கவியரசரின் திறன் நிகரற்றது!

தமிழ்த் திரையுலக இயக்குனர்களில் ஏ.பி.நாகராஜன் மிகவும் பிரசித்தி பெற்றவர். கவியரசர் கண்ணதாசனுக்கும், இவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பத்திரிகைகளில் அறிக்கைப் போர் நடந்தது.

பின்பு இதை வெறுத்து இருவருமே ஒன்று சேர்ந்தார்கள். இவர்களின் சேர்க்கையின் விளைவு அரிய பல படங்களும் அவற்றில் இசைத்த பாடல்களும் நமக்குக் கிடைத்தன.

அந்தத் திரைப்படங்களில் ஒன்றுதான் ‘திருவிளையாடல்’. அதிலே “ஒருநாள் போதுமா”, “இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை”, “பாட்டும் நானே” என்ற மூன்று பாடல்களையும் தந்த கவியரசரின் ஆற்றலை விவரிக்க வார்த்தையேது? ஒரு திரைக்கதைச் சம்பவத்தைப் பின்னணியாக வைத்து மூன்று பாடல்களைத் தரும் திறன் நிகரற்றது.

அது மட்டுமா? “பாட்டும் நானே” எனும் பாடல் மனிதனை நோக்கி இறைவன் பாடுவதாக அமைந்தது. இத்தகைய ஒரு பாடலைப் புனையும் ஆற்றல் கவியரசரிடமே மிளிர்ந்தது.

இந்தப் பாட்டின் உருவாக்கம் மிகவும் சுவராஸ்யமானது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். அனைவரும் ஒரு அறையில் உட்கார்ந்திருக்கும் போது, பாடல் வரிகளின் ஆரம்பம் கிடைக்காது கவியரசர் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கே.வி.மகாதேவன் நகைச்சுவை ததும்ப “என்ன இன்னைக்குள்ளே பாட்டு முடிஞ்சிடுமா?” என்று கவிஞரைப் பார்த்துக் கேட்க, கவிஞரின் வாயில் இருந்து உதித்தது,

“ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொருநாள் போதுமா?
நாதமா? கீதமா? அதை நான் பாட
இன்றொருநாள் போதுமா?”

– நன்றி: முகநூல் பதிவு.

02.01.2021   11 : 44 A.M

You might also like