கரிசல் எழுத்தாளரான கி.ராஜ நாராயணன் அவர்களை கவுரவ ஆசிரியராகக் கொண்டு வழக்கறிஞரும் எழுத்தாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களால் துவங்கப்பட்டு, நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் கதைசொல்லி இதழின் 38-வது காலாண்டிதழ் தகுந்த வடிவமைப்புடனும் கூடுதல் பக்கங்களுடன் சிறுகைதைகள், கட்டுரைகள், அனுபவங்கள் என மிகச்சிறப்பாக வெளிவந்திருக்கிறது.
இதில் கி.ரா. கைப்பட எழுதிய அனுபவக் கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் எழுத்து வடிவம் இதோ:
****
பக்கத்து ஊர்ல ஒரு நாட்டு வைத்தியர் இருந்தார். ரொம்ப வயசாளி. பார்த்தால் அவரும் ஒரு சீக்காளி போலத்தான் இருப்பார்.
இங்கிலீசு வைத்தியர்கள் இப்பவெல்லாம் ரொம்பத் துட்டு கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தடுமம் புடிச்சிருக்குன்னு போனாக் கூட எல்லாப் பரிசோதனைகளும் செஞ்சே ஆகணும் என்று சொல்லுகிறார்கள்.
ஒரு முழு நீளத்துக்கு மருந்து, மாத்திரைப் பட்டியல் எழுதி தந்துவிடுகிறார்கள். காட்டை வித்து, வீட்ட வித்தெல்லாம் வைத்தியம் பார்க்க வேண்டியதிருக்கு.
என்னோட நண்பர் ஒருத்தர் இந்த இங்கிலீசு வைத்தியத்துலபோயி நொம்பலப் பட்டு, ஒரு நா எங்கிட்டெ யோசனைக்கு வந்தார்.
பக்கத்து ஊரு நாட்டு வைத்தியரிட்டே போகலாமா என்று கேட்டார். எனக்கு என்ன சொல்றதுன்னூட்டேத் தெரியலை.
போயிப் பாரேம் என்று சொன்னேம். எனக்கு அவரு பழக்கமில்லெ என்றார்.
எனக்கும் அவரைத் தெரியாது என்றேன்.
ஒண்டியாப் போறதுக்கு யோசனையா இருக்கு.
நீ என்னெ பொண்ணு கேட்கவா போறெ என்றேன்!
ரொம்பத் தயங்கினார்.
அந்த வைத்தியர் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து, “சரீ அவரு “புளிப்“பையும் தான் பார்த்துருவோமே என்று தோன்றிவிட்டது.
இன்னைக்குத் தெக்க சூலம், நாளைக்குப் போகலாமா என்று கேட்டேன்.
சூலமாவது வேல்க்கம்பாவது, இன்னைக்குச் சாய்ந்தரம் அங்கெ இருக்கணும் என்றார்.
அவருடைய நோய்ப்பாடு அப்படி இருக்கும் போலிருக்கு என்று நினைத்து, சரீ போயிருவோம் என்றேன்.
மத்தியானக் கஞ்சி குடித்துவிட்டு, வெத்திலையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டோம்.
அந்த ஊரு மந்தையடியிலேயே ஒரு வேப்பந்தோப்புக்குள்ளெ அவருடைய குச்சில். அதுலதாம் அவரோட இருப்பு. எப்பப் பார்த்தாலும் ஒரு நாலுபேரு இருப்பாங்க, வெத்திலைச் செல்லத்தைப் பக்கத்துல வச்சிக்கிட்டும், வெத்திலை உரல்ல பாக்கு இடிச்சுக் கிட்டும் அத்தனை பேரும் வயசாலிகள் தாம்.
கலகல்பாய் பேசி சிரிச்சுக்கிட்டே கதைகள் சொல்லிக் கொண்டும், பேச்சுக்குப் பேச்சு சொலங்கள் சொல்லிக் கொண்டும், அவர்களைப் பார்த்தவர்கள், யாரும் அவர்கள் நோயாளிகள் என்று சொல்லமாட்டார்கள். நோயாளி என்று சொல்ல வேண்டும் என்றால் வைத்தியரைத் தான் சொல்லணும்!
நாங்கள் போனதும் எங்களை வைத்தியர் வரச்சொன்னார். கையை நீட்டியதும் கை பார்த்தார். இங்கிலீசு டாக்டர்களைப் போல, என்ன செய்யுது என்று நாட்டு வைத்தியர்கள் கேட்பதில்லை. நம்ம உடம்புக்குள் என்ன செய்கிறது என்று அவர்தானெ பார்த்துச் சொல்லணும்!
இரண்டு கைகளிலும் நாடி பார்த்தார். புல்லாங்குழல் வாசிப்பவர்கள் போல ஒரு விரல் தூக்கி, மறுவிரல் என்பது போலெல்லாம் பார்த்தார்.
வாத, பித்த, சிலேட்டும நிலைகள் எப்படி எப்படி இருக்கு என்று சொன்னார். இரண்டு நாள் இரண்டு வேளை பச்சிலை போதும் என்றார்.
அவர் வீட்டைச் சுற்றிலும் விதவிதமான பச்சிலைச் செடிகள், கொடிகள், மரங்கள் இருந்தன.
வா பச்சிலை தாறேம் என்று நண்பரைக் கூட்டிக்கொண்டு போனார். அவர்கள் வரும்வரை நான் அந்த தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே போனபோது, அந்த ஊர் கீதாரி நாயக்கர் வருவது தெரிந்து அவரை எதிர்கொண்டேன்.
என்னைப் பார்த்ததும் அவர், “வாங்க வாங்க” என்று மரியாதை தெரிவித்தார் (இது கிராமத்து வணக்கம்).
கையில் தொறட்டிக்கம்பும் இடதுபுஜத்தில் நான்காக மடித்துப் போட்டுக் கொண்டுள்ள உல்லன் போர்வையுமாக இருந்தார்.
வந்த விஷயத்தைச் சொன்னேன். பேச்சு நீண்டபோது ஒரு சந்தேகம் கேட்டேன்.
ஏன் நாட்டு வைத்தியர்கள் (பெரும்பாலும்) பணம் வாங்குவதில்லை?
அப்படி ஒன்றுமே வாங்கிக் கொள்வதில்லை என்றும் சொல்ல முடியாது. பணத்துக்குப் பதிலாக நமது நோயை வாங்கிக் கொண்டு சுகத்தைத் தருகிறார்கள் என்றார்.
எப்பேர்பட்ட வாசகம் இது!
கீதாரி நாயக்கர் போன பிறகு, வைத்தியர் தந்த பச்சிலையோடு நண்பர் வந்தார்.
இறங்குபொழுதில், வெள்ளாட்டம் பாலில் நாலு சொட்டு-பச்சிலைச் சொட்டுவிட்டு குடிக்கணும். உப்பு ஆகாது. பத்தியம் இவ்வளவுதான்.
நோய் குறைந்து கொண்டே வந்தது நண்பருக்கு.
எல்லாம் நம்ப முடியாத உண்மையாகத் தெரிகிறது.