“சாதி என்பது குரூரமான யதார்த்தம்”

தமிழகப் பண்பாட்டுச்சூழல், நாட்டுப்புறத் தெய்வங்கள், பெருந்தெய்வங்களின் சமூக மரபுகள் என்று நாம் பார்க்கத் தவறிய பல விஷயங்களைப் பற்றிய தொ.பரமசிவனின் ஆய்வுகள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

டாக்டர் பட்டத்துக்காக ஆராய்ந்திருக்கிற ‘அழகர்கோவில்’ நூல் பல்கலைக்கழக வட்டாரங்களில் ஒருவித அதிர்வை ஏற்படுத்தியது.

‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’, ‘அறியப்படாத தமிழகம்’ ஆகிய நூல்களைத் தொடர்ந்து வெளியான ‘பண்பாட்டு அசைவுகள்’ நூல் விசேஷக் கவனம் பெற்றது.

“தொ.பரமசிவனிடமிருந்து தெறிக்கும் கருத்துக்களும், சான்று மேற்கோள்களும், வாழ்ந்த பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக் கூடியவை” என்கிறார் ஆய்வாளரான ஆ.இரா.வேங்கடாசலபதி.

மதுரை தியாகராயர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவர்.

இலக்கியம், சமயம், கோவில் மரபு, பண்பாடு என்ற எந்த விஷயத்தைத் தொட்டாலும் அற்புதமாக விவாதித்துக் கொண்டே போகும் இவரது விமர்சனங்கள் சிறு பத்திரிகை வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டிருக்கின்றன. இழந்து கொண்டிருக்கிற பல தொன்மையான மரபுகளைப் பற்றின தன்னுணர்வை உருவாக்குகின்றன இவரது எழுத்தும், பேச்சும்.

மதுரையில் தங்கும் விடுதி ஒன்றின் மேல் தளம் அங்கு சந்தித்துப் பேசியபோது, பேச்சில் தன் அகங்காரம் இல்லை; தன்னுடைய கருத்து மட்டுமே சரி என்கிற பிடிவாதங்கள் இல்லை. ஆனால் பேச்சினூடாக பிஞ்சுத் தீயாகப் பரவியிருக்கிறது கோபம்.

திராவிட இயக்கங்களின் மீது பரிவும், அவற்றின் தற்போதைய சரிவு குறித்த வருத்தமும் இழையோடப் பேசுகிறார். உரையாடலின்போது இறுக்கமில்லாமல் சரளமாக வரும் நெல்லைக்கு உரித்தான வட்டாரப் பேச்சு, அதில் வெளிப்படும் வாஞ்சை – எல்லாமே பேசும்பொழுதை முக்கியமாக்கி விடுகின்றன.

உங்களைப் பற்றி முதலில் சொல்லுங்களேன்…?

என்னுடைய சொந்த ஊர் பாளையங்கோட்டை. அப்பா, அம்மா இருவருக்கும் இதே ஊர் தான். பெரும்பாலும் கிறிஸ்தவ நகரம் என்று அறியப்பட்டிருந்தது பாளையங்கோட்டை. உண்மையில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவக் கோயிலெல்லாம் இங்குண்டு.

இதன் பழைய பெயர் ஸ்ரீவல்லப மங்கலம். மதுரைக்குத் தெற்கே, பெரிய கோட்டையுள்ள நகரம் இது. பின்னாளில் தென்னிந்தியச் திருச்சபை இருந்ததால் இது கிறிஸ்தவ நகரமாகவும் வளர்ச்சி பெற்றது.

கல்வித் தரமுடைய நகரம் இது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கண் தெரியாதவர் பள்ளி இங்கு இருக்கிறது. காது கேளாதோருக்கான பள்ளியும் இருக்கிறது. அவர்களாலும் படிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஊட்டின நகரம் இது. கைதிகளும் இங்கு படிக்க முடிந்தது. நிறைய நூலகங்கள் இருந்ததால் வாசிப்புப் பழக்கமும் அதிகம்.

திராவிட இயக்கத்தால் உருவான வாசிப்பும் பயிற்சியும் முக்கியம். குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட ஜாதியிடம், அதிலும் அதில் முதல் தலைமுறையினரிடம் பாதிப்பை ஏற்படுத்திய காலம். அதனால் என்னைப் போன்றவர்களுக்கு விளையாட்டைப் போலவே, வாசிப்பும் பழக்கமானது.

அதிலும் வாசிப்பு, அரசியல் வாசிப்பாக இருந்தது. 1969 – ல் நான் இளங்கலை பொருளாதாரம் படிக்கிறபோது வகுப்பில் இருந்த 63 மாணவர்களில் மூன்று பேர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் ஏதேனும் ஒரு கட்சிச் சார்பு இருந்தது.

