மாதவிடாய் சுகாதார தினம் (MHD, சுருக்கமாக MH தினம்) என்பது உலக அளவில் நல்ல மாதவிடாய் சுகாதார மேலாண்மையின் (MHM) முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் மே 28-ம் தேதி ஆண்டுதோறும் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது
மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேசுவதில் உள்ள தயக்கத்தை போக்குவதற்கும், இந்த காலத்தில் பெண்களுக்கு சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஜெர்மனியில் உள்ள வாஷ் யுனைடெட் தொண்டு நிறுவனத்தால் 2013-ம் ஆண்டு இந்த தினம் தொடங்கப்பட்டது மற்றும் முதல் முறையாக 2014-ல் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வளரும் நாடுகளில், மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதில் பெண்களின் தேர்வுகள் பெரும்பாலும் செலவுகள், கிடைக்கும் தன்மை மற்றும் சமூக விதிமுறைகளால் வரையறுக்கப்படுகின்றன.
மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடைகளை உடைக்கவும், பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் மாதவிடாய் பொருட்கள் கிடைக்கச் செய்வதை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் மே 28-ம் தேதி உலக மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.
2025-ம் ஆண்டிற்கான கருப்பொருள் ‘Together for a #PeriodFriendlyWorld’, இது கண்ணியம், தரவு மற்றும் முதலீட்டில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கக் கூட்டு நடவடிக்கையை வலியுறுத்துகிறது.
மாதவிடாய் சுகாதார தினம் என்பது சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களில் தகவல்களை வெளியிடுவதற்கும், முடிவெடுப்பவர்களை கொள்கை உரையாடலில் ஈடுபடுத்துவதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.
யுனிசெப், உலகம் முழுவதும் சுமார் 1.8 பில்லியன் மக்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படுவதாக கூறியுள்ளது.
உலக மாதவிடாய் சுகாதார தினத்தின் முக்கிய அம்சங்கள்:
தடைகளை உடைத்தல்:
மாதவிடாய் சுகாதார தினம் மாதவிடாயை இழிவுபடுத்துவதையும் மாதவிடாய் குறித்த திறந்த உரையாடல்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அணுகலை ஊக்குவித்தல்:
அணுகக்கூடிய மற்றும் மலிவு விலை மாதவிடாய் பொருட்கள், பாதுகாப்பான சுகாதார வசதிகள் மற்றும் போதுமான மாதவிடாய் சுகாதாரக் கல்வி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
ஆதரவு:
மாதவிடாய் சுகாதார தினம், மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை ஆதரிக்கும் கொள்கைகளை ஆதரிக்க நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு ஒரு தளமாக செயல்படுகிறது.
கூட்டு நடவடிக்கை:
மாதவிடாய்க்கு உகந்த உலகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை இந்த இயக்கம் வலியுறுத்துகிறது, அங்கு அனைவரும் கண்ணியமான மாதவிடாயை அனுபவிக்க முடியும்.
மே 28 ஏன்?:
மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்கள் நீடிப்பதாலும், மக்கள் சராசரியாக ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்கள் மாதவிடாய் ஏற்படுவதாலும், ஒவ்வொரு ஆண்டும் ஐந்தாவது மாதத்தின் 28-வது நாளில் மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.
மாதவிடாய் சுகாதார தினத்தின் தாக்கம்:
மாதவிடாய் சுகாதார தினம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மாதவிடாய் ஆரோக்கியம் குறித்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும், மில்லியன் கணக்கான மக்களை சென்றடைவதிலும்,
உலகெங்கிலும் உள்ள கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துவதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் மற்றும் மாதவிடாய் சுகாதார தினம் தெரிவித்துள்ளது.
