குறைந்த பட்ஜெட் அதிக லாபம் பார்த்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

அண்மையில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட வெற்றியைத் தரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல முன்னணி நடிகர்களின் அல்லது இயக்குநர்களின் படங்கள் தோல்வியடைந்த நிலையில், தற்போது கிடைத்த இந்தப் புள்ளிவிவரம் ஆச்சர்யப்பட வைக்கிறது.

சசிகுமார் – சிம்ரன் நடித்து புது இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் உருவாக்கிய படமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மொத்தத் தயாரிப்புச் செலவு 7 கோடி ரூபாய்.

ஆனால், திரையரங்குகளில் வெளியாகி நன்றாக ஓடி, கிடைத்த வசூல் மட்டும் 90 கோடி. இதுதவிர ஓடிடி தளத்தின் மூலமாக கிடைக்கும் வருமானம் தனி.

இதேமாதிரிதான் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வெளியான ‘டிராகன்’படம், குறைந்த செலவிலான தயாரிப்பில், அதிக லாபத்தைக் கொடுத்த படமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

இதற்கடுத்த ஆச்சர்யம் சமீபத்தில், வெளியான ‘மாயக் கூத்து’ திரைப்படத்துக்கு ஆன மொத்தச் செலவே 25 லட்சம் ரூபாய். இந்தப் படம் திரையரங்குகளிலும் ஓடி, ஓடிடியிலும் வர இருக்கிறது.

ராம் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ‘பறந்து போ’ படம் மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து தமிழகத்துத் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலே குறிப்பிட்ட இந்தப் படங்களின் வெற்றிக்கான பொதுவான ஒற்றுமை என்ன என்று பார்த்தால், அந்தத் திரைப்படத்தின் முக்கியமான கதைக்களமும் அதை இயக்கிய விதமும் தான்.

ஆக, படங்களுக்காக செலவழிக்கப்படும் அதிகமான பொருட்செலவு, பெரிய ஸ்டார் என்கிற பின்புலமோ ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானித்து விடுவதில்லை.

என்னதான் மார்க்கெட்டிங் யுக்திகளைப் பயன்படுத்தினாலும், அவை பொருளாதார ரீதியாக சரிவைச் சந்திக்க நேரிட்டு இருக்கிறது. 

நடிகர் வடிவேலு பாணியில் சொல்வதென்றால், “பில்டிங் ஸ்டார்ங்… ஆனா, பேஸ்மெண்ட் வீக்”.

தற்போது வலுவான கதையம்சமுள்ள திரைப்படங்கள் வெற்றி அடைவது வடிவேலுவின் இந்த எதார்த்த வசனத்தைத்தான் உறுதிப்படுத்துகிறது.

இனியாவது, “பேஸ்மெண்டை உறுதிப்படுத்துவார்களா?” இயக்குநர்களும் படத்தயாரிப்பாளர்களும்.

You might also like