அண்ணன்-தங்கை பாசத்துக்கு உதாரணமான நல்லதங்காள்!

“சிங்குச்சா… சிங்குச்சா… பச்சைச் சேலை சிங்குச்சா…” என்று ‘பச்சைச் சேலை’ சென்டிமென்ட் சீஸன் பரவியது ஞாபகம் இருக்கிறதா சீசனின் போது பல உடன்பிறப்புகள் திணறிப்போய் கூட பிறந்தவர்களுக்கு பாசத்துடன் பச்சை சேலை எடுத்து கொடுக்க பச்சை சேலைக்கு அவ்வளவு ‘டிமாண்ட்’.

அப்படியொரு பச்சைப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்ட ஊர் அர்ச்சுனாபுரம் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகில் உள்ள சின்ன கிராமம்.

அது சரி… பச்சைச் சேலைக்கும் இந்தச் சின்னக் கிராமத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒரு பின்னோட்டம்.

நல்லதங்காள்… இதே கிராமத்தைச் சேர்ந்த பெண். பெற்றோர் இறந்துவிட நல்லதங்காளை வளர்த்தது அவளுடைய அண்ணன் நல்லதம்பி. அவளைச் செல்லமாக வளர்த்து மானாமதுரை ராஜாவான காசிராஜனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான்.

அண்ணனைப் பிரிய மனசில்லாமல் போகும்போது அழுதபடியே போயிருக்கிறாள் தங்கை. பிறகு அடுத்தடுத்து நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள். சந்தோசம் கொஞ்ச காலம்தான்.

மானாமதுரையில் மழை இல்லாமல் ஒரே வறட்சி. பஞ்சம், பட்டினி. நல்லதங்காள் வீட்டிலும் பஞ்சம். வீட்டில் இருக்கிற பலவற்றை விற்றுவிட்டார்கள். தாலி ஒன்றுதான் பாக்கி. “எங்க அண்ணனைப் பார்க்கப் போறேன்… குழந்தைகள் பசியால் துவள்றதைப் பார்க்க முடியலை” என்று சொல்லிவிட்டு அண்ணனின் கிராமமான அர்ச்சுனாபுரத்துக்குப் போனால். கூடவே நடந்து வந்தன ஏழு குழந்தைகளும்.

வேட்டையாடப் புறப்பட்ட அண்ணன் வழியிலேயே தங்கையையும் குழந்தைகளையும் அந்தக் கோலத்தில் பார்த்து கண் கலங்கிப் போய் “வீட்டுக்குப் போ… வேட்டையாடிவிட்டு வாரேன்” என்று சொல்லி அனுப்பினான்.

அண்ணன் மனைவிக்கு இவள் வந்தது பிடிக்கவில்லை. கதவைப் பூட்டி விட்டாள். குழந்தைகள் அங்கிருந்த அழுகிப்போன மாங்காய்க்குக் கூட போட்டி போட்டன. நல்லதங்காள் கெஞ்சிக் கூத்தாடி கேப்பையை வாங்கி கூழ் காய்ச்சியபோது குழந்தைகள் பசியில் அனத்திக் கொண்டிருந்தன.

கூழ் கொதித்து இறக்கும் சமயத்தில் அவளது அண்ணி வந்து பானையைத் தட்டிவிட்டாள். கீழே வழிந்த கூழை வழித்துக் குடித்தன குழந்தைகள். பசியில் வேகத்திற்கு சூடு தெரியவில்லை. நல்லதங்காளுக்குப் பார்க்க சகிக்கவில்லை.

குழந்தைகளை வம்படியாக இழுத்துக் கொண்டு தெருவிற்குப் போனாள். அழுதபடியே ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டபடி போனாள். தூரத்தில் வயலில் இருந்த பாழடைந்த கிணறு அவள் கண்களில் பட்டது.

அதனருகே போனதும் தாலியைக் கழற்றி வைத்தாள். மிரண்ட குழந்தைகளை ஒவ்வொன்றாகத் தூக்கி அவள் கிணற்றில் போட்ட போது, காலைக் கட்டிக்கொண்டு அலறின குழந்தைகள். மூத்த பிள்ளை ஓடினான். ஆடு மேய்ப்பவர்களை விட்டுப் பிடித்து வரச் சொல்லி அந்தக் குழந்தையையும் கிணற்றுக்குள் தள்ளித் தானும் குதித்தால் நல்லதங்காள்.

கொஞ்ச நேரத்தில் 8 பிணங்கள்; கூந்தல் கிணற்றில் விரிந்து படர்ந்திருக்க சற்றுப் பெரிய சடலமாக மிதந்தாள் நல்லதங்காள்.

வேட்டை முடிந்து தங்கையைப் பார்க்க வந்த அண்ணன், வீட்டிற்கு வந்து தேடி மனைவியிடம் கேட்டான். வந்ததும் அவர்களை நன்றாகக் கவனித்ததாக பொய் சொன்னால் மனைவி. பக்கத்து வீட்டுக்காரர்கள் நடந்ததைச் சொன்னதும் அழுதபடி ஓடினான் நல்லதம்பி.

