இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு (101) அவர்கள் சிறுநீரகக் கோளாறு, ரத்த அழுத்தம் மற்றும் உணவு விழுங்க முடியாத நிலை ஏற்பட்டதால், கடந்த 1-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு பல்வேறு மருத்துவத் துறை நிபுணர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 23-ம் தேதி அவரது உடல்நிலையில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து நேற்று பகல் 1.55 மணிக்கு நல்லகண்ணு காலமானார்.
இதையடுத்து அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு, மாலை 5 மணிக்கு சென்னை தி.நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பொதுமக்கள், கட்சியினர், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு பிறகு, அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க வீர முழக்கங்களுடன் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் நல்லகண்ணுவின் விருப்பப்படியே அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) – ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தானம் வழங்கப்பட்டது.
நல்லகண்ணுவின் மறைவையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் அடுத்த 7 நாட்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் 3 நாட்களுக்கும் துக்கம் அனுசரிக்கும் விதமாக கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 26-ம் தேதி நல்லகண்ணு தனது 101-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.