தன்னுடைய வீடு, தெரு, ஜாதி தாண்டி மாணவனுக்கென்று ஒரு பொது உலகம் இருந்தது. அவர்கள் பேசுவதற்கும், சண்டை போடுவதற்கும் ஏதோ ஒரு தத்துவம் இருந்தது. பள்ளிகளிலேயே அப்போது திமுக மாணவர்களுக்கும், காங்கிரஸ் மாணவர்களுக்கும் இடையே சச்சரவுகள், சண்டைகள் எல்லாம் வரும்.

என்னைப் போன்று முதல் தலைமுறையாகப் படிக்கிற குடும்பங்களிலிருந்து வருகிறவர்கள் தன்னுணர்வோடு சிந்திக்கிற போது பெரியார், திமுக என்று தான் இருக்க முடியும். அப்படித்தான் எங்களில் பெரும்பாலானவர்கள் இருந்தோம். கல்விச்சூழல், இயக்கச் சூழல் இரண்டுமிருந்தது.

அப்போது எல்லா மாணவர்களும் பாடப் புத்தகங்களுக்கு அப்பால் ஏதேனும் ஒரு புத்தகத்தையோ, இதழையோ கையில் வைத்திருப்பார்கள். அது தரமான இதழாக இருக்கும். அந்த வாசிப்புப் பழக்கம் 40 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துவிட்டது. தொலைக்காட்சிப் பாதிப்பு வந்த பிறகு இன்னும் குறைந்து விட்டது. தொடர்ந்து வாசித்திருந்தால்தானே சிந்தனை இருக்கும்.

அந்த இயக்க ஈடுபாடு தானே அப்போது மொழியுணர்வை உருவாக்கியது?

நிச்சயமாக. ஏனென்றால் மொழி என்பது மக்களை விட்டுத் தனித்து நிற்பதில்லையே. பெருவாரியான மக்கள் திரளின் மொழி எதுவோ, அது அப்போது அறிவுலக மொழி அல்ல. ஆங்கிலத்திற்கும், வடமொழியான சமஸ்கிருதத்திற்கும் இருந்த சமூக மரியாதை, தாய்மொழியான தமிழ் மொழிக்கு ரொம்பக் காலமாக இல்லை.

அப்போது புதிதாக எழுத்தறிவு பெற்ற இளைய தலைமுறை எங்களது தாய்மொழியின் இடம் எங்கே? என்று இயல்பானபடி கேள்வி கேட்டது. அவனுக்கு ‘அம்பலம்’ என்றால் புரியும். ‘நாட்டாமை’ என்றால் புரியும்.

சமஸ்கிருதம் கலந்த சொற்கள் அவனுக்குப் புரியவில்லை. சமூக விடுதலை என்பது மொழி சார்ந்த தளத்திலும் இயங்குவது. தவிர்க்க முடியாதது. என்னுடைய மொழிக்கான இடம் எங்கே? என்கிற தேடல் இருந்தபோது, திராவிட இயக்கத்தவர்களின் மொழியுணர்வு தனக்கானதாக இளைய தலைமுறைக்குத் தோன்றியது. அதுவும் விடுதலையின் ஓர் அம்சம் தானே!

அதற்கு இரை போடுகிற மாதிரி ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் திராவிட இயக்கத்தின் பெரிய தலைவர்களும், சிறிய தலைவர்களும் ஆளுக்கு ஒரு பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரே சமயத்தில் இருபது பத்திரிகைகளுக்கு மேல் வெளிவந்து கொண்டிருந்தன.

அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் என ஒவ்வொருவர் கையிலும் பத்திரிகைகள். பெரியார் வழி தனி. 1925 லிருந்து ‘குடியரசு’ தொடங்கி, பிறகு அதை ‘விடுதலை’யாக மாற்றி நீண்டகாலம் இயங்கியவர்.

தமிழ் இதழியல் வரலாற்றில் நெடுங்காலம் இயங்கியவர்களாக அவரையும், டி.ஏ.சொக்கலிங்கத்தையும் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு ஏ.என்.சிவராமன். இப்படி அன்றைய இளைஞர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்த பலதரப்பட்ட சூழல் இருந்தது.

அந்தச் சமயத்தில் தனித்தமிழ் வாதத்தை முன்வைத்த மறைமலையடிகள் போன்றவர்களை நீங்கள் ஆதரிக்கவில்லையா?

மறைமலையடிகளைப் பொறுத்தவரை அவருக்கு வேறொரு நோக்கமும் இருந்தது. சைவம் சார்ந்த தமிழ் இயக்கத்தை அவர் முன்வைத்தார். ஆனால் திராவிட இயக்கங்களின் மொழி எதுகை மோனையுடன் ஒலி நயத்தை உள்வாங்கிக் கொண்டதாக இருந்தது.

