சாமானியர்கள் – எவ்வளவு எளிய பதம்?
கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், தொலைக்காட்சி விரிவுரையாளர்கள் என்று எல்லா அணியினரை விட, சாதாரணமாக நடைமுறை வாழ்வில் சந்திக்கும் சாமானியர்கள் நிறையக் கற்றுக் கொடுக்கிறார்கள் அல்லது உணர்த்துகிறார்கள்.
ஹோட்டல்களில் பணியாற்றும் சர்வர்களைப் பற்றி புதுமைப்பித்தன் சின்னஞ்சிறு கதை ஒன்றைச் சிக்கனமாக எழுதியிருப்பார். இயந்திரமாக இருந்து இடையில் மனிதனாகும் கணங்களைச் சுருக்கமாகச் சொல்லியிருப்பார்.
அம்மாதிரி நேரடி அனுபவத்தில் எத்தனை அனுபவங்கள்?
சென்னைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது, தங்கியிருந்த திருவல்லிக்கேணியைச் சுற்றிலும் மெஸ்கள். அவற்றின் தனிச் சுவையறிந்து எனக்கு அறிமுகப்படுத்தியவர் மூத்த பத்திரிகையாளரான சின்னக்குத்தூசி.
“என்ன.. சௌக்கியமா இருக்கீங்களா?’’
– சின்னக்குத்தூசி சில மெஸ்ஸூக்குள் நுழைந்ததுமே துவங்குகிற விசாரிப்புகள், கவனிப்பில் இன்னும் பரிமளிக்கும்.
“இன்னைக்கு வத்தல் குழம்பு கன கச்சிதமா இருக்கு.. புளிப்பு நாக்கிலே ஒட்டிக்கிற மாதிரி இருக்கு’’ – சரியாக வத்தல் குழம்பை சர்வர் பரிமாறி ஒரு வாய் எடுத்துச் சாப்பிட்டதும், அதன் ருசி மாறாமல் சொல்வார் குத்தூசி.
பரிமாறுகிறவருக்கு முகமெல்லாம் மலர்ந்திருக்கும். வதக்கிய பருப்பிலான துவையலை வைத்ததும், இன்னொரு ‘கமெண்ட்டுக்கு’க் கூடுதல் ஒரு கரண்டி துவையல் இடம் பெயரும்.
“வரட்டுங்களா?’’
– பரிமாறுகிறவரிடம் அக்கறையாகச் சொல்லிவிட்டு, ஹோட்டலை விட்டு வந்து சாலையில் நடக்க ஆரம்பிக்கும்போது சொல்வார் குத்தூசி.
“பரிமாறுவங்க எல்லாம் மனுஷங்க தானே! ஒரு நாளைக்கு எத்தனை பேரைப் பார்க்கிறாங்க.. பரிமார்றாங்க.. சோத்துச்சட்டியோட சூட்டையும், கனத்தையும் தாங்கிப் பரிமார்றது லேசில்லை.. அவங்களைச் சொந்தக்காரங்க மாதிரி நினைச்சுப் பேசுங்க.. அவங்க பரிமாறுவதிலும் அது தெரியும்’’ – எளிய சூத்திரத்தைப்போலச் சொல்லிக் கொடுத்தார் சின்னக்குத்தூசி.
நண்பர் பிரபஞ்சனும், நானும் திருவல்லிக்கேணியிலுள்ள சில மெஸ்களுக்குப் போகும்போதும், இதே மாதிரிப் பேசுவார் பிரபஞ்சன். அவருக்கென்று தனிக்கவனிப்பு. தனி உபசரிப்பு எல்லாம் நிறைந்திருக்கும்.
“பாருங்க.. நம்ம இலையிலே காய்கறி காலியானதும் மறு ரவுண்ட் வரும்.. பாருங்க’’ – பிரபஞ்சன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, எங்களுக்கு முன்னிருக்கிற வாழையிலை நிறையும் மறுபடியும். வெளிவரும்போது, சில சமயங்களில் கை மறைவாக ‘டிப்ஸ்’ கொடுத்துவிட்டு வருவார்.
வெளியே வந்து மெஸ்ஸூக்கு அருகில் இருக்கிற வெற்றிலை பாக்குக் கடையில் சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தபடி “யார் யார் நம்ம பசியை ஆத்துறாங்களோ அவங்களைக் கையெடுத்துக் கும்பிடலாம், காசு கொடுத்தாலும்’’ என்று கடைசி வரியை அழுத்தம் கொடுத்துச் சொல்வார் பிரபஞ்சன்.
புது ஐநூறு நோட்டுகள் அறிமுகமான நேரம். சென்னை. ராஜ அண்ணாமலைபுரத்தில் உள்ள ஹோட்டல். மாலை நேரத்தில் நானும், நண்பர் ஒருவரும் டிபன் சாப்பிட்டுவிட்டு, பில் வந்ததும் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து வைத்தேன். நகர்ந்தார் சர்வர்.
போன சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.
“சார்.. ரெண்டு ஐநூறு ரூபா ஒட்டிக்கிட்டி இருந்திருக்கு.. இந்தாங்க சார்’’ திருப்பித் தந்தார் மீதிப்பணத்தை.
“பரவால்லேப்பா.. திருப்பிக் கொடுத்துருக்கீங்க.. எல்லோரும் அப்படி இருக்க மாட்டாங்கப்பா’’ – சொல்லி, ஐம்பது ரூபாயை நண்பர் டிப்ஸாகக் கொடுத்ததும், இளைஞரான அந்த சர்வர் பவ்யமாகச் சொன்னார்.
“வேணாம் சார்.. அப்படி எந்தப் பணமும் நமக்கு வரவேண்டியதில்லை சார்.. இவ்வளவு டிப்ஸூம் நீங்க அதுக்காக கொடுக்க வேணாம்.. பத்து ரூபா போதும் சார்..’’
திருப்பி நாற்பது ரூபாய்களைத் தட்டில் வைத்தார் சர்வரான அந்த இளைஞர்.
சாமானியர்கள் எப்படி எல்லாம் கற்றுத்தருகிறார்கள்?”
*
நன்றி: அந்திமழை இதழ்