இலக்கிய ஆர்வலர்களின் உள்ளத்தில் இடம்பெற்ற சொல்லின் செல்வர்!

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை நினைவு நாள் (25. 04. 1961)

பேரா.ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றுவதில் வல்லவராக விளங்கி மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்களின் உள்ளத்தில் இடம்பெற்ற பெருமைக்குரியவர்.

திருநெல்வேலியில் சைவப்பற்றுடைய பெருமக்களிடையே தோன்றிக் கம்பனின் பெருங்காப்பியத்தில் பெரும் புலமைபெற்று விளங்கியவர்.

அறிஞர் அண்ணாவுடன் கம்பராமாயணத்தின் காப்பியச் சிறப்புகளை எடுத்துரைத்து உரையாற்றியவர்.

விபுலானந்த அடிகளார், பண்டிதமணியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட பெருமக்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்.

இவர் சிலப்பதிகாரத்திலும் நல்ல புலமை பெற்றவர். தமிழ்ப் பேராசிரியர்களுள் தனித்துச் சுட்டத்தக்கவராக விளங்கிய இவரின் தமிழ் வாழ்க்கை தமிழர்களால் நினைவுகூரப்பட வேண்டிய ஒன்றாகும்.

ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கைக் சுவடுகள்:

ராசவல்லிபுரம் பிறவிப்பெருமாள் பிள்ளை – சொர்ணத்தம்மாள் ஆகியோரின் மகனாக 1896 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2 ஆம் நாள் சேதுப்பிள்ளை பிறந்தார்.

நெல்லை புனித சேவியர் பள்ளி, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் பயின்றவர். பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

பணிபுரிந்தபடியே சென்னையில் சட்டம் பயின்றவர். நெல்லையில் நகரமன்றத் தலைவராக விளங்கியவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

மாணவர்களுக்கு இவர்தம் வகுப்பு இனிமை சேர்ப்பதாக இருக்கும். 1930 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களின் பணி ஓய்வுக்குப் பிறகு ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய படியே பல தொடர்ப் பொழிவுகளை நிகழ்த்தியவர். இவர் பேச்சுகள் நூல்வடிவில் வந்த சிறப்பிற்குரியன.

தொடர்ப் பொழிவுகளுள் சில:

சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் மூன்றாண்டுகள் கம்பராமாயணச் சொற்பொழிவு.

சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் மூன்றாண்டுகள் சிலப்பதிகார வகுப்பு.
தங்கச்சாலை தமிழ் மன்றத்தில் ஐந்தாண்டுகள் (வாரம் ஒருநாள்) திருக்குறள் விளக்கம்

கந்தகோட்டத்து மண்டபத்தில் ஐந்தாண்டுகள் கந்தபுராண விரிவுரை.

இவர்தம் பேச்சாற்றலைப் போற்றும் வகையில் 1950 ஆம் ஆண்டு தருமை ஆதீனம் “சொல்லின் செல்வர்” என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தது.

பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை 25.4.1961ல் 65 வயதில் இயற்கை எய்தினார்.

இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் தமிழ்க் கொடை:

தமிழ்நாட்டு நவமணிகள் (1926)
திருவள்ளுவர் நூல்நயம் (1926)
சிலப்பதிகார விளக்கம் (1926)
வீரமாநகர் (1932)
கால்டுவெல் ஐயர் சரிதம் (1936)
கந்தபுராணத் திரட்டு (1944)
வேலும் வில்லும் (1944)
தமிழ் விருந்து (1945)
கிறிஸ்துவத் தமிழ்த்தொண்டர் (1946)
தமிழகம் ஊரும் பேரும் (1946)
திருக்காவலூர்க் கோயில் (1947)
தமிழ்வீரம் (1947)
தமிழின்பம் (1948)
கடற்கரையிலே (1950)
வழிவழி வள்ளுவர் (1953)
Words and their Significance (1953
வேலின்வெற்றி (1954)
Thirukkural – Ellis Commentary (1955)
பாரதியார் இன்கவித்திரட்டு (1957) பதிப்புநூல்
செஞ்சொற் கவிக்கோவை (1957) பதிப்புநூல்
Dravidian Comparative Vocabulary, Vol 1, (1959)
தமிழகம் அலையும் கலையும் (1958)
தமிழ்க்கவிதைக் களஞ்சியம் (1960) பதிப்பு நூல்
ஆற்றங்கரையினிலே (1961)
Common Dravidian Proverbs (1961)

நன்றி: முகநூல் பதிவு

You might also like