எதைச் சொன்னாலும் ஒலி நயத்துடன் சொன்னார்கள், எழுதினார்கள். அதனால் மக்களுக்கு அந்த மொழிநடை பிடித்துப்போனது. பழமொழிகளை, விடுகதைகளை, சொல்லடைகளைப் பயன்படுத்தினார்கள்.

காங்கிரசில் முக்கியமான தலைவர்களாக திரு.வி.க., டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றவர்கள் இருந்தாலும் அவர்கள் சமூகத்தின் மேலடுக்கில் இருந்து வந்தவர்கள். எளிய மக்களிடையே புழங்கிய பழமொழி, ஒலி நயம், விடுகதை, பேச்சு மொழியுடன் தொடர்புடைய மொழி அவர்களுக்கு கைவரவில்லை. திராவிட இயக்கத்துக்காரர்களுக்கு அது கை வந்தது.

உங்களுடைய டாக்டர் பட்டத்துக்கான ஆய்வை எங்கே பண்ணினீர்கள்? அப்போதிருந்த சூழல் உகந்ததாக இருந்ததா?

ஆய்வுகள் அப்போது சிறிய அளவிலேயே இருந்தன. வேறு எந்த மொழி பேசுகிற தேசிய இனமும் செய்யாத தவறை நாம் செய்தோம்.
அப்போது தமிழகத்தில் இருந்தவர்கள் 4 கோடி மக்கள். இருந்தும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது சென்னைப் பல்கலைக் கழகம் மட்டும்தான். 110 ஆண்டுகளாக ஒரே ஒரு பல்கலைக் கழகத்தை வைத்துக் கொண்டிருந்த வேறு மாநிலம் எங்கும் இல்லை.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கு இருந்த இடமே விசித்திரம். 1857-ல் தொடங்கிய பல்கலைக் கழகத்தில் 1914 வரைக்கும் தமிழ் பாடத் திட்டக் குழுவே கிடையாது. முதன்முதலாகத் தமிழில் படம் வந்ததும் 1929-ல் தான். ஆக ஒரு பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகியும், அது எங்கே இருக்கிறதோ அந்த மாநிலத்தில் மொழிக்குப் போதுமான இடம் இல்லை என்றால் அது என்ன நியாயம்? ஆனால் அதை நாம் சந்தித்துக் கொண்டிருந்தோம்.

1925-லிலேயே தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்கிற குரலுடன் சில முயற்சிகள் நடந்தன. அப்போது எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை என்கிற தமிழறிஞர் சேலத்தில் தமிழன்பர்கள் மாநாட்டைக் கூட்டி “மதுரையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைய வேண்டும்” என்று தீர்மானம் போட்டார்.

ஆனால், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவானது 1983-ல். இதற்கு இவ்வளவு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

தமிழ்க் கல்விச்சூழல் பெருவாரியான மக்களின் மொழிக்கு நெடுங்காலமாக நெருக்கமாக இல்லை. பல்கலைக் கழகங்களோ, ஆய்வு நிறுவனங்களோ தமிழ் மொழியுடன் உறவு கொண்டதே கடந்த 25 ஆண்டுகளாகத்தான்.

இந்தச் சூழலில் ஆறு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக வேலை பார்த்த பிறகு, 1976-ல் மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்காகப் போய்ச் சேர்ந்தேன். கள ஆய்வு என்பதன் பெருமை அப்போதுதான் புலப்பட்டது. புத்தகங்களுக்கு உள்ளேயே, நூலகங்களுக்கு உள்ளேயே ஆராய்ச்சி என்ற நிலை மாறி, தெருவையும், ஆய்வையும் இணைக்கிற ‘கள ஆய்வு’ அப்போது செல்வாக்குப் பெற ஆரம்பித்திருந்தது.

மு.ராகவய்யங்கார், மயிலை சீனி.வேங்கடசாமி, ராசமாணிக்கனார் போன்ற சிலர் செய்திருந்தாலும் அது பரவலாக இல்லை. எழுபதுகளுக்குப் பிறகே கள ஆய்வுகள் நிறைய நடந்தன. என்னுடைய ஆய்வும் கள ஆய்வு சார்ந்ததே.

கள ஆய்வை எந்த அளவுக்கு மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு போக முடிந்தது?

1960-களில் கடைசிப் பகுதி வரை டாக்டர் பட்டத்துக்கான தமிழ் ஆய்வேடுகளை ஆங்கிலத்தில் தான் கொடுக்க வேண்டும். அறிஞர்களான மு.வே.ரா.வோ, வ.சுப.மாணிக்கமோ ஆங்கிலத்திலேயே ஆய்வேடுகளைக் கொடுத்தார்கள். அதனால் அந்த ஆய்வுகள் எளிய மக்களைப் போய்ச் சேரவில்லை, அது அவர்களைப் பற்றியதாக இருந்தாலும்கூட. இதையடுத்து தமிழாய்வுகள் தமிழியல் ஆய்வுகளாக மாறின.