கிணற்றில் மிதந்த சடலங்களைப் பார்த்துக் கதறினான். அதற்குள் நல்லதங்காளின் கணவனும் வந்து சேர அவனுக்கும் அதிர்ச்சி. சடலங்களை அடக்கம் செய்த கையோடு – தனது மகளுக்குத் திருமண ஏற்பாடு செய்து – மணப்பந்தலிலேயே தனது குடும்பத்தினரைக் கொன்று ஈட்டியில் பாய்ந்து இறந்து போனான் நல்லதம்பி.

கண்முன்னால் நடந்த சோகத்தைப் பார்க்க முடியாமல் நல்லதங்காளின் கணவனும் ஈட்டியில் பாய்ந்து இறந்து போனான்.

முன்னூறு வருஷங்களுக்கு முன்னால் இந்தச் சம்பவம் நடந்ததாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அர்ச்சுனாபுரம் ஜனங்கள்.

எழுநூர் பேர் ஜனத்தொகை கொண்ட அர்ச்சுனாபுரத்தில் பெரும்பாலும் ஓட்டு வீடுகள்; சரளையாகக் கிடக்கும் சாலை; தாண்டிப் போனால் தண்ணீர் பரவிச் சகதிமயமான வயலின் நடுவில் நல்லதங்காள் கோவில் இருக்கிறது.

வெள்ளைச் சரிகை சேலை. கிரீடம். சற்று அகன்ற விழிகளுடன் நல்லதங்காள் சிலை. பக்கத்தில் சிவப்புத் துணி சுற்றினபடி இறந்து போன ஏழு குழந்தைகளுக்கான சிலைகள். பின்னால் இருக்கிற ஒடிசலான மரத்தில் பிள்ளை வரம் வேண்டி பல தாய்மார்கள் கட்டியிருக்கிற துண்டுச் சேலைத் தொட்டிகள்.

“இங்கே வந்து வேண்டிக்கிட்டா… பலிக்கும்… குழந்தை பாக்கியம் கிடைக்கும்” என்று பக்தியுடன் நம்பும் ஜனங்கள்.

நல்லதங்காள் கோவிலைப் பராமரிக்கப் பரம்பரையாகத் தனி பூசாரி. “மழைக்குச் சில தெய்வங்கள் இருக்கிற மாதிரி, அண்ணன்-தங்கைப் பாசத்துக்கு இந்த நல்லதங்காள் தெய்வம்” – துண்டை இடுப்பில் கட்டியபடி சொல்கிறார் கோவில் பூசாரியான கருப்பையா.

வயலுக்கு இடையில் கோயில் இருப்பது ஆச்சரியம்தான். பக்கத்தில் இன்னொரு மண் திட்டில் சிதைந்த கோவில். வேறு திசை பார்த்து இருக்கிற நந்தி சிலை. இந்தப் பகுதியில் கிணறு வெட்டத் தோண்டும் போதெல்லாம் ஏதாவது பழங்காலப் பாத்திரங்கள், செம்புச் சிலைகள், தங்கக் காப்பு உட்பட பல சமாச்சாரங்கள் கிடைத்திருப்பதாக சகஜமாக சொல்கிறார்கள் ஒருமுறை தோண்டும்போது தங்க காசுகள் அடங்கிய பானை கிடைத்து ஊரில் சிலரது அந்தஸ்து திடீரென்று இருந்ததாகச் சொல்கிறார்கள்.

அவ்வளவு விஷயங்களையும் நம்ப தோன்றியபடி இயற்கையான அபூர்வ தன்மையுடன் இருக்கிறது அந்தக் கோவில். பசிக் கொடுமையினால் தாயும் பிள்ளைகளும் அனாதை மாதிரி சாகிறது கொடுமைங்க, அதனாலதான் நல்லதம்பியும் தாங்க முடியாமல் இறந்திருக்கிறார்.

எவ்வளவு சண்டை சச்சரவு வந்தாலும் ரத்த சம்பந்தம் உறவுகளை விட முடியாதுங்க… கட்டிக் கொடுத்து அனுப்பி கஷ்டப்படுவதை அண்ணன் தாங்கிக்கக் கூடாது.

அதற்காகத்தான் இந்தக் கோவில், இந்தப் பூஜை, வேண்டுதல், திருவிழா எல்லாம். மழையடித்து ஓய்ந்தாலும் மண்ணிலிருந்து மேலெழும்பும் வாசனை மாதிரி இதைச் சொல்கிறார்கள் கிராமத்து ஜனங்கள்.

– மணா எழுதிய  ‘தமிழ் மண்ணின் சாமிகள்’ நூலிலிருந்து…

22.01.2021  01 : 49 P.M

You might also like