தமிழ்நாட்டில் தற்போது ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் ஊடக விவாதங்களிலும் அதிகமாக அடிபடுகிற ஒரு சொல்லாக்கம் – கூட்டணி ஆட்சி.
தமிழகத்தில் 1967-ல் திமுக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதிருந்தே சுதந்திரா கட்சி உட்பட தங்களுடைய கொள்கையிலிருந்து முழுக்க மாறுபட்ட கட்சியையெல்லாம் இணைத்துக் கொண்டு, வலுவானக் கூட்டணியாக தேர்தலைச் சந்தித்தது. வெற்றியும் பெற்றது.
ஆனால், அப்போதிருந்தே கூட்டணியில் மற்றக் கட்சிகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, கூட்டணி ஆட்சியில் பங்கு என்பது என்கின்ற பேச்சு எழவில்லை.
இவ்வளவுக்கும் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்கிற கொள்கை முழக்கத்தை முன்வைத்த திமுக மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டாட்சி என்கின்ற முழக்கத்தைத் தப்பித்தவறிக் கூட முன்வைக்கவில்லை.
ஆனால், பக்கத்தில் உள்ள பாண்டிச்சேரியில் அடுத்தடுத்துக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய நேரிட்டதும் ஜனநாயகத்தின் விரிவாக்கமாகவேப் பார்க்கப்பட்டது.
அத்தகைய கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தபோது, அதிமுகவும் அதில் பங்கேற்று இருக்கிறது. திமுகவும் பங்கேற்று இருக்கிறது.
இப்படி மத்தியில் கூட்டணி ஆட்சியில் பொறுப்பேற்று அதில், முக்கிய இலாகாக்களையும் கேட்டுப் பெற்ற தமிழகத்தின் இரண்டு திராவிடக் கட்சிகளுமே, அதே கூட்டணி ஆட்சி பார்முலாவைத் தாங்கள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது கடைபிடிக்கவில்லை.
இடையில், போதுமான தொகுதி எண்ணிக்கை பெறாத நிலையிலேயே திமுக கூட்டணிக் கட்சிகளின் துணையோடு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தபோதும், கூட்டணி ஆட்சி அமையுமா என்கின்ற பேச்சு எழுந்தபோதும், திமுக அதற்கு செவி சாய்க்கவில்லை.
மைனாரிட்டி அரசு என்று எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா அடிக்கடி பேசிய பேச்சு ஒன்றுதான் மிச்சம்.
அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான த.பாண்டியன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டுமென்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.இளங்கோவனும் கூட்டணி ஆட்சிப் பற்றி பேசியிருக்கிறார்.
அண்மையில், விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் இருந்து கூட்டணி ஆட்சி குறித்த பேச்சுக்கள் கசிந்தன.
அந்த அமைப்பிலிருந்தவரான ஆதவ் அர்ஜுனா விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கூட்டணி ஆட்சியில் பங்கு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி வெளிப்படையாக பேசிய பிறகு, அந்தக் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
அடுத்து களத்திற்கு வந்தவரான த.வெ.க தலைவர் விஜய், விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாட்டிலேயே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கின்ற வசீகர முழக்கத்தை மறுபடியும் ஒரு சிவகாசி பட்டாசைப் போல கொளுத்திப் போட்டார்.
அத்துடன் தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சிகளுக்கு உரிய பங்கு கூட்டணி ஆட்சியில் இருக்கும் என்பதையும் முன்வைத்த போது, அத்தகைய பேச்சுக்கள் ஊடகங்களுக்கு ‘செமையான’ தீனி ஆகியது.
காட்சி ஊடகங்களில் தினமும் மாலையில் கருத்தைப் பொழியும் பேச்சாளர்கள் விஜயின் கூட்டணிப் பேச்சு குறித்து ஒரு வாரத்திற்கு மேல் பேசி அலசி, ஆராய்ந்து பார்க்கும் பார்வையாளர்கள் முகத்தில் விசிறி அடித்தார்கள்.
தற்போது, காங்கிரசிலும் கவி காமு செரிஃபின் மகன் பேரில் அடிக்கப்பட்ட ஒரு போஸ்டரில், தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை ‘வருங்கால துணை முதல்வர்’ என்று அன்போடு விளிக்கப்பட்டிருந்தார்.
அதற்கும் செல்வப்பெருந்தகை தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியதாயிற்று.
மிகச் சமீபத்தில் அமித்ஷா தமிழகத்திற்கு வந்துபோன பிறகு, கூட்டணிப் பற்றி அமித்ஷா பேசிய பேச்சு, கூட்டணி ஆட்சி பற்றிய பேச்சாக ஊடகங்களால் திரிக்கப்பட்டு விட்டதாகப் புலம்பினார் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி.
வழக்கமாக, அரசியல் பற்றி கருத்துக் கூறும் ‘கருத்து கந்தசாமி’கள் 2026 தேர்தலுக்குப் பின்பு வாக்காளர்களின் முடிவை அனுசரித்துக் கூட்டணி ஆட்சியா அல்லது தனித்த ஆட்சியா என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று பட்டிமன்றத்தில் நடுவர் தீர்ப்பை ஒத்திவைத்ததைப் போல 2026 தேர்தல் வரை ஒத்தி வைத்துள்ளார்கள்.
அதுவரைக்கும் கூட்டணி ஆட்சிக் குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து எதோ அலைவரிசையில் இங்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.
– யூகி