பறவைக் காய்ச்சல் பரவல்: கோழி, முட்டை வாங்க அச்சம்!
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது.
கோழிகள், வாத்துகள் பாதிப்பு வந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. அங்கு கோழிக்கும், முட்டைக்கும் அரசே நிவாரணத்தை அறிவித்திருக்கிறது.
கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்துச் சோதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள நாமக்கல்லில் தான் ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணைகள் இருக்கின்றன. இங்கிருந்தே கோழிகளும், முட்டைகளும் பல மாநிலங்களுக்கு விநியோகமாகிக் கொண்டிருக்கின்றன.
தற்போது பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து விநியோகமாகும் கோழி, முட்டைகளுக்குப் பிரச்சினை வந்திருக்கிறது. அண்மையில் கொரோனா வந்தபோதும் விலை குறைக்கப்பட்டு அவை விற்பனை ஆயின. மீண்டும் இப்போது அதே நிலை.
கோழி இறைச்சியையும், முட்டைகளையும் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் பறவைக் காய்ச்சல் குறித்து இருக்கும் அச்சத்தால் அவற்றை வாங்குவதற்குத் தயங்குகிறார்கள். இதனால் அவற்றின் விலை சில நாட்களுக்குள் கீழிறங்கியிருக்கிறது.
கால்நடைப் பாரமரிப்புத்துறை அதிகாரிகள் தலையிட்டு “சர்வதேசத் தரத்தில் கோழிப் பண்ணைகள் பராமரிக்கப்படுவதால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்று அறிவித்திருக்கிறபோதும், கோழி, முட்டைகளை விற்கும் மொத்த வியாபாரிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள் வரை இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசே தலையிட்டு இதில் உரிய விளக்கம் அளித்தால் ஒழிய, மக்களிடம் தற்போது நிலவும் அச்சம் விலகாது.
07.01.2021 11 : 05 A.M.