக் கால் ஒடிந்து, கம்பூன்றி தனது தலைவரைக் காண சட்டமன்ற வசந்த மண்டபத்தின் அருகில் நின்றிருந்திருக்கிறார்.

இதைக்கண்ட இந்தத் தோட்டத்தத் தூயவர் அவரை, “இங்கே வா” என்று அன்போடு அழைத்திருக்கிறார். கொஞ்சம் பயம் கலந்த மரியாதையோடு கம்பூன்றியபடி கிட்டே வந்திருக்கிறார்.

அவ்வளவுதான். அவர் ஊன்றி நடப்பதற்கு வைத்திருந்த கம்புகளை இவர் பிடுங்கிக் கொண்டார். அதோடு விடவில்லை இவர், “விபத்து நடந்து எவ்வளவு காலமாகிறது?” என்று கேட்டிருக்கிறார்.

மூன்று ஆண்டுகள் என்று பதில் வந்திருக்கிறது.

“நீ ஒரு கோழை. மனோதிடம் இல்லாதவன். அந்தக் காலத்தில் என் கால் எலும்பு சுக்குநூறாக முறிந்த மூன்று மாதத்திற்கெல்லாம் நான் ஓடியாடி படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டேன். உனக்குத் தன்னம்பிக்கை இல்லையே” என்று கூறி பிடுங்கிய கம்புகளைக் கொடுக்க மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவரும் விடைபெற்று சிரமப்பட்டு திரும்பியிருக்கிறார்.

பொன்னான இதயம் தாங்குமா? “வீராசாமி” என்று ஒரு குரல் கொடுத்துவிட்டு அவரது கைத்தடிகளை தானே அருகில் வேகமாகச் சென்று கொடுத்து, “இது இல்லாமல் நடக்கப் பழகு” என்று மென்மையாகத் தட்டிக் கொடுத்து அவரை வழியனுப்பி வைத்திருக்கிறார். தனக்கு இருக்கும் மனோதிடம் மற்றவர்களுக்கும் வரவேண்டும் என்று இவர் விரும்பினார் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

இந்தத் தோட்டத்துத் தூயவர் காலில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்த காலத்தில், செய்யப்பட்ட விமர்சனங்களை இப்போது நினைத்தாலும் வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். இனி அவரால் நடிக்கவே முடியாது. மக்களின் செல்வாக்கு இனி இருக்காது. இத்தோடு இவர் ‘க்ளோஸ்’ என்றெல்லாம் என் காதில் விழும் அளவிற்குக்கூட பேசியவர்கள் இருக்கிறார்கள்.

மூன்றே வாரத்தில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தார். பிறகு மருத்துவர்கள் வீட்டிலேயே வந்து கவனித்தனர். பிறகு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறு கட்டுப் போடப்பட்டது. 3 மாதங்களுக்குப் பிறகு அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அப்போது பட அதிபர் லேனா செட்டியாரை அலேக்காகத் தூக்கிக் கொண்டு நிற்க அந்தக் கம்பீரமான படத்தை பத்திரிகைகள் வெளியிட்டன.

மாற்றானும் மருளும் வண்ணம் சண்டைக் காட்சிகளில் நடித்தார். இதற்கெல்லாம் அவரிடம் இருந்த ஒரே சக்தி, அவர் அன்னை ஊட்டிய துணிவு ஒன்றுதான் துணை.

அவருக்கு இருந்த துணிச்சல் எனக்கு இல்லைதான். ஆனால் அவர் இருந்து கொடுத்த தைரியம் எனக்கு உண்டு.

முன்பு எனக்கு நடந்தால் மூச்சு வாங்கும். இது ஏன் என்று பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு சிபாரிசு செய்தார்கள்.

நான் கொஞ்சம் பயந்து போய் காலம் கடத்திக் கொண்டிருந்தேன். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நான் அவரோடு அமெரிக்காவுக்குச் சென்ற போதுதான் மருத்துவர்களும் இவரும் என்னை மிகவும் வற்புறுத்தி அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்து விட்டார்கள்.

எனக்கு ஆபரேஷன் என்றதும் எனது நகைகளை எல்லாம் கழற்றி என் அன்பு நாயகரிடம் கொடுத்தேன். வாங்குகிறபோதே அவருக்குக் கண்கள் கலங்கியது. நான் கொடுத்த நகைகளை தானே அணிந்து கொண்டு, “என் ஜானு ஆபரேஷனைத் தாங்குவாளா” என்று ஒரு சிறு குழந்தையைப் போல அரை மணி நேரம் அழுதார். ஆபரேஷன் அவசரம் அவ்வளவிற்கும் நடுவில் நான்தான் அவரைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.

ஆபரேஷன் முடிந்து நான் தனியே வைக்கப்பட்டிருந்தேன். என்னைத் திரும்ப அவர் பார்க்கிற மூன்று நாட்கள் வரையில் கொஞ்சம்கூட சாப்பிடவில்லை. மருத்துவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் மருந்து மாத்திரைகளைக் கூட சாப்பிட மறுத்து விட்டார் என்று அறிந்தபின் என் மனசு சங்கடப்பட்டது.

தன்னம்பிக்கையும் துணிவும் இருந்த அவரிடம் என்மீது கொண்டிருந்த அன்புக்கு எல்லையே இல்லை என்பதை இப்போது நினைத்தாலும் நெஞ்சு நெகிழும்.

(தொடரும்…)

11.09.1988

You might also like