அரசியல் கட்சித் தொடங்கும் முன்பே, சினிமாவில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டவர் ‘இளைய தளபதி’ விஜய். அவரது படம் வெளிவரும்போது, ஏதாவது ஒரு ரூபத்தில் சிக்கல் உருவாகும்.
இப்போது தவெக கட்சியை ஆரம்பித்து, பல தலைவர்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். தேர்தல் நேரத்தில், இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.
ஆனால் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஜனநாயகன்’ படத்துக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.
‘ஜனநாயகன் பட ரிலீசின்போது ஆளுங்கட்சி பல கட்டுப்பாடுகளை விதிக்கும் என விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால் அந்த படத்தை வாங்கி வெளியிட தயக்கம் காட்டுகிறார்கள்.
இந்த நிலையில் விஜய்க்கு வில்லனாக முளைத்துள்ளார், தெலுங்கு நடிகர் பிரபாஸ். ஜனநாயகன் வெளியாகும் அதே நாளில் (ஜனவரி 9) பிரபாஸ் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ படமும் வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத் உறுதி செய்துள்ளார்.
பிரபாஸ் படத்தின் வெளியீட்டால் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மாநிலங்களில் கடும் போட்டி இருக்கும்.
தமிழகத்தில் ‘ஜனநாயகன்’ படத்துக்கு அதிகமான திரையரங்குகள் கிடைக்கும். எனினும் தமிழகம், தவிர இதர மாநிலங்களில் விஜய் படத்துக்குத் திரையரங்குகள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவும்.
இதனால் வசூல் பாதிக்கப்படும் என்று விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.
– பாப்பாங்குளம் பாரதி.