இளவேனில் மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு!
இடதுசாரி சிந்தனையும் எழுச்சிமிக்க கவித்துவமான தமிழ் நடைக்குச் சொந்தக்காரருமான கவிஞர் இளவேனில் உடல்நலமின்றி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.
‘ஆத்மாவின் தெருப்பாடகன்’ என்ற நூலின் மூலம் தமிழ் எழுத்துலகில் பிரபலமாக அறியப்பட்ட இளவேனில், எழுத்துருக்கள் மற்றும் ஓவியங்கள் வரையும் திறன் பெற்றவராக இருந்தார். திரைப்படத் துறையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். சிலகாலம் நந்தன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
கலைஞர் எழுதிய “சாரப்பள்ளம் சாமுண்டி” என்ற கதையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட “உளியின் ஓசை” திரைப்படத்தை இயக்கினார். எழுத்தாளராக இருந்த இளவேனில் இயக்கிய முதல் படமும் இதுதான்.
அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர், அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, “எனது கதையின் சாரத்தைக் காப்பாற்றும் விதத்தில் படத்தை மிகுந்த கவனத்துடன் எடுத்துள்ளார் என்று கவிஞர் இளவேனிலைப் பாராட்டினார்.
கவிஞர் இளவேனில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், “புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்” என்ற இளவேனில் புத்தகத்திற்கு முத்தான முன்னுரை வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது இதயத்தில் அவருக்குத் தனி இடம் கொடுத்துவைத்திருந்தார்.
இலக்கிய உலகத்திற்கும், திரையுலகத்திற்கும் பேரிழப்பாகியுள்ள அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், சக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளவராக வாழ்க்கையைத் தொடங்கி இளவேனில், பி்ன்னாளில் திராவிட இயக்கப் பற்றாளராகவும் திகழ்ந்தார். எப்போதும் நண்பர்களுடன் சமூக அரசியல் நடப்புகள் குறித்து விவாதிப்பதில் ஒரு குழந்தையைப் போல செயல்பட்டார்.
எப்போதும் இளவேனிலுக்கு தி.நகரிலுள்ள இந்தியன் காபி ஹவுஸ் பிடித்தமான இடமாக இருந்தது.
– தான்யா