சிடிசி வழிகாட்டுதல்கள்:
மாதவிடாய் நேரத்தில் சிடிசி வழிகாட்டுதலின் படி, (CDC – Centers for Disease Control and Prevention) சானிட்டரி பேட் (sanitary pads), டேம்பான்ஸ் (Tampons), மாதவிடாய் கப் (Menstrual cups), மாதவிடாய் டிஸ்க்குகள் (menstrual discs), Period panties, துணி நாப்கின்கள் (cloth napkins) ஆகிய மாதவிடாய் பொருள்களை பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை (Method of use) :
மாதவிடாய் பொருள்களை உபயோகிக்கும் ஒவ்வொரு முறையின் முன்பாகவும், பின்னரும் முறையாக கையை கழுவுதல் வேண்டும். ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் சானிட்டரி நாப்கின்களை மாற்ற வேண்டும்.
அதிக ரத்தப் போக்கு உள்ளவர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின்களை மாற்ற வேண்டும்.
மாதவிடாய் கப் (Menstrual cups) பயன்படுத்துபவர் ரத்தப் போக்கின் அளவை பொறுத்து 6-8 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றிக்கொள்ளலாம். இவற்றை உபயோகிப்பவர்கள் வெந்நீரில் ஸ்டெரிலைஸ் செய்து பயன்படுத்த வேண்டும்.
மேலும், மாதவிடாய் காலங்களில் காட்டன் பேண்டீஸ் பயன்படுத்த வேண்டும். தற்போது உள்ள பாலிஸ்டின் பேண்டீஸ் பயன்படுத்தினால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வருவதற்கு வழிவகுக்கும்.
மேலும், ரீயூசபிள் பேட் பயன்படுத்தும் பொழுது அவற்றை வெந்நீரில் சுத்தம் செய்து, சூரிய வெளிச்சத்தில் உளற வைக்க வேண்டும். இவ்வாறு நாம் பயன்படுத்தினால், தேவையற்ற தொற்றுநோய்களை தடுக்கலாம்
அப்புறப்படுத்தும் முறை (Dispose):
சானிட்டரி நாப்கின்களை ஃப்ளஷிங் செய்தல் கூடாது. இதில் உள்ள டை ஆக்சின் போன்ற ரசாயனப் பொருள்களால் கல்லீரல் கோளாறு போன்றவை ஏற்படும். எனவே, முறையாக அப்புறப்படுத்துதல் மிகவும் அவசியம்.
பயன்படுத்தப்பட்ட சானிட்டரி பேடுகளை காகிதத்தில் மடித்து குப்பைத் தொட்டியில் போடுதல் வேண்டும். அவற்றை அப்புறப்படுத்த கைகளை பயன்படுத்துவதால் அவர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் காகிதத்தில் மடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
நிலையான மாதவிடாய் (sustainable menstruation):
நிலையான மாதவிடாய் என்பது உடல் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைக்கான பொருள்கள். சானிட்டரி பேடுகளில் உள்ள ரசாயணம் மற்றும் பிலாஸ்டிக் கவர்கள் மக்குவதற்கு 100 வருடங்களுக்கு மேலாகிறது.
சராசரியாக 40 ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது. இதனால், ஒருவருக்கே 100 கிலோவிற்கு மேலாக மாதவிடாய் கழிவுகள் உருவாகிறது. இவைகள் மக்குவதற்கு பல்வேறு வருடங்கள் ஆகும் என்பதால் இவை வருங்கால சந்ததியினரை பாதிக்கும்.
எனவே, மாதவிடாய் கப், மட்கும் பேடுகள் (biodegradable pads) பயன்படுத்தலாம். இதனால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பொருளாதார ரீதியாக மாதவிடாய் கப் பயன்படுத்துவது சிறந்தது.
ரூ.400-க்கு வாங்கப்படும் இவற்றை, நாம் 5 வருடங்கள் வரை பயன்படுத்தலாம். மேலும், மாதவிடாய் காலங்களில் வலி மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பின் மகப்பேறு மருத்துவரை அணுகுதல் அவசியம்.
- நன்றி : முகநூல் பதிவு