எழுத்தறிவில்லாத பெருவாரி மக்களின் மொழியை ஆராய ‘மொழியியல் துறை’ என்கிற துறை உருவானது. இதன் ஆய்வாளர்கள் காடு, மேடெல்லாம் அலைந்து சாதாரண மக்களின் மொழியைப் பதிவு பண்ணியபோது தொடங்கியது கள ஆய்வு.

எழுபதுகளில் அதை முக்கியமாக வளர்த்தெடுத்தது நா.வானமாமலை நடத்திய ‘ஆராய்ச்சி’ என்கிற ஏடு. அப்புறம்தான் தமிழ் ஆய்வுகள் தமிழியல் ஆய்வுகளாக வளர ஆரம்பித்தன.

அறிவு என்பதும் ஆராய்ச்சி என்பதும் புத்தகங்களுக்குள்ளாகவும், நூலகங்களுக்குள்ளாகவும் மட்டுமே இருக்க முடியாது. தெருக்களுக்குப் போய் மக்களைச் சந்தித்து மக்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்கிற தன்னுணர்ச்சி வந்த பிறகே புதுப்புது ஆய்வுகள் பிறந்தன.

எளிய மக்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன? அவர்களுக்கு எழுதத் தெரியாவிட்டாலும், அவர்கள் அறிஞர்கள் இல்லை என்று யாரும் சொல்லமுடியாது. மக்களிடமிருந்து கற்பது, கற்றுக் கொடுப்பது என்கிற இருமுனைப்புப் போக்குடையதாகப் பிறகு மாறின ஆய்வுகள்.

அழகர் கோவிலைப் பற்றி நான் கள ஆய்வு செய்தேன். அதைச் சமூகவியல் பார்வையுடன் செய்தேன். அதற்கு முன்பு கோவில் ஆய்வுகள் என்றால் கட்டிட ஆய்வுகள், கலை ஆய்வுகளாகவே இருந்தன. அதைவிட்டுக் கோவிலுக்கும் மக்களுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்லப்படவில்லை. என்னுடைய ஆய்வு முழுக்க முழுக்க அதிலேயே மையம் கொண்டது.

வங்காளத்தைச் சேர்ந்த பி.கே.சர்க்கார் என்பவரின் புத்தகம் எனக்கு உந்துதலாக இருந்தது. மக்களுக்கும் சமூக நிறுவனங்களுக்குமான உறவை ஆராய்கிறது அந்தப் புத்தகம்.

நம் நாட்டில் மிகப்பெரிய சமூக நிறுவனம் என்பது கோவில்தான். மற்ற சமூக நிறுவனங்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன. காலனி ஆட்சியில் அழிந்தது போக மிஞ்சியது கோவிலும், சாதியும் தான். இந்த இரண்டு சமூக நிறுவனங்களுக்கிடையே உள்ள தொடர்பை பற்றியது தான் என்னுடைய ஆய்வு. குறிப்பிட்ட நான்கு சாதிகளுக்கும் அழகர் கோவிலுக்கும் உள்ள உறவையே அந்த ஆய்வில் விவரித்திருக்கிறேன்.

சாதிகளுக்குக் கோவிலுடன் அந்த அளவுக்கு நெருக்கம் இருந்ததாக உணர்ந்தீர்களா?

சாதி என்பது குரூரமான யதார்த்தம். சமூகம் என்பதே இங்கு சாதியின் அடுக்குகளாகத் தான் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்பதே வேறு விஷயம். ஆனாலும் இதைத் தவிர்க்க முடியவில்லை. இங்கே தனி நபர்கள் என்று யாரும் இல்லை. எல்லோர் மீதும் விரும்பியோ, விரும்பாமலோ சாதி போர்த்தப்பட்டிருக்கிறது.

சிலருக்குப் பச்சை குத்தியது போல, தோலோடு சேர்த்துக் குத்தப்பட்டிருக்கிறது. சாதியைச் சமூகத்தின் முக்கியமான அலகாக எடுத்துக் கொண்ட எல்லா ஆய்வுகளையும் பண்ணுகிறோம், அது அல்லாத ஆய்வுகள் அனைத்தும் முழுமை இல்லாத ஆய்வுகள் என்று நினைக்கிறேன்.

– தொ.பரமசிவனின் நீண்ட நேர்காணலின் முதல் பகுதி இது. நேர்காணல் தொடரும்…

– ‘மணா’வின் ‘ஆளுமைகள், சந்திப்புகள், உரையாடல்கள்’ நூலிலிருந்து…

20.01.2021  03 : 55 P.M

